சந்தம் பல கொண்டு உனை
சந்த தமிழ் உண்டு உனை
சந்த கவி தந்து உனை
உயிரற்று போகும் வரை பாட;
சங்கம் பல வெல்லுமுனை
சொந்தம் பல கொண்ட உனை
சங்கின் நிறம் கொண்ட உளம்
நின் புகழுக்கு நிகரென்று பாட;
பிஞ்சு மனம் பொங்கு தமிழ்
வெள்ளை மனம் ஓங்கு தமிழ்
கள்ளமது அற்ற தமிழ்
உயிர் தமிழென்று தமிழென்று பாட;
இப்படி பாட பாட இனிக்கும் தமிழுக்கும்,
சகோதர சகோதரிகளுக்கும், வந்தமர்ந்திருக்கும்
என் உறவுகள் கூடிய இந்த அவைக்குமென் முதல் வணக்கம்!
எழுதுகோல் பிடித்தே தன் கவிதைகளிலும் கதைகளிலும்
தீர்பெழுதிய என் கைகளை பிடித்து அழைத்து வந்து
பட்டிமன்றத்திற்கு நடுவராக்கி இருக்கிறது – நம் உதவும் கைகள் அமைப்பு!
அதிலும் ஐயா திரு ராஜேந்திரன் அவர்களுக்கும்; கவிஞர் முனு.சிவசங்கரன் அவர்களுக்கும் என் மீது அப்படி என்ன கோபமென்று தெரியவில்லை; தலைப்பு கொடுத்திருக்கிறார்கள் பாருங்கள்
இன்னல்களில் முதலில் வருவது நட்பா? உறவா?
உறவு தான்னு சொல்ல இதோ உட்கார்ந்திருக்கிற என் மனைவி செல்லம்மாவும் முகிலும் போதும், நட்புன்னு சொல்ல இந்த குளிரிலும் இங்கு கூடியிருக்கும் நீங்களும் உதவும் கைகள் அமைப்பும் போதும், அதையும் மீறி –
உறவில்ல நட்பு தான்னு – தீர்ப்பு சொன்னா – நாளைக்கு வீட்ல சோறு கிடைக்காது
நட்பில்ல உறவு தான்னா – நம்ம தம்பி பாரி கூட வெளிய வந்து
‘த்தூ’ நீயெல்லாம் ஒரு நண்பனான்னு கேட்டு போவான்..
இப்படியொரு சங்கடமான நிலையில் நம் பட்டிமன்ற கெட்டிக் காரர்கள்
தன் வாதத்தை எத்தனை அழுத்தமாக வைக்கிறார்களென பார்ப்போம் ..
உலக தமிழர்களை வலையில் இணைத்து
தமிழர் உணர்வுகளை நித்தமும் கொடுத்து
கவியில் புதிய சாதனைகளை படைத்து
தொட்டாலே பற்றிக் கொள்ளும் சமூகத் பற்றாளன்
தம்பி தமிழன் மணியன் அவர்களை “இன்னல்களில் முதலில் வருவது –
உறவே” என பேச வந்திருக்கிறார்.
——————————————————
அன்புக்கு இவன் சக்ரவர்த்தி; இப்போதெல்லாம்
பட்டிமன்ற மேடைகளுக்கு கதாநாயகன்;
சிரித்து சிரித்து சிந்திக்க வைக்கும் சிந்தனையாளன்
தமிழர் வரலாற்றை தன் – சட்டை பைக்குள்
வைத்துக் கொள்ளத் துடிக்கும் தம்பி விருதை பாரி அவர்களை
“இன்னல்களில் முதலில் வருவது – நட்பே” என பேச வந்திருக்கிறார்.
————————————————————-
பாட்டுக்கு ஒரு ராணி மோகனை தெரியும்
கவிதைக்கு ஒரு ராணி மோகனை தெரியும்
பட்டிமன்றமென்ன பெருசா;
எனக்கு போட்டியென்ன புதுசா? என நட்பால் நம்
உள்ளம் கவர்ந்த சகோதரி ராணி மோகன் அவர்களை
“இன்னல்களில் முதலில் வருவது – உறவே” என பேச வந்திருக்கிறார்.
——————————————————-
சொல்லி அடிப்பது மேடையின் அலங்காரம்
சொல்லிக் கொடுப்பது பள்ளியின் அலங்காரம்
எண்ணிக் கொடுக்கும் பணங்களை தாண்டி
மாணவப் பிள்ளைகளுக்காய் உழைக்கும் அன்பின் அவதாரம்
ஆசிரியை அனித்தா ஜான்சன் அவர்களை
“இன்னல்களில் முதலில்வருவது – நட்பே” என பேச வந்திருக்கிறார்.
—————————————————–
இப்போ இவுங்கல்லாம் மிக நல்லா பேசிடுவாங்க; ஆனா நாம் பேசுறது தான் பிரச்சனை..
ஒரு குருவி குஞ்சு பசி எடுகுதுன்னு தாய் குருவி கிட்ட போய் அழுதுச்சாம்; அதை கேட்ட தாய் குருவி; ஐயோ குழந்தை பசி தாங்காதேன்னு இங்கையும் அங்கையுமா
ஓடி ஓடி பார்த்துட்டு, எங்கயுமே தீனி கிடைக்காம – கடைசியா தான் –
அமர்ந்திருந்த மரத்துக்குக் கீழே – ஒரு சகோதரி சோறு பொங்கிக் கொண்டிருக்க – வேறு வழி தெரியாம கொதிக்கிற அந்த சோற்றுப் பானையில தலை(ய) விட்டு, வாய் நிறைய
கொதித்த உணவை நிரப்பி வந்துச்சாம், அம்மா வரதப் பார்த்துட்டு குருவி குஞ்சு வந்து வாய பிடுங்க எங்கடா தன் குழந்தைக்கு சுட்டுட போகுதோன்னு அதையும் தன் வாயிலேயே சூடாற்றி கொடுத்து விட்டு; சூடு பொறுக்க முடியாமல் அலகினை தரையில் தேய்த்து தேய்த்து வலி அனுபவித்துக் கொண்டிருந்த அந்த தாய் குருவியை பார்த்து;
அது செய்தது உதவியல்ல தோழர்களே.. அது அதன் கடமையை தான் செய்தது “இன்னல்களில் முதலில் வருவது ஒன்றும் உறவல்ல நட்பே எனப் பேச வருகிறார்; வாருங்கள் தம்பி விருதை பாரி அவர்களே!
———————————————————————————
ரெண்டு தோழிங்க சும்மா காலாற நடந்து தோட்ட வழியா போயின்ருக்காங்க
ஒருத்திய விச பாம்பு ஒன்னு கொத்தி விடுகிறது; அவர் மயங்கி தரையில் வீழ்கிறார்
அருகிலிருக்கும் தோழிக்கு உயிர் பதைக்கிறது, தோழி வலியிளையும் பாம்ப பார்த்த பயத்துளையும் துடிக்கிறா; உடனே ஒரு கயிறெடுத்துக் பாம்பு கொத்தின காலுக்கு மேல கட்டி ரத்தம் உறிஞ்ச பார்க்கிறாள், அப்பா பார்த்து திடீர்னு ஞாபகம் வருது ‘அவளுக்கு இரண்டு பல்லு சொத்தை.
சொத்தை பல்லு உள்ளவங்க விஷம் உறிஞ்ச கூடாது மீறி உறிஞ்சினா எங்க விஷம் தனக்கு எரிடுமொனு ஒரு பயம் வந்துடுச்சி அவளுக்கு. இப்படி பட்ட இன்னல் நேரத்துல கூட சுயநலம் பாருங்க, என்ன பண்இதுன்னு சுத்திமுத்தி பார்த்துட்டு; தூரத்தில் அவளோட தம்பி நிற்பது தெரிய ‘எலேய் தம்பி அக்காவ பாம்பு கடிசிசிடுச்சு ஓடிவான்றா, ஓடிவந்தவன் பாம்பா எங்க கடிச்சிது, எப்போ விசம் உரிஞ்சாச்சானு பதர்றான், அவனே தன் வாய் வைத்து உரிய போக, அந்த தோழி கேட்டா ‘எலேய் உனக்கு சொத்தப் பல்லில்லேதும் இல்லையே? அதற்கு தம்பி சொன்னான் இருந்தா என் உசுரு தானே போகும் போகட்டும்; அக்கா போகக் கூடாதுனான். ஆக, இன்னல்களில் முதலில் வருவது நட்பல்ல தோழர்களே ‘உறவு தானென்று பேச வருகிறார், வாருங்கள் தம்பி தமிழன் மணியன் அவர்களே!
ஒரு நண்பர் ஒரு பெட்டிக்கடை அளவுல ஒரு வட்டிக்கடை திறக்கிறாரு
காலைல கடை திறந்து விளக்கேற்றி மதிய நேரமாக சாப்பிட போகிற அவசரத்தில
காலையில் கடை திறக்கும் போது ஏற்றிவைத்த விளக்கை அணைக்க மறந்துட்ராறு.. அவரோட கெட்ட நேரம் பாருங்க; அதை ஒரு எலி அந்த பக்கமா போகும்போது தட்டிவிட விளக்கு சாய்ந்து திரியும் என்னையும் ஊற்றி பக்கத்தில் வைத்திருந்த சில காகிதங்களும் புத்தகங்களும் எரிந்து சாமி மாடமெரிந்து கடையின் ஒன்னு ஒண்ணா போயி கூரை பற்றிக் கொள்ள; சற்று நேரத்திற்கெல்லாம் வட்டிக் கடை உச்சிவெயில்ல ஜோன்னு எரியுது.
நண்பர் வயித்துல அடிச்சிக்குனு ஓடி வராரு..கதர்றாரு அழுவுறாரு. அக்கம்பக்கத்துல இருக்கிறவங்க ஓடி வந்து தீயணச்சி அவருக்கு ஆறுதலும் சொல்றாங்க, ஒரு மாசம் ஓடியும் போது. வட்டிக்கு வாங்கினவன் சும்மா இருப்பானா ? ஒரே மாதத்துல பணம் போட்டவனெல்லாம் வந்து வாசல்ல நிக்கிறான்.. ஒரு உறவு கார பயலும் அவரோட இன்னல் கண்டு வந்து உதவி செய்யல; அங்கே நண்பர்கள் கூடுகிறார்கள்!
ஆளுக்கொரு பங்கு பணம் போட்டு; மீண்டும் கடை வைத்துக் கொடுத்து; தன் நண்பர்களின் உதவியால் மட்டுமே தன் கடன்களை அடைக்கிறார் இன்னொரு புதிய வாழ்க்கை பெறுகிறார் அந்த நபர்.. ஆக ‘இன்னல்களில் முதலில் வருவது உறவல்ல தோழர்களே நட்பே என பேச வாருங்கள் சகோதரி அனித்தா ஜான்சன் அவர்களே!
ஒரு காதலன் காதலி
காதலனுக்கு பதினெட்டு வயசு
காதலிக்கு பதினஞ்சு வயசு
பன்னிரண்டும் பத்தாவதும் படிக்கும் மாணவர்கள் காதலிக்கிறார்கள்
இந்த விஷயம் வீட்டில் பெற்றோருக்கு தெரிந்து விடுகிறது.
பெற்றோர் இனி கண்டித்து பயனில்லை இவளை பள்ளிக்கு அனுப்பினால் இந்த சின்ன வயதில் யாரையாவது நம்பி தன் வாழ்க்கையையே கெடுத்துக் கொள்வாளோ (என) பயந்து பள்ளியிலிருந்தே நிறுத்திவிடுகிறார்கள்.
சும்மா இருப்பாகண்களா நம் நண்பர்களெல்லாம்; ஒரு கூட்டா சேர்ந்து அந்த பொண்ண கடத்தி கல்யாணத்தையும் பண்ணி வெச்சிட்றாங்க. அந்த பொண்ணும் பல கட்டங்களை தாண்டி பதினாறு வயசுல ஒரு குழந்தைய பெத்துக்குனு நிக்குறா, பையன் படிப்பல்லாம் நிறுத்திட்டு கிடைக்குற வேலைய செய்துக்குனு, தின சாப்பாட்டிற்கே போராடி உறவுகளை எல்லாம் துறந்து ரெண்டு பெறும் வாழற இவுங்களை சேர்த்து வெச்ச நண்பர்கள்லாம் நல்ல படிச்சிட்டு டாக்டராவோ என்ஜினீராவோ சுத்தின்ருக்கான்
சிந்தித்து பாருங்க தோழர்களே.. பதினைந்து வயதில் ஒரு பெண்ணை ஒரு ஆணிடம் சேர்த்து வைக்க உயிரை கொடுக்கும் நண்பர்களின் துடிப்பு பெருசா? அல்லது, தன் குழந்தைகள் இப்படி வாழ்வினை இந்த சின்ன வயதிலேயே சீர்குலைத்துக் கொள்ளக் கூடாதென நினைக்கும் பெற்றோரென்ற உறவு பெருசா???
உறவு தான் பெருசு; நட்பல்ல இன்னலில் ‘இன்னல்களில் முதலில் வருவதென; தன் வாதங்களை வைக்க ‘வாருங்கள் தோழி ராணிமோகன் அவர்களே..