இரண்டு மீன்கள் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டே ஆழ்கடல் நோக்கி சென்றது.
அந்த இரண்டு மீன்களில் பெரிய மீன் சொன்னது…
“ஏய் அங்க நிறைய பூச்சிங்க எல்லாம் தின்ன கிடைக்கும் வா அங்கே போகலாம்”
“ஐய.. நீ பூச்சிங்கள்லாம் தின்னுவியா??” சின்ன மீன் கேட்டது.
“ஏன் உனக்கு இறைச்சி பிடிக்காதா ” பெரிய மீன் கேட்டது
“பிடிச்சா எல்லாத்தையும் தின்னுட்றதா.. ” சின்ன மீன் சலித்துக்
கொண்டது.
“கொன்றால் பாவம் தின்றால் போகும்” பெரிய மீன் சொன்னது.
“யார் மனுஷன் சொன்னானா..? சின்ன மீன் கேட்டது.
“எப்படிகண்டு பிடிச்ச…” பெரிய மீன் ஆச்சர்யப் பட்டது
“இப்படியெல்லாம் அசிங்கமா மனுஷன் தான் சிந்திப்பான்” சின்ன மீன் சிரித்தது.
“இவரு பெரிய ராஜா மீனு; இவருக்கு மட்டும் எல்லாம் தெரியும்னு நினைப்போ” பெரிய மீன் கோபமுற்றது.
“எனக்கு ஒன்னும் தெரியாது, ஆனா பிற உயிர்களை கொண்ணா துடிக்கிதுல்ல; அது தெரியும்” சின்ன மீன் வருத்தப் பட்டது.
“தின்னா துடிக்கும் தான், தாவரம் தின்னா அதுக்கு மட்டும் துடிக்காதா, அதுவும் உயிரு தானே” பெரிய மீன் தன் தவறை கேள்விக்குள் மறைக்கப் பார்த்தது.
“அதுவும் உயிரு தான், ஆனா ஒரு மரத்தை வெட்டினா இன்னொரு மரம் துடிக்குமா? ஒரு காயை பறித்து இரண்டா வெட்டினா; பக்கத்துல இருக்க இன்னொரு காய் வந்து ஐயோ வெட்டாத அது பாவம்னு சொல்லுமா? வெட்டாதேன்னு அழுவுமா?” சின்ன மீன் கேள்வியில் ஜாலம் செய்தது.
“அதலாம் சொல்லும். நமக்குத் தான் அதலாம் புரியறதில்ல, தப்புன்னா எல்லாம் தப்பு தான்” பெரிய மீன் உண்மையும் வீம்புமாய் விளம்பியது.
” அப்போ சரின்னா எல்லாம் சரியா???” சின்ன மீன் விகல்பமாய் கேட்டது.
“வேற என்னவாம்..??” பெரிய மீன் கர்வத்தை கேள்வியில் எழுப்பியது.
“சொல்றேன் கேளு, இயற்கையா எதலாம் இயங்குதோ, ‘அதுக்கெல்லாம் உயிரிருக்கு; எதுக்கெல்லாம் உயிருருக்கோ, ‘அதெல்லாமே நம்மிடம் பேசவும்; நாம் பேசுவதை கேட்கவும் சக்தி கொண்டுதானிருக்கு. ஆனாலும், நாம வாழும் வாழ்க்கை ஒரு சார்பு வாழ்க்கை. தவளை பூச்சியை தின்னும், பாம்பு தவளையை தின்னும், கீறி பாம்பை தின்னும், கீறிய வேற எதனா தின்னும் இப்படி ஒன்ன சார்ந்து ஒன்னு இருக்கு” சின்ன மீன் சமதர்மம் போதிக்க முயற்சித்தது.
“அடி சக்கைனானாம், அப்படி வா வழிக்கு. நானும் அதை தானே சொன்னேன் ‘ஒரு உயிரை தின்னு தான் இன்னொரு உயிர் வாழுது” பெரிய மீன் தன் கேள்விக்கான வட்டத்திலிருந்து வெளி வரவேயில்லை.
“அசடு.. அசடு.. அது மிருக வாழ்க்கை. மிருகங்களுக்கு பாம்புக்கும் பல்லிக்கும் பகுத்தாராய முடியாது, கிடைக்கறத தின்னும். நீ என்ன மிருகமா..? மனுஷன் தானே? உனக்கு ஒரு வரைமுறை வேணாமா..? இருக்கறதெல்லாம் அடிச்சி தின்னா ‘நாளைக்கு மனுஷன் தான் மிஞ்சுவான்;தின்னுவியா???” சின்ன மீன் கேட்டு நிறுத்தியது.
“ஆமா.. ஆளப் பாரேன்.. உனக்கென்னா பெரிய்ய்ய்ய…. மனுசன்னு நினைப்போ…?” பெரிய மீன் கேலிக் கூத்தடிக்க
“சூ.. சூ.. சத்தம் போடாத.., மனுசங்க நாம் பேசுறத கேட்டுன்ருக்காங்க; அதான் கொஞ்சம் கூட்டி சொன்னேன், அங்கே பாரு ஒரு ஆளு வலையை எடுத்து வரான்..” சின்ன மீன் கை காட்ட
“ஐயோ.. அந்த ஆளு வலைய வீசுறான்.. வா ஓடி போலாம்” பெரிய மீன் கூறி வீட்டு சின்ன மீனின் வாள் கடித்து இழுக்க
“ஓடு ஓடு.. சீக்கிரம் ஓடு..” இரண்டு மீன்களும் துள்ளிக் குதித்து ஓடியது. ஒரு மீனவன் நீண்டு விரிந்த வலையை எட்டி வீசினான். வீசிய வலையில் அந்த இரண்டு மீன்களை பார்த்து அங்கே வந்து குவிந்த ‘மீதி அத்தனை மீன்களும் சிக்கிக் கொள்ளுமென யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டோம் தான், ஆனால் சிக்கிக் கொண்டதென்பதே வருத்தமான முடிவு.
(சிக்கிய மீன்களையெல்லாம் கூடை பத்து ரூபாயென விற்று விட்டு, கிடைத்த பணத்தில் அரிசியும் மிளகாயும் புலியும் பருப்பும் வாங்கி மணக்க மணக்க உணவு சமைத்து, சாப்பிட ஒரு வாயெடுத்து வைக்கையில் ‘இந்த ஒரு பிடி சோற்றிற்கு எத்தனை உயிர் பலியானதோ’ என யோசிக்க மனிதனுக்கு தோன்றவில்லையென்றாலும்…… ‘அந்த இரண்டு மீன்களும் பேசிக் கொண்டது கூட கேட்காமல் போனதே நம் சாபம்)
———————————————————————————————————————————————
வித்யாசாகர்