உடைந்த கடவுள்!!

உடைந்த கடவுள்
பு
த்தகத்தின் பெயர் : உடைந்த கடவுள் (கவிதைத் தொகுப்பு)
சிரியர் : வித்யாசாகர்
ய்வு : கவிதாயினி திருமதி. லதாராணி பூங்காவனம்

பேரன்புடையீர் வணக்கம்,

ஒரு சில நாட்களில் என் மகிழ்ச்சி எல்லையில்லாமல் சென்றுவிடும். காரணம் எதாவது ஒரு புதிய புத்தகம் கிடைத்துவிட்டால் ஏறக்குறைய நான் பித்தாகவே ஆகிவிடுவதுண்டு. அப்படித்தான் இன்றும்…. கவிஞர் திரு. வித்யாசாகர் எழுதி சமீபத்தில் வெளிவந்த “உடைந்த கடவுள்” புத்தகத்தை படிக்கப் படிக்க அங்கனம் ஆனேன். சாதாரணமான ஒரு புன்னகையுடன் மட்டுமே அவரிடமிருந்து அப்புத்தகத்தைப் பெற்றுவந்த நான் வாங்கிக்கொண்டு… வீடு வந்து சேர்வதற்குள் 47 கவிதைகளைப் படித்துவிட்டேன். அதாவது 47 கருத்துக்களை என் மூளையிடம் ஒப்படைத்துவிட்டேன். வீடுவந்தவுடன், மிச்ச கவிதைகளை சொச்சமின்றி படித்து மெச்சினேன்….

அக்கவிதைகளைப் பற்றிச் சொல்வதெனில், சில கவிதைகள் நம்மிடம் பேசுகின்றன.. சில என்னைச் சிந்திக்க வைத்தன… சில என்னை இவ்வுலக நடப்பெண்ணி சிரிக்கவும் வைத்தது. உண்மையில் இன்று என்னிடம் இப்புத்தகம் நிறைய பேசியது… என்னை நிறைய சிந்திக்கவைத்தது, என் கண்ணீரை சிந்தவும் வைத்து’ என் உணர்வுகளைச் சிலிர்க்கவும் வைத்தது…

ஒவ்வொருக் கவிதையும்… வசிக்க வாசிக்க மணித்துளிகளை உடைத்துக் கொண்டு வெளிவந்துவிடுகிறது. அத்தகு, அவர் சொன்னதுபோலவே –

//ஆனால் புரிவதற்கும்
அர்த்தப்படவும் நாட்களும்
வருடங்களும் தேவைப்படலாம் //

ஆழமான கருத்துக்களை அசாதாரணமாகச் சொல்லி சிந்தையில் ஏற்றிவிடும் இவரா இப்படிச் சொல்வது ? என்று எண்ணினேன். உலக அசைவுகள் ஒவ்வொன்றையும் ஊன்றிக் கவனித்து உணர்வுகளை உள்வாங்கி எழுத்துக்களின் கழுத்தை வளைத்து ஏட்டினில் எளிதாகப் பூட்டிவைத்த இந்தச் சாட்டையிலுள்ள ஒவ்வொரு நூலும் தெளிவாகவே நம் அறிவுக்குப் புரியவும் கண்ணுக்குத் தெரியவுமேத் தந்துள்ளார்.

மொழிமீது கவிஞர் வைத்த விழியை.. இந்தக் கவிதைகள்தான் அடித்துச் சொல்கிறதே …

//புதைந்து கிடந்ததை
தோண்டிஎடுத்தவன்
தானே செய்ததாகச் சொன்னான் – செம்மொழி//

//கணக்கெழுதும் அண்ணாச்சிக்கும்
வாங்குவோருக்கும்
“கிலோ” தமிழ் என்றே தெரியப்பட்டுள்ளது//

மனித நேயத்தை அவர் மனம் சுமப்பதை இக்கவிதைகளின் மூலம் படிப்போர் அறிய முடிகிறது
//தெருவோரத்தில் நிறைய வாகனங்கள்
வரிசையாய் நிற்கிறது…
எத்தனையோ பேரின் அவசரம் தெரிந்தோ தெரியாமலோ ..//

//நிறைய வீடுகளில்
நிறைய அறைகள்
புழக்கமின்றியே கிடக்கிறது… //

//அந்த அறைகளுக்கு
எந்தக் கவலையுமில்லை….

தெருவில் உண்டு உணர்ந்து புணர்ந்து
ஒரு தலைமுறையைக் கடக்கும் ஒரு
சாமானியனுக்குத் தேவை
அந்த நன்கு சுவர்களே… // என்று சமுதாய சிந்தனையோடு அவர் படும் ஆதங்கம் எத்தனை எத்தனையோ அவரின் கவிதைகளில் காண முடிகிறது ….

மேலும் உதாரணத்திற்கு –

//சிறுவர்களின் வியர்வையில் தான்
நசுக்கப் படுகிறது நம்
தேசத்தின் முன்னேற்றம்//

//நிறைய மண் மாளிகையாகமலும்
நிறைய பஞ்சுகள் நெய்யப்படாமலும்
நிறைய மனிதர்கள் பக்குவப்படாமலும்
விதியென்று சுற்றுகிறது பூமி // …… என்ற கவிதைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்…..

அதுபோல் – விதவை என்ற ஒற்றை வார்த்தைப் போர்வை அவள் உணர்வுகளின் மூச்சடைத்துவிடுவதை உணர்ந்து சொல்லி யுள்ளார்… பாருங்கள் –

// வெற்று நெற்றியின் கோடி ஆசையை
விதவை என்ற –
ஒற்றை வார்த்தை மறைத்துக் கொள்கிறது… //

உண்மையில் தொண்டையை அடைத்த உமிழ்நீரை விழுங்கிவிட்டுத்தான் அடுத்த கவிதைக்குள் கண்புகுத்தினேன் நான்!

செவ்வாயில் நீரையும் நிலாவில் காற்றையும் கணக்கிட்டுக்கொண்டிருக்கும் காலத்திலும் கண்மூடித்தனமான மூடத்தனத்தை இன்னும் நம் மூளை சுமந்து கொண்டுதானே இருக்கிறது….. அந்த மூடத்தனத்தை என்று நாம் முடக்கிப் போடுவோமோ தெரியவில்லையே என்ற ஆதங்கத்துடன் வெளிப்படும் கவிஞரின் கோபாவேசமும் மிக நன்றாகப் பல கவிதைகளில் புலப்படுகிறது…., அதை கீழ்வரும் கவிதைகள் செம்மையுறக் காட்டியும் விடுகிறது –

//சுத்திப் போடறதை விட சுலபம்
அதெல்லாம்
ஒண்ணுமே யில்லைன்னு நம்பறது //

// சிந்திக்காமல் வாங்கினவன் வீட்டில்
கழுதைப் படமும்
நெற்றியில் முட்டாள் பட்டமும்///

// கால நேர சம்பிரதாயம் பார்ப்பவன் வீட்டிலும்
பிணங்கள் விழாமலில்லை… //

// அங்கிருந்தே நூல் பிடிங்க
மொத்த மூடத்தனத்துக்கும்
பாடையை நாமே கட்டலாம் // மிக அழுத்தமான வரிகள் வித்யா

// இதெல்லாம் வேண்டாம்னு
சாமியே வந்து சொன்னாக்கூட
சாமியையே முட்டாள் என்று சொல்லும்
புத்திசாலிகள்தாம் நாம்.. // என்கிறார். இன்னும் எத்தனை எத்தனையோ….
இப்படி, சின்ன சின்ன சில்லறை மூடத்தனங்கள் இன்றும் நம்மைப் பெரிய அளவில் ஆட்டிப் படைப்பதை அர்த்தத்தோடு சொல்லி இருக்கிறார் நிறையக் கவிதைகளில்….

//மரணம் மட்டும் நிகழாதிருக்குமானால்
நிகழாது இருந்திருந்தால்
மனிதன் கொல்லும் முதல் நபர்
கடவுளாகக் கூட இருக்கலாம்… // அடப்பாவிகளே… மனிதர்களுக்கும் கடவுளுக்கும் உள்ள பிணைப்பே இவ்வளவுதானே என நையாண்டி செய்ததுபோல் உள்ளது இக்கவிதை… சிரித்து மகிழ்ந்தேன்….இதைப் படிக்கும்போது…

//எத்தனையோ வாகனங்கள்….
தரையைக் கிழிக்கும் வண்ணம் சீறிப் பாய்கிறது…
யாருக்கு என்ன அவசரமோ…… …………………………..
இருப்பினும் –
‘போறவன் அப்படியே சாவறானா பாரு’ என நிறையப்பேர் மனசு
நினைக்காமலில்லையே..//

எவ்வளவு உண்மை இது… எத்தனையோ முறை எத்தனையோப் பேரை நானும் இப்படித் திட்டியிருக்கிறேனே, இதுபோல் ஒரு தருணமினி வருமெனில் ஒரு நிமிடம் நான் இக்கவிதையினை நினைத்துப் பார்த்து அவசரப்படாமல் … அவர்களின் அவசரம் என்னவாக இருக்குமோ என நினைத்து… திட்டாமல் வழி விட்டே செல்வோமே என நினைக்கவைத்துவிட்டார் கவிஞர் வித்யாசாகர்..

இன்னொரு கவிதையில் // கோவில் உண்டியலில் போடும் பணத்தைப் படிக்கச் செல்லும் பாலகனின் கிழிந்த சீருடையை மாற்றச் சொல்லி அவனின் தாயின் கையில் திணித்த // அந்த நல்லெண்ணம்… கவிஞரின் உள்ளத்தை முழுமையாகப் படிக்கச்செய்தது.

//நூறு ரூபாய்க்குத் துணிவாங்கி
நூற்றி ஐம்பதிற்கு சட்டை தைத்து….
தினம் இரண்டு ரூபாயில் பெட்டிப் போட்டு
ஒரு ரூபாயில் பட்டினி கிடக்கும் ஏழைகளை நினைக்காததில்
உடைகிறது கடவுள் // என்கிறார். கட வுள் உடைந்தானோ இல்லையோ என் கண்ணீர் இக்கவிதை வரியில் உடைந்தது…

// தெருவோர தூசிகளில் தூளி கட்டி
கிழிந்த புடவையின் வழியே அம்மா வருவாளா…
எனப் பார்க்கும் பச்சிளங் குழந்தையின்
ஏக்கத்தின் தடங்கள்
தன் அடையாளங்களை
நல்ல தார் சாலையாக மட்டுமே காட்டிக்கொள்கிறது.. // இந்தக் கவிதையைப் படிக்கும்போது கவிஞர் திரு. காசி ஆனந்தனின் –

நீ செருப்பின் அழகைப் பார்க்கிறாய்…
நான் அதைத் தைத்தவன் கையைப் பார்க்கிறேன்” என்ற கவிதை வரி நினைவுக்கு வருகிறது…

ஆக… பலவித நறுமண மலர்களைச் சேர்த்துச் செய்த இக்கவிதைப்பூங் கொத்தினை… சிறிது சிறிதாகக் கொத்தித் தின்ற ஒரு சிறிய பறவைப் போல் நானும் இப்புத்தகத்தை படித்து மன நிறைவு பெற்று மகிழ்ந்தேன்….

மொத்தத்தில் கவிக்கோ திரு. அப்துல்ரகுமானின் ஆலாபனையும், ஈழத்துப் புரட்சிக் கவி திரு. காசி ஆனந்தனின் “நறுக்குகளும்” சேர்ந்து இரண்டிலுமாய் அப்பெருங் கவிஞர்கள் வெளிப்படுத்திய உணர்ச்சிக்கும் எழுச்சிக்கும் சற்றும் குறைவின்றி கவிஞர் வித்யாசாகரின் கவிதைகளும் சமுதாயத்தை நோக்கித் தாக்குகின்றது….

இத்தனைப் பண்பட்ட இப்படைப்பாளியின் வரிகளில் சமுதாயத்தைப் பண்படுத்த முனையும் இவரின் எண்ணங்களும் எழுத்துக்களும் இத் தமிழுலகில் என்றென்றும் நிலைப் பெற்றிருக்க வாழ்த்துகிறேன்!

அன்புடன்,
கவிதாயினி
திருமதி. லதாராணி பூங்காவனம்
செயலாளர்: பெரியார் பன்னாட்டு மையம், குவைத் கிளை

5 Responses to உடைந்த கடவுள்!!

  1. பிங்குபாக்: உடைந்த கடவுள் – உடைத்துப் பார்த்த விமர்சனம் – கவிதாயினி லதாராணி!! | வித்யாசாகரின் எழுத்து பய

  2. Umah thevi சொல்கிறார்:

    கவிதாயினி திருமதி. லதாராணி பூங்காவனம், அவர்களுக்கு பாராட்டுக்கள், மிக அருமையான ஆய்வுரை வழங்கி உள்ளார்.
    இப்பொழுதே புத்தகத்தை பெற்று படிக்க வேண்டும் போல் தோணுகிறது.

    மிக அற்புதமான வரைபடம். ஆழமாக கவனித்தால் , பல பல தத்துவங்களை சொல்லும் போல் தெரிகிறது.
    புத்தகத்தின் தலைப்பே சிந்திக்க தூண்டுகிறது.

    மேலும் இறைவன் அருளால் இளைய சமூகத்தின் சிந்தனையை தூண்டி, நல் வழியில் ஒரு மாற்றத்தை உருவாக்க உங்கள் எழுத்து பயணம்
    மேலும் மேலும் உயர் நிலை அடைய என் மனப்பூர்வமான நல் வாழ்துக்களும், பாராட்டுக்களும்!

    Like

  3. Tamil சொல்கிறார்:

    அன்பிற்கினிய நண்பருக்கு வணக்கம்,

    தாங்கள் நலமா?

    சமீபத்தில் எந்தப் பதிவும் இல்லை தங்களுடைய பதிலை எதிர்நோக்கி.

    Liked by 1 person

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      வணக்கம் வாழிய நலம். நிறைய படைப்புகள் இனி தொடர்ந்து வெளிவரும். இடையே அம்மாவின் மரணம் தொடர் இழப்புகள் பெருவருத்தத்தை தருகிறது. மீண்டு வருவோம். படைப்புக்களாய் நிறைவோம். நன்றி. வணக்கம்.

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s