அவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்!

அன்புநிறை வித்யாசாகருக்கு,                                                28-11-2011. குவைத்

ப்போதுமே என்னிடம் ஒரு பழக்கம் உண்டு. எந்தப் புத்தகத்தையும் எடுத்தவுடன் அணிந்துரையோ, படைப்பாளியின் ‘என்னுரையோ’ படிக்காமல் நேரடியாக அந்தப் படைப்பிற்குள் சென்றுவிடுவேன். காரணம் அந்த படைப்பு எந்தக் கோணத்தில் என்னை ஈர்க்கிறதென்பதை நான் முழுதாக அறிய வேண்டும். அடுத்தவர் கருத்தினைப் படித்துவி;ட்டால் அவர்களின் மனவோட்டத்தோடு நாமும் சென்றுவிட சிலநேரம் வாய்ப்பு அமைந்துவிடும். அதைத் தடுக்கத்தான்….அதேபோல அப் புத்தகத்தை ஆரம்பத்திலிருந்துதான் படிக்கும் வழக்கமும் கொண்டவள். ஆனால் அன்றேனா… புத்தகத்தைப் பிரித்ததும்.. ‘இந்த வெள்ளைத் தாளில் நிறைய எழுதப்பட்டிருப்பதைப் புரிந்த என் தோழிக்கு…’ என்று தாங்கள் எழுதி ஒப்பிட்டுக் கொடுத்த வரிகளைப் படித்து….மனதிலதைப் பதித்தபின்.. ஏதோ ஒரு பக்கத்தைப் புரட்ட 89 ஆம் பக்கத்தில் நின்றது என் கண்கள்…..

‘எதுவுமே எழுதாத வெள்ளைத்தாளில்
நம் அத்தனை நினைவுகளையும் –
ஒருசொட்டுக் கண்ணீரால் நனைத்து அனுப்புகிறேன்..’

எத்தனை சொல்லிவிட்டது இந்த வரிகள்…. ஒரு புத்தகத்தின் முழுக் கணத்தையும் இவ்வரிகள் அப்படியே சுமந்து நிற்கிறதை புரிந்தவளாய்த் தொடர்கிறேன்..

கவிதைகளைப் படிக்க ஆரம்பித்தேன். சாலையில் நடந்துகொண்டிருக்கும் போது திடீரென்று மேகம் கருத்து உதட்டின்மேல் விழும் முதல் மழைத்துளி உடலெங்கும் பரவி நம்மைப் பரவசமடையச் செய்வது போன்ற காதல்;’ காதலிக்கும் அத்தனை பேருக்கும் வாய்க்காதுதான்…ஆனால்..

‘மழையில் நனைந்த எனக்கு
உன் பார்வையில் குடைபிடித்த நினைவுகளெல்லாம்….’
என்ற வரிகளையெல்லாம் படிக்கும் போது உங்கள் மேல் பட்ட அந்த மழைத்துளியின் ஈரப்பதத்தை அறிய முடிந்தது.

‘நீ அழுகையை மறைத்து
சிரித்துக் கடந்தப் பொழுதும்
நான் சிரித்துக் கொண்டே
உள்ளே அழுத பிரிவின் வலிகளும்…’

சொல்லில் புரியவைக்கமுடியா வலிகள் உள்மனதில் துளையிட்டுக்கொண்டு ஏதேதோ நினைவுகளுக்குள் இழுத்துச் செல்கிறது வித்யா.

‘தூக்கத்திலும் எனைத் துளைத்து எழுப்பிய
அந்தக் கணங்கள்
எந்தப் பதிவிலும் நாம் இல்லாமல் போனதை
யாரிடம் நாம் சொல்லியழப் போகிறோம்? ‘

இப்படியொரு படைப்பை படித்து எழுதுமொரு பேறு எனக்கல்லவா கிடைத்தது வித்யா…., இதை எழுதக் கொடுக்கத் தக இத்தனை ஆழமான இலக்கிய நம்பிக்கையினை என்மீதுக் கொண்டிருக்கிறீர்களே என்று எண்ணி எத்தனை பெருமை என் மனதிற்குள் தாண்டவமாடியது தெரியுமா?

‘வெறும் மதமும் இனமும்
வேறென்ற காரணம் தவிர்த்து
வேறெந்தப் பழியும் ஏற்காத நம் பிரிவு…
நம் இறக்காத உயிர்ப்பும்
யாருக்கும் தெரியாத நம் கதறலும்.. ‘ போன்ற வரிகளைப் படிக்கப் படிக்க –

‘இனம்’ புரியாத மகிழ்வை அள்ளி அள்ளித் தரும் காதலை ‘இனம்’ என்ற கொடிய விஷம் வேறறுத்துப் போட்டும்’ இன்னும் எத்தனைக் காலத்திற்குத் தான்; இந்தச் சமூகம் சாபங்களை சேர்த்துக்கொண்டிருக்கப் போகிறதோ தெரியவில்லை.

பூத்துக் குலுங்கிக் கொண்டேயிருக்கும் செடியின் வேரில் வெண்ணீர் ஊற்றும் குரூரமனம் கொண்ட இச்சமூகம் என்று திருந்திடுமோ என்று நொந்துகொண்டேதான் மற்ற கவிதைகளைப் படிக்க ஆரம்பித்தேன்.

‘மனதில் என்ன வைத்திருக்கிறாய் என
உனக்குத் தெரிந்தால் போதும்… ‘

என ஆரம்பித்த முதல் கவிதையைத் தொடர்ந்து ..

‘தெருவில் நடந்து போகும் நம்மைப் பார்ப்பவர்கள்
வெறுமனே யாரோ நடந்து போவதாய்
நினைத்துக் கொள்கிறார்கள்…. ஆனால்
உனக்கும் எனக்கும் தானே தெரியும்
நீயும் நானும் யார் யாரென்று?’

ஹப்பா… என்ன ஒரு ஆழமான வார்த்தை வித்யா… தாங்கள் காதலைத்தானிதில் சொல்லியுள்ளீர்கள்…. ஆனால் நான் ரசித்ததென்னவோ காதலை மீpறித் துருத்தி நிற்கும் தங்கள் நுண்புலம். மிகச் சதாரண விஷயம் தான் ஆனால் எவ்வளவு உண்மையிது? அருமை!

‘…இல்லையென்று சொல்லிவிட்டு
திரும்பிப் பார்க்கையில் நம்பமுடியவில்லை உன் பொய்யை’

‘…சலித்தாலும் –
கால்கள் உன் பின்னேயும்
மனசு உன் முன்னயும்தான் கிடக்கிறது’

‘காதல் ஆறாம் பூதம்…’

போன்ற வரிகளிளெல்லாம் பருவமாற்றத்து பறைசாற்றல்களாக காதல் தெரிந்தாலும் பின்னே செல்லும் கால்களும் முன்னே செல்லும் மனமும் உண்மைக் காதலின் உணர்வின் ஏக்கத்தை அருமையாய் வெளிப்படுத்துகிறது.

‘நானும் நீயும் பேசிக்கொள்வதை
காற்று நம்மிடம் சொல்வதேயில்லை… போகட்டும்
நாம் ஒன்றாகச் சேரும் தினத்தில்
கட்டி இறுக்கிய நம் நெருக்கத்தினால்
காற்றினை வெப்பம் கொள்ளச் செய்வோம்’

அடடா…. காற்றைப் பழிவாங்கும் கவிஞரே… சிரித்தேவிட்டேன் போங்கள்… தூதுசொல்லாத காற்றுக்கு தண்டனை உங்கள் இறுக்கத்தால் அதைச் சூடேற்றி அந்தக் காற்றை வெறுப்பேற்றுவதா? … நன்றாகத் தான் உள்ளது புதுமையான உங்கள் கோபம்…. ஆனால்… அதையும் மீறி அவ்வரிகளில் நான் கண்டது… நாம் நிச்சயம் ஒன்றாக சேர்ந்துவிடுவோமென்ற அந்தக் காதலன் தன் காதலின்மேல் கொண்ட நம்பிக்கையைத் தான்!

‘நாளை ஜாதியை நாய்நரி மதிக்காது
மனிதன் மனிதனாய் ஓர்நாள்
மதிக்கப்படுவான் அன்று –
நீயும் நானும் காதலர்களாய்ப் பேசப்படுவோம்’ – என்ற வரிகளைப் படிக்கும்போது

ஜாதியே நீ சீக்கிரம் மரித்துவிடேன்….
காதலர்களையும் காதலையும்
கொன்று குவித்து –
இன்னும் எத்தனைகாலத்திற்குத்தான்
எக்காளமிட்டுக்கொண்டிருக்கப் போகிறாய்….? என்று நானெழுதிய ஒரு கவிதையை இங்கு நினைக்க வைத்துவிட்டது..

அடுத்தக் கவிதையில் –

சுடிதார் புடவையாகவும்
ஆசைகள் மெலிந்த உடலாகவும்…
என் மனைவியிடம் பேசிக்கொண்டிருக்கிறாய்…

யாரையோ பார்ப்பதுபோல்
உனக்குள்ளிருந்து உயிர்பெற்று
உன்னையே பார்த்துக்கொண்டிருக்கிறேன்..நான்’ இந்தக் கவிதையைப் படிக்கும்போது

களங்கமற்ற காதலர்களால் மட்டுமே பிரிந்த பின்னும் தத்தம் துணையோடு நின்று இப்படி பேசிட முடியும என்பதையும்இ. எத்தனைக் காதலர்கள் இந்த வேதனையைச் சுமந்துக் கொண்டே இன்னும் புன்னகைத்துக் கொண்டிருக்கிறார்கள்.. என்பதையும் கண நேரம் நினைக்கத்தான் செய்கிறது மனம்.

காதலின் ஆழம் இந்தக் கவிதையில் இன்னொரு கோணத்தில் வெளிப்படுகிறது… பாருங்கள் –

‘இத்தனை எஸ்.எம்.எஸ்ஸா அனுப்புவாய்?
ஓவ்வொன்றாய் அழித்துக்கொண்டேவர
அது ஒவ்வொன்றாய் என்னை ஆட்கொண்டேப் போகிறதே.. ‘

உண்மைதான்… எஸ்.எம்.எஸ் மட்டுமல்ல காதலின் நினைவுகளை அழித்துவிடுவோமென்று எத்தனை முயற்சி எடுத்தாலும் … அது பூதாகரமாக வளர்ந்துகொண்டேதானேயிருக்கும்?

ஐம்பூதங்கள் தவிர்த்து யாருக்குமே தெரியாத அந்தக் காதல் குறிப்புக்களை

‘யாருமே பார்க்க வாய்ப்பில்லாத காதல்…
என்றென்றிற்கும் இல்லாமல் போனதை…
வருடங்கள் பல தொலைத்த பின்பும்
மனது நினைக்கத் தான் செய்கிறது..’ என்ற கவிதை நிறைத்தே வைத்துள்ளது வித்யா..

தவிரஇ இந்தக் கவிதையில் காதலியின் அழகில் தாங்கள் கொள்ளும் பெருமிதமும், படிப்படியாயக் காதலை வளர்த்த விதமும், வாய்விட்டுக் கூப்பிடாமலே திரும்பிப் பார்த்த ஒற்றுமையும்… படித்துக்கொண்டு வருகையிலே தன் இளமைப்பருவத்தில் ஒவ்வொருவரும் கடந்துவந்த காதலின் நினைவுகளில் மூழ்கி நனைந்து எழுந்துவரச் செய்கிறீர்கள்.

அடுத்ததாக ‘இப்படி ஒருமுறை காதலித்துப் பாருங்க’ என்ற கவிதையில்

‘வயசுக்கும் மனசுக்கும் கண்ணு திறந்திருந்தா
வருவதுதான் காதல்’

‘….கைகோர்த்து நடந்து –
அவன் தோளின் மேல் சாய்ந்துக் கொள்கையில்
ஏதோ இதமாகவும் மனதுக்குத்
தேவையானதாகவும்தான் இருந்தது’

‘…..புல்வெளியின் ஈரம் சிலிர்ப்பேற்படுத்தியதும்
பனிமழையில் நனைந்ததும் காதல்தானோ..?’ – இதுபோன்ற வரிகளெல்லாம்

மெல்லிய பூவிரியும் சப்தம் ஊன்றிக் கேட்பவருக்குமட்டுமே புரியும்படி உணர்த்துபவையாயிருக்கின்றது.

மேலும், நான் மிக ரசித்த கவிதைகளிலொன்று ….

‘காதலில் தோல்வி என்கிறார்கள்
தற்கொலை என்கிறார்கள்
தனிக்குடித்தனம் என்கிறார்கள்
ஏதோ கொடுப்பதும் வாங்குவதும்தான் காதல் என்றால்…
நீயம் நானும் காதலிப்பதாய் சொல்லவே சொல்லாதே…’

என்ன ஒரு உன்னதமான காதலிது? காமம் தலைதூக்கி காதலின் மகத்துவம் ஒருபுறம் மரணித்துக் கொண்டிருக்கையில் காதலின் புனிதம் போற்றப்படும் இதுபோன்ற உயர்ந்த இதயங்களினால் தான் காதலின் உயிர்ப்பு இன்னும் காக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

‘நீயின்றி வாழும் வாழ்க்கையை
என் பாவத்தின் சம்பளம் என்று கொள்ளலாம்’ –என்ற வரிகள்

‘உன்னைப்பற்றி –
என் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும்
சொன்ன அளவுகூட உன்னிடம் சொல்ல முடியாமல் போனதே…’ –என்ற வரிகள்

‘குடும்பம் ஆயிடுச்சி,
குழந்தைகள் இருக்கு..
காதலை மறந்துடு..’ என்று காதல் என்ன என்பதே புரியாமல் சொல்லுபவர்களுக்கு மத்தியில் தோற்றுப்போன உங்களின் காதலுக்காக சந்தோஷப்படுபவள் நானாக மட்டுமே இருக்க முடியும். உன்னை விட்டுப் போன அந்தக் காதலியை ‘நீடூழி வாழிய!’ ஏன்று வாழ்த்துபவளும் நான்மட்டுமாகவே இருக்கமுடியும். உங்கள் காதலைப் பிரித்த ஜாதி, மதமென்னும் கறைபடிந்த இச்சமூகத்தை ஒரே ஒருமுறை மன்னிப்பதில் தவறில்லை என்று எண்ணுபவளும் நான் ஒருவளாகவே இருப்பேனென எண்ணுகிறேன் இல்லையென்றால் உயிர் உருகும் வார்த்தைகளைக் கொண்ட இக் கவிதைகள் எங்களுக்குக் கிடைத்திருக்குமா?

அதனால் உயிருள்ள கடைசி மணித்துளிவரை அந்தக் காதல் உயிர்ப்புடன்’; உங்களோடு ஒட்டிக்கொண்டே இருக்கட்டும். ‘அவளின்றி நீங்கள்… அவளால் உயிர்த்துக்கொண்டேயிருப்பீர்கள் …’ என்பதை ஒவ்வொரு கவிதையும் சப்தமிட்டே சொல்கிறது.

‘இழந்த காதல் பெற்ற நூற்குழந்தைக்கு வாழ்த்துக்கள் வித்யா…!’ இதுபோன்று இன்னுமின்னும் நீவிர் பெறப் போகும் கவிக்குழந்தைகளுக்கு மனநிறைவுடன் வாழ்த்து சொல்பவளாய்…..

லதாராணி பூங்காவனம்
செயலாளர் : பெரியார் பன்னாட்டு மய்யம். குவைத் கிளை

4 Responses to அவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்!

  1. பிங்குபாக்: புத்தக விமர்சனம் – அவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்! | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்

  2. வித்யாசாகர் சொல்கிறார்:

    வணக்கம், தங்களின் வேண்டுதலுக்கு நன்றி. பல வேலைகளின் இடர்பாட்டில் கவனித்திருக்கவில்லை. மன்னியுங்கள். சென்னை ஹிக்கீம்பாதம்ஸ் சென்று வாங்கலாம். இணைய வழியே டிஸ்கவரி பேலஸ், மெரீனா புக் ஹவுஸ், நியு புக் லேன்ட், நூலுலகம் இணையம் போன்ற பல வழியே பெறலாம் இல்லாத பட்சத்தில் வாட்சப் மூலம் இந்த என்னை தொடர்பு கொள்ளவும். 9840502376. நன்றி. வாழ்க..

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s