வாயிருந்தும் ஊமை நான்..

நூல் : வாயிருந்தும் ஊமை நான் (சிறுகதைகள்)
நூல் ஆசிரியர் : வித்தியாசாகர்
நூல் ஆய்வு : அகில்

னிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு ஆற்றல் மறைந்து இருக்கிறது. தனக்குள் இருக்கும் அவ்வாற்றலை அவன் கண்டுபிடித்துவிட்டான் என்றால் தொடர்ந்து வெற்றிக்கனிகளை பறித்தபடி இருப்பான். சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆற்றல்கள் உடையவர்களாக விளங்குவார்கள். அந்த வகையில் நண்பர் வித்தியாசாகரிடம் இத்தகைய ஆற்றல்கள் நிரம்பியிருக்கிறது. கவிதை, கட்டுரை மட்டுமல்லாது சிறுகதைத் துறையிலும் அவருடைய ஆளுமையை நான் அவதானித்து வருகிறேன். இந்தச் சிறுவயதிலேயே பன்முகப்பட்ட ஆளுமை உடைய ஒருவராக அவரை அவதானிக்க முடிகிறது. வித்தியாசாகரின் ‘வாயிருந்தும் ஊமை நான்’ சிறுகதைத் தொகுப்புப்பில் மொத்தம் 14 கதைகள் இடம்பெறுகின்றன.

பாலைவன நாடாகிய குவைத்தில் இருந்துகொண்டு, தமிழ் மீது கொண்ட அபார காதலினால் இலக்கியம் படைப்பவர்களில் இவரும் ஒருவர். தமிழ்ஆதர்ஸ்.கொம்மிற்கு தினமும் ஒரு கவிதையாவது அவர் அனுப்பத் தவறுவது இல்லை. இவரது விடாமுயற்சியையும், இலக்கிய ஆர்வத்தையும் பார்த்து நான் பலமுறை வியந்திருக்கிறேன்.

ஒரு படைப்பின் வெற்றி என்பது அப்படைப்பை வாசித்து பல நாட்கள் சென்றபின்பும் அப்படைப்பு ஏற்படுத்திய தாக்கம் வாசகனின் மனதை விட்டகலாது இருக்கவேண்டும். அத்தகைய தன்மையுடைய படைப்பாக இத்தொகுப்பில் இடம்பெறகின்ற சில கதைகளை நான் பார்க்கிறேன்.

கற்பனைக் கதைகளை விட அன்றாடம் நாம் காணுகின்ற யதார்த்த வாழ்க்கையை படம் பிடித்துக்காட்டுவதாக கதைகள் அமையுமிடத்து, வாசகர்களின் மனதில் அக்கதைகள் நீங்காத இடத்தைப் பிடிக்கும். நண்பர் வித்தியாசாகர் தான் கண்டு, அனுபவித்த சம்பவங்களையே கதையாக வடித்திருக்கிறார். இவரது இந்தப் படைப்பின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம்.

இத்தொகுப்பில் உள்ள எல்லாக்கதைகளுமே மிகவும் அருமையாக இருக்கின்றன. பொதுவில் மனிதநேயம், மனிதவிழுமியங்கள் பற்றிப் பேசுகின்றன. பொருட்செறிவும், சொற்சுருக்கமும் கொண்டவை. சின்னச் சின்ன வசனங்களைக் கொண்டு கதைகளை நகர்த்திச்செல்கிறார்.

எல்லாக் கதைகளைப் பற்றியும் எடுத்துச் சொல்வதை விட என் மனதைக் கவர்ந்த கதைகளில் மூன்று கதைகளை மட்டும் எடுத்துக்கொண்டு அவைபற்றிய எனது பார்வையை எழுதலாம் என்று நினைக்கிறேன்.

இத்தொகுப்பில் இடம்பெறும் முதலாவது கதை வாயிருந்தும் ஊமை நான். தொகுப்பின் தலைப்பாகவும் இக்கதைத் தலைப்பே இடம்பெறுகிறது. கதை பாலைவன நாடாகிய குவைத்தில் நடக்கிறது. எமது இளைஞர்கள் பலர் பொருளாதாரப் பிரச்சனைகள் காரணமாக வேலை தேடி பல்வேறு நாடுகளிலும் தொழில்புரிந்து வருகிறார்கள். திரைகடல் ஓடித் திரவியம் தேடும் நோக்கில் எத்தனையோ நாடுகளில் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்.

உணர்வுகளை பரிமாறிக்கொள்ளவும், செய்திகளை பகிர்ந்துகொள்ளவும் இன்றியமையாதது மொழி. நாம் எந்த நாட்டில் வாழ்கிறோமோ அந்த நாட்டில் புழங்குகின்ற மொழிகளை முடிந்தளவு தெரிந்து வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். இல்லையென்றால் துன்பந்தான் என்கிறது இந்தக் கதை. அரபு மொழி தெரியாத ஒரு தமிழ் இளைஞன், மொழிதெரியாத ஒரே காரணத்தினால் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியாமல் போகின்ற துயரச் சம்பவத்தை விபரிக்கிறது இந்தக் கதை. அலட்டலில்லாமல் கதையை இரத்தினச் சுருக்கமாக கதையைச் சொல்லியிருக்கிறார்.

ஒரு கூடைப்பாவம் என்ற கதை பழம் விற்கும் ஒரு வயோதிப மாதுவின் கதை. இந்தியாவின் தெருக்களில் இப்படி எத்தனையோ கூடைப் பாவங்களை தினமும் தெருக்களில் காணலாம். அவர்களின் கூடைகளுக்குள்இன்னும் எத்தனை கதைகள் ஒளிந்து கிடக்கிறதோ என சிந்திக்க வைக்கிறது கதை. பழம் விற்க வரும் கிழவிக்கும், வாங்குபவருக்கும் இடையிலான உரையாடல் மூலம் கதை நகர்த்தப்படுகிறது. பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயோதிபர்களின் ஒட்டுமொத்த வலியையும் நெஞ்சில் ஆழப்பதித்து விடுகிறது. கதையை வாசித்து முடித்தபின்பு இதயத்தின் மூலையில் ஒரு வலி. வித்தியாசகரின் சமூகப்பார்வைக்கு இந்தக்கதை ஒரு நல்ல எடுத்துக்காட்டு. சாதாரண பழக்கூடைக்காரியின் பின்னே ஒளிந்திருக்கும் சோகமும், அதனை ஒட்டிய நியாயமும் சிந்திக்க வைக்கிறது. இவர்கள் மீது சமூகம் காட்ட வேண்டிய கரிசனையை கதை அழகாக எடுத்துக்கூறுகிறது.

‘ஆலவிருட்சம்’ என்ற கதை குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய கதை. தகப்பன், தாய், மகன் என்ற மூன்றே பாத்திரங்கள். நல்ல கதைக்கரு. அழகான நடை. சின்னச் சின்ன வசனங்களால் ஆழமான கருத்தை பதியவைக்கிறார். படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு கூலித்தொழிலுக்கு சென்று தன் குடும்பத்திற்கு உதவ எண்ணும் ஒரு சிறுவனை, அவனுடைய தந்தையார் அவன் கூலித்தொழிலுக்குச் சென்று உழைத்து வரும் சிறிய வருமானத்தை விட அவன் நன்றாகப் படித்து உயர் நிலையை அடையவேண்டும் என்ற உண்மையை மகனுடைய மனதில் பதியவைக்கிறார். சிறுவர்களை தொழிலுக்கு அனுப்பும் பெற்றோருக்கு இது சாட்டை அடி.

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு பிரச்சனையைப் பற்றிப் பேசுகிறது. எல்லாக் கதைகளிலும் அடிநாதமாக அன்பு, இரக்கம், மனிதநேயம் போன்ற உயர்ந்த பண்புகள் பேசப்படுகின்றன. மனதுக்கு இதம் தரும், புத்துணர்வு தரும், புத்திசொல்லும் கதைகளாக உள்ளன. இவருடைய எழுத்துக்கள் இளையோர் மத்தியில் பரவி நல்ல இளைய சமுதாயத்தை உருவாக்கும் வல்லமை கொண்டவை. வித்தியாசாகரின் கதைகள் அனைவரும் படித்துப் பயனுற வேண்டும்.

விலை : 40 உருபா
வெளியீடு : மணிமேகலை பிரசுரம் (24342926)
கிடைக்குமிடம் : முகில் பதிப்பகம் (96000 00952)

2 Responses to வாயிருந்தும் ஊமை நான்..

  1. அ.சபரிநாதன் சொல்கிறார்:

    புத்தகத்தின் தலைப்பே என்னை இந்த புத்தகத்தை வாசிக்க தூண்டியது

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s