நூல்: பிரிவுக்குப் பின் (கவிதைகள்)
ஆசிரியர் : வித்யாசாகர்
ஆய்வு : முல்லைஅமுதன்
வெளியீடு : முகில் பதிப்பகம்
இன்றைய நாளில் அதிகமாக கவிதை எழுதுபவர்களில் வித்யாசகரும் ஒருவர். நாளொரு கவிதையென என் பார்வைக்கு வருகையில் என் சோர்வு, இலக்கியவாதிகள் மீதான அபிமானத்தை அதிகமாக்குகிறது.
வாழ்வியலுக்கான விடைதேட புறப்பட்ட பல இளைஞர்களில் இவரும் ஒருவர். இந்திய மண்ணில் பிறந்து குவைத்தில் கடமையாற்றும் இவரின் எழுத்துக்கள் சமூகத்தின் அத்தனை பக்கங்களையும் பாடி நிற்கின்றன.
நாவல், சிறுகதை,விமர்சனம், கவிதை என விரிகிறது இவரின் உலகம். மத்திய கிழக்குப் பிராந்தியம் முன்னை போல் இல்லை. இலக்கியம் செய்பவர்கள் அடிக்கடி கூடும் இடமாகவும் மாறிவருவது ஆரோக்கியமாகவும் தென்படுகிறது.
//என் பேருந்து- எனக்காக உடனே
நின்றுவிடவில்லை:
அகண்ட பாலைவனம் நோக்கி-
சென்று கொண்டிருக்கிறது..//
//வாழ்வின்
அத்தனைத்
துயரத்திற்கு
மத்தியிலும்
எப்படி இனிக்கிறதோ
உன் முத்தம்..//
இதுபோன்ற, கவிதைகளில் கேட்கப்படும் இவரது கேள்விகள் நமக்குள்ளும் தொக்கி நிற்கிறது.
‘பாலைவனத்தில் பொதி சுமக்கும் ஒட்டகங்கள் நாங்கள்’ என நான் முன்பு எழுதிய கவிதையே இங்கெனக்கு நினைவில் வருகிறது…
பாலைவனத்து சூடு ஒருபுறம்..
குடும்ப உறவுகளைப் பிரிந்து வந்த சோகம்..
மேய்ப்பர்களின் ஆதிக்க கூப்பாடுகளுக்கு மத்தியில் நமது வேலை…
பிரமச்சாரிகளின் ஆட்டுத்தொழுவம் போன்றதொரு தங்குமிடம்..
பல்லின மக்களுடன் நம்மை நாமே சரி செய்தபடி வாழ்கின்ற வாழ்வு.. ஊரிலிருப்பவர்களின் வாழ்வு கருதி; மாடாய் உழைக்கின்ற கொடுமையிலும் சின்னதாய் சுகம்; நண்பர்கள், கவிதை, திரைப்படம் என நகர்கின்ற வாழ்க்கையில் தத்துவவாதியாய் நிமிர்கின்ற மனிதனாய் அல்லது தோற்றுப்போன ஏதோ ஒன்றிற்காய் முடிந்து போகிற நிகழ்விற்கு மத்தியில் வாழ்ந்து பார்த்தால் தெரியும், வலி என்றால் என்னவென்று. அப்போது படியுங்கள் இவ்வாறான கவிதைகளை. மலர்ப்படுக்கையல்ல வாழ்க்கை’ என்பது புரியும்.
சிறகுகள் இருந்தும் சிறை கைதிகளாய், கனவுத்தொட்டில், வீழ்ந்தது போதும் வாழ்ந்து காட்டு, திறக்கபட்ட கதவு, விற்கப்படும் நிலாக்கள், எத்தனயோ பொய்கள் என நூல்களின் பட்டியல் நீள்கின்றன. இப்போது நம் கைக்குக் கிடைத்திருப்பது ‘பிரிவுக்குப் பின்’ கவிதைத் தொகுதியாகும். 2010 மார்ச்சில் வெளிவந்துள்ள இந் நூல் பலரையும் பேசவைத்துள்ளது எனலாம்
இவரின் ஈழம் பற்றிய பார்வை; ஈழத்தவரையும் இவரை நட்புடன் ஏற்றுக்கொண்டிருக்கிறது. கவிதைகளில் முரண்பாடுகள் வரலாம். இன்றும் மரபு, புதுக்கவிதை பற்றிய பட்டிமன்றம் நிகழத்தான் செய்கிறது. புதுக்கவிதைகளிலும் பரிட்சாத்த முயற்சிகள் நடத்தபட்டே வருகிறது.நவினத்துவம், பின் நவினத்துவம் பேசுவோரும் உண்டு. இங்கு எந்த மரபுக்கும் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளாமல் சிந்தனை சிறகடிப்புக்கேற்ப தன் வளத்தை, களத்தை நகர்த்திச் செல்கிறார் இக்கவிஞர்.
தன் மனத்தில் உதித்ததை தன் எழுத்தின் வன்மையால் அதன் ஆரோக்கியம் கெடாமல் எழுதுவது வித்யாசாகரின் எழுத்தில் பாராட்டத் தக்க ஒன்று. கவிதை வாசிப்பு நமக்குத் தருகின்ற உற்சாகம் அதிகம். ஒவ்வொரு கவிதைகளையும் நகர்த்திச் செல்கிற முறை அலாதியானது.பார்த்து, கேட்ட செய்திகளை தனக்குத் தெரிந்த வடிவத்தில் எழுதுகிற துணிச்சல் இன்றைய கவிஞர்களுக்கு அதிகம். அங்கு இவரின் அத்து மீறல்களும் நிகழ்ந்துவிடாது.
காதலுக்கு வயசுக் கட்டுப்பாடு எதுவுமில்லை.காதல் மனதின் மெல்லியதான உணர்வு தான் எனினும் அது தருகிற சுகம் அதிகம். வானம் கைகளுக்குள் வந்துவிட்ட நிகழ்வு அங்கு தான் நிகழும். ஆனால் அந்தக் காதல்பிரிவு அல்லது தூரம் அதிகமாகிற போது அதன் வலி மரணத்தை விடக் கொடுமையானது, என்ற, பிரிவு தந்த சோகமே இக்கவிஞரால் ‘பிரிவுக்குப் பின்’ எனும் தலைப்பில் தொகுப்பாகியுள்ளது.
//உன் அலமாரியில்
அடுக்கி வைத்திருந்த
உன்-
விட்டுச் சென்ற சுடிதார்களை
பார்க்கையில் தெரிந்தது
உன்னை விட்டிருப்பது
எத்தனை கடினமென்று…//
//ஐயோ கடிதம்
அனுப்பக் கூட கையில்
பணமில்லையே- என நீ
அழுத அழுகையில்,
கடிதமில்லாமலே
புரிந்து விட்டது-நீ
எழுதித் தீர்த்திடாத உன்
அத்தனை பாரங்களும்//
வாசிக்கையில் மனமும் பாரமாகிறது. எத்தனை பிரிவுகள்…எத்தனை மௌன அழுகைகள். கவிஞனுக்கு அழுகையை எழுத முடிகிறது. காதலுடன் ஒன்றிப்போய் அழுகையுடன் கழியும் வாழ்நாட்களை நம் தேசத்தின் ஒவ்வொரு தெருவும் பேசும் என்பதே உண்மை.
//இதயம் –
வலிக்கிறதென்பதே
தெரியாமக் தான் நீ
கடந்து கொண்டிருக்கிறாய்
என்னை..,
கடை தூரம் சென்று
திரும்பிப் பார்க்கையில்-
ஒருவேளை நான்
இருக்கலாம்:
இல்லாமலும் போகலாம்…//
வலிக்காத காதல் பற்றி யாராவது சொல்வார்களா? மௌனமே பதிலாகும் என்றாலும் இங்கு கவிதைகள் அனைத்தும் அதிகமாய் பேசுகின்றன. அதிகமான வாசிப்பும், அதிகமாக எழுதுவதாலும் கவிதை இவருக்கு கை கொடுத்திருக்கிறது.
//இப்பொழுதெல்லம்
நான்-
தனியாகத் தான்-
இருக்கிறேன்;
ஆம்! நீயில்லாத
உலகத்தோடு நான்
பேசுவதேயில்லை…//
// உன்-
கால் கொலுசுகளும்-
கை வளையல்களும்
…சொல்லிடாத
சேதி கேட்டும்,
சொன்ன
இரவுகளை நினைத்தும் தான்
நகர்கிறது..
வாழ்வின் இந்த
அர்த்தமற்ற நாட்கள்//
நாவல், சிறுகதைகளின் வாசிப்பு, எழுத்துப் பயிற்சிதான் இவரை தன் அனுபவங்களை எழுத வைத்திருகிறது கவிதை வடிவில். வாலி,வைரமுத்து போன்ற கவிஞர்கள் கூட கவிதை வடிவிலான காவியங்களை எழுகிறார்கள். அவ்வழியே , இவரையும் வாழ்த்தத்தான் வேண்டும்.
//ஆசைப்பட்டு- ஆசைப்பட்டு
பட்டு..பட்டு..பட்டுப் போன
கனவுகளெத்தனை…ஒன்றாயிரண்டா?
அத்தனையும் வாழ்ந்து தீர்க்க
இன்னும் ஜென்மமெத்தனை பிடிக்குமோ –
பிடிக்கட்டுமேடி..
இதோ மரணக்கயிறு வந்து
கழுத்தை இருக்கும் கடைசி இறுக்கத்தின்
அழுத்தம் வரை-
உனக்காய் நானும்,
எனக்காய் நீயும் மட்டுமே வாழ்ந்தது
வாழ்க்கையடி; வாழ்க்கையடி..//
என ஒரு வரலாற்றுச் சோகத்தையே சொல்லி செல்கிறார்.
வரலாற்றுக் காலத்திலிருந்து காதல் சோகத்தில் தான் முடிந்ததாய் காவியங்கள்சொல்லி வந்திருக்கின்றன. இன்றைய திரைப்படங்களிலும் காதல்’ ரணங்கள் பற்றிச் சொல்லியே செல்கின்றன. இங்கு வித்தியாசகரும் தனது அல்லது பிறரின் அனுபவம் குழைத்துத் இரு இதயத்தின் காதலின் பிரிவையே ரணமாய் தந்திருக்கிறார்.
//பெட்டி தூக்கிய பறவைகளுக்கும்,
கண்ணீர் சுமந்த கூண்டுகிளிகளுக்கும்
சமர்ப்பணம்// என சமர்ப்பித்து, தன் கவிதைகளை நாவல் போல அல்லது காவியம் போல நகர்த்திச் செல்வது பாராட்டத்தக்கது.
120 பக்கங்களில் முகில் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூல் அழகிய அட்டைப்படம், வடிவமைப்பு என தரம் குறையாமல்‘ அதிக கவனம் எடுத்துச் செய்யப் பட்டதாகவே உண்ர்கிறேன்.
ஈழம் சார்ந்து எழுதிய கவிதைகளை வாசகருக்குத் தருவதன் ஊடாக இன்னும் நட்பை இறுக்கிக் கொள்ளமுடியும். கூடவே நமது கிராமங்களுக்குள் வலிக்கட்டும்.
வாழ்த்துக்கள்.
முல்லை அமுதன்
07/08/2010.
——————————————————————————————–
கிடைக்குமிடம் : தமிழலை ஊடக உலகம் (9786218777) , முகில் பதிப்பகம் (96000 00952),
வித்யா வணக்கம்
மனம் நிறைந்த கவிதை மிக மிக மிக அருமை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது உங்களின் புதிய படைப்புகள் தொடர வாழ்த்துக்கள்..
LikeLike
தங்களின் அன்பான வார்த்தையின் ஆசீர்வாதம் புரிகிறது.. அது என்னை இன்னும் மிகையாய் வளர்க்கும் என்றே நம்புகிறேன் பெரு அன்பிற்குரிய சகோதரி.
மிக்க நன்றிகளும்… வணக்கமும்!
LikeLike
வணக்கம் டியர் வித்யா ,உங்களின் சிறகிருந்தும் சிறை பறவைகளாய் படித்த பிறகு உங்களின் ரசிகனாகி விட்டேன் , வாழ்துக்கள் தோழா உங்களை ஒரு நாள் சந்திக்க வேண்டும் நன்றி . அன்புடன் மகேந்திரன்
LikeLike
மிக்க நன்றியும் வணக்கமும் மகேந்திரன். இன்னும் இதர இருபதற்கும் மேற்பட்ட நம் படைப்புக்கள் உள்ளன. இங்கும் அவைகள் பாஹீலில் எம்.எம். வீடியோவில் இடிக்கும். படித்துவிட்டு கருத்து பதியுங்கள். மிக்க வாழ்த்தும் அன்பும்!
LikeLike