தீர்ப்பு – இன்னல்களில் முதலில் வருவது நட்பா? உறவா?

ந்த பார்ட்டிக்கெல்லாம் போனிங்கனா பார்க்கலாம்; பார்ட்டிக்கு வந்த பத்து பேரும் என்னவோ பத்து நாளா சாப்பிடே சாப்பிடாத மாதிரி புல் கட்டு கட்டுவான், ஆனா இந்த பில்லு கட்ட போறான் பாருங்க அவனுக்கு மட்டும் வயித்துல நெருப்பா எறியும். கவனமெல்லாம் எப்படா.. பில்லு வரும் பத்து கே.டி.யா இருபது கே.டி.யான்னு எட்டி எட்டி பார்த்துக்குன்னு இருப்பான் அது மாதிரி; என் வயித்துல இப்போ நெருப்பு எரியுது.

பேசின நாலு பேருமே மிக திறமையாக நகைச்சுவையாக புது புது அர்த்தங்களோடு தன் நல்ல கருத்துக்களை சொல்லி அழுத்தமாக தன் வாதங்களை வெச்சிட்டு போயிருக்காங்க. அது வேற தீர்ப்ப மாத்தி சொன்னா அனித்தா ஜான்சன் அவர்கள் குவைத்தையே எரிச்சிடுவாங்க போல, இருந்தாலும் பட்டிமன்ற தீர்ப்பு சொல்றதுக்கும் ஒரு வாழ்வின் நியதியும் ஒத்துப் போகணுமில்லையா?
——————————————————————-

ஒருமுறை நான் நம்மூர்ல வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது திடிரென மழை ஜோரா வருது, நாங்கள்லாம் ரிபைனரிக்குள்ள ஒரு பேப்ரிகேசன் யார்ட்ல இருந்து வீட்டுக்கு வர வந்துன்ருக்கோம், மழை ஜோரா வரவே எல்லாம் ஓட ஆரம்பிக்கிறோம் அப்போ என் கூட வந்தா நண்பன் (செல்வம்) சொல்றான் டே டேய் இன்னிக்கு தான் புது சட்டையா போட்டுவந்தேன், சேரடிச்சிட போது பொறுமையாவே போலாம்றான், அதும் போட்ருக்குறது வேற வெள்ளை சட்டை.

ஆனா அந்த நேரம் பார்த்து மழை இன்னும் ஜோரா வர எல்லோரும் ஓடி பக்கத்துல இருக்க ஒரு கட்டிடம் பக்கமா நிக்க போறாங்க, ஒரு காவா குறுக்கால இருக்கு எல்லாம் சுத்திக்குனு போறாங்க, எனக்கு சுழி சும்மா இல்லாம;

அது ஏன் சுத்திக்குனு போகணும்; நம்ம தாண்டியே போயிடலாமேன்னு வேகமா போயி தான்றன், குறுக்கால கூரா ஒரு கம்பி நீட்டிக்குனு நிக்கரதி கவனிக்கல.

வந்த வேகத்துக்கு கம்பி கால் பாதத்துல குத்தி கிழிச்சி காலெல்லாம் ரத்தம் கொட்டுது. எல்லாம் ஓடி வந்து இத எடு அதை எடுன்னு பதர்றாங்க, கால்லையா ரத்தம் கொட்டுது, ஆளுக்காளு மூளையா ஓடி துணி தேடுறாங்க

அப்போ அந்த என் நண்பன், உயிர் தோழன்; தன் புது வெள்ளை சட்டையை கழற்றி என் காலில் கட்டிட்டு பனியனோட வீட்டுக்கு வந்தான். அது தாங்க நட்புன்றது.

ஆனா இந்த நட்புக்கு ஒரு எல்லை வந்துவிடுகிறது, ஒரு கே.டி. வேணும்னா உடனே கொடுப்பீங்க பத்து கேடி வேணும்னா கொஞ்சம் யோசிப்போம், நூறு கேடி சும்மா கொடுன்னா கொடுப்போமா.. ?

அதே வீட்டில் கொடுத்த ஆயிரமாயிரம் கேடிகளை எத்தனை பேரிங்கே திருப்பிக் கேட்டிருப்பீங்க? யாருமே கேட்டிருக்க மாட்டோம் ஏன்னா உறவுக்கு செய்தது தனக்கு செய்ததாகி விடுகிறது.
—————————————————————-

நீங்க கூட தான் இங்க இவ்வளோ பேரு இருக்கீங்க நாளைக்கு சம்பளம் வாங்கி ஊருக்கு அனுப்பிடறீங்க, மருநாளொரு தோழி ஊரிலுருந்து தொலைபேசியில் அழைத்து “ஒரு அஞ்சாயிரம் அவசரமா வேணும் நான் ஒரு பெரிய இன்னல்ல மாட்டின்ருக்கேன் உதவுடான்னு கேட்டா” என்ன பண்ணுவிங்க?

அடடா நேற்று கேட்டிருக்கலாமே நேத்து தானே வீட்டுக்கு அனுப்பினேன்னுவோம்,

அதுலயும் சிலர் இருக்கான் “தோ இப்ப தான்பா அனுப்பிட்டு நேரா பேங்க்ல இருந்து வரேன்னுவான். அதே ஒரு பொண்டாட்டி ஊர்லருந்து “எனக்கு என்ன பண்ணுவீங்களோ தெரியாது பையனுக்கு பீஸ் ஏத்திட்டாங்க, இன்னைக்கே பத்தாயிரம் அனுப்பினா தான் நாளைக்கு பையனுக்கு ஸ்கூலுன்னு சொல்லட்டும் வட்டிக்கு வாங்கியாவது;
அடைக்கும் கதவை நிறுத்த சொல்லியாவது அனுப்புவோமா மாட்டோமா?
——————————————————

துபாய்ல நம்மள மாதிரி வேலைக்கு வந்த ஒரு நண்பரோட மனைவிக்கு ஊர்ல பூமுடிப்பு விழா நடக்குது. விழாவிற்காக துபாய்ல இருந்து நண்பர் மூணு நாள் லீவ்ல போறாரு. விழா நல்லா முடியுது, இங்க ஒரு நாலு அங்க மாமியார் வீட்ல ஒரு நாலுன்னு பேசி முடிவு பண்ணிக்குனு நைட்டு பதினொரு மணிக்கு தான் மாமியார் வீட்டுக்கே போறாரு,

விடிய காலைல நாலு மணிக்கெல்லாம் தங்கச்சி போன் பண்ணி ஓன்னு கத்தி அழுது, என்னன்னு கேட்டா அண்ணனுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சிண்ணா அம்மாவுக்கு கேட்டதும் பிரேசர் எறி போச்சி மயங்கி விழுந்துட்டாங்க உடனே வாண்ணான்னு கதறி அழுவுது. நண்பர் இருக்கறதோ செங்கல்பட்டுல, ஆக்சிடென்ட் நடந்தது சென்னையில, எப்படியோ அடிச்சிபுடிச்சி ஓடி வராரு,

ஆனா இங்க ஒரு விசித்திரம் பாருங்க.. அண்ணன் ஆக்சிடென்ட் ஆயி வலியில துடிக்கிராறு ட்ராபிக் போலிஸ் வந்து எங்க தகவல் கொடுக்கணும்னு கேக்குறாங்க.

அவருக்கு நாலஞ்சி அன்னந்தம்பிங்க;
வீட்ட சுத்துன பெரிய சொந்தம் பந்தம்னு எல்லாம் இருந்தும்

அந்த அண்ணன்

வீட்டுக்கு தகவல் தந்தா எல்லாரும் தவிச்சி போயிடுமேன்னு ஒரு நண்பனோட தொடர்பு எண்ணை தருகிறார்.

நண்பர்கள் கூடுகிறார்கள் அக்கம் பக்கத்து ஏதோ ஒரு மருத்துவ மனையில் சேர்த்தும் விடுகிறார்கள். உறவுகளெல்லாம் பின்னர் அறிந்து ஓடி வருகிறது.. அந்த தம்பியும் வருகிறான். அண்ணனை போய் பார்க்கிறான் அண்ணன் வலியில துடிச்சின்ருக்காறு
கால் எலும்பு துண்டா ஒடிஞ்சி போச்சாம், எதுவானாலும் டாக்டர் வந்து தான் இனி மீதி பார்ப்பாங்களாம்னு சொல்றாங்க

டாக்டர் எப்போ வருவாங்கன்னு கேட்டா ஒன்பது மணிக்கு வருவாராம்!
அதுவரை காத்திருக்கனுமாம், உள்ளே போனா அண்ணன் வலியில துடிக்கிராறு, அப்போ மணி எழு.

தம்பிக்கு வருத்த,ம் தாங்கல, ஏன் இது மாதிரி ஆஸ்பிட்டல்ல சேர்த்திங்க வேற எங்கனா நல்ல ஆஸ்பிட்டல்ல செர்கறது தானேனா
‘நண்பர்கள் சொன்னார்கள் அங்கே லட்சம் லட்சமாக ஆகலாம், அதனால் தான் அவசரத்திற்கு இங்கே சேர்த்தோம் என்கிறார்கள்,

தம்பி கையிலும் அத்தனை பணமில்லை தான்
ஆனாலும் எத்தனை கோடி ஆனாலும் பரவாயில்லை உடனே அங்கே கொண்டு போவோம்னு சொல்லி சென்னை போர்ன் அண்ட் ஜாய்ன்ல சேர்த்து; வேலைய விட்டுட்டு;
ரெண்டு லட்சம் கட்டி,
அடுத்த மூன்றாவது வாரம் அந்த அண்ணன் எழுந்து நிற்கிறார்.

அந்த முடிவை ஏன் எத்தனை லட்ச்சமானாலும் பரவாயில் என்று நண்பர்களால் முடிவு செய்ய முடிய வில்லை? அங்கு நாமிருந்தாலும் அதை தான் செய்திருப்போம், காரணம் ஒரு முடிவு எடுத்து முன் வர நட்பிற்கு மனம் போதுமென்றாலும்; உறவிற்கே உரிமை தரப் பட்டிருக்கிறது.

நண்பர்கள் உதவி செய்வார்கள் தம்பி தமிழன் மணியன் சொன்னது போல் உறவால் மட்டுமே உயிர் தர முடியும் தோழர்களே. பொதுவா நமக்கெல்லாம் உறவுகள் பார்த்தா மாமா மச்சான் அத்த சித்தி அண்ணன் தம்பி தான் (நினைவின்) லிஸ்ட்ல இருக்கு, ஆனா ஒரு அப்பாம்மாவை விட
கணவன் மனைவியை விட
நம் பிள்ளைகளை விட,
எல்லோரும் கூட வேண்டாம் ஒரு பெற்ற தாயை விடவா பிறர் நமக்காக துடிப்பார்கள்?

கடைசியா ஒன்னே ஒன்னு சொல்லி முடித்துக் கொள்கிறேன்; ஊர்ல நம்ம மகளுக்கு திருமண ஏற்பாடு செய்து விட்டோம் இன்னும் ஒரு மணி நேரத்தில் முகூர்த்தம் இருக்கிறது, நண்பன் அழைத்து நானொரு பெரிய இன்னலில் சிக்கிக் கொண்டேன், அதனால் தான் திருமணத்திற்கு வர இயலவில்லை நீயும் கூட இங்கே உடனே வா என்றால் நம்மால் போக முடியுமா, இன்னும் ஒரு மணி நேரத்தில் மகளுக்கு திருமணம்.

சிலர் இருக்கான் போன ஆப் பண்ணி பொட்டுட்டு, அது ஏதோ ராங் கால்மா நீ போயி வேலையா பாருன்னுவான்.
கொஞ்சம் நல்ல குணமா இருந்தா அண்ணனோ தம்பியோ வேறு நண்பர்களையோ அழைத்து ‘ஏம்பா அவனுக்கு இப்படி பிரட்ச்சனையாம் நீ போயி பாரு நான் முகுர்த்தம் முடிந்ததும் வரேன்னுவோம். வேற சிலரும் இருக்கான் மொபைல தங்கச்சி கிட்ட குடுத்துட்டு அவன் திரும்ப பொன் பண்ணினா அண்ணன் எங்கையோ வெளிய போயிருக்குன்னு சொல்லிடுன்னுவான்..

அதே நாமொரு நண்பனின் திருமணத்திற்கு போகிறோம்; தாலி கட்ட இன்னும் ஐந்தோ பத்தோ நிமிடம் ஊள்ளது, மனைவிக்கு ஆக்சிடென்ட் மகளுக்கு ஆக்சிடென்ட் அப்பம்மாவுக்கு ஆக்சிடென்ட்னு ஒரு போன் வருது அப்போ ‘இல்லல்ல இன்னும் பத்து நிமிஷம் தானே நண்பா இருக்கு நீ தாலி கட்றதை பார்த்துட்டு போறேன்னு யாராவது நிற்போமா?

நிச்சயமாக துடித்துக் கொண்டு பதட்டத்தில் ஓடுவோமே தவிர வேறொன்றுமே தோணாது தோழர்களே காரணம், நட்பு உதவிக்கு உடனே வரும் ஆனால் உறவுகளை தாண்டி வராது.

உறவு அனைத்தையும் தாண்டி வரும்; அவசியமெனில் உயிரையும் தரும்.

ஆக இன்னலில் –
முழுமையாக –
உயிர் தரும் வரை –
முதலில் வருவது உறவே உறவே உறவே எனக் கூறி,
வாய்ப்பளித்தமைக்கு உதவும் கைகள் அமைப்பிற்கு பெரு நன்றி பாராட்டி
பட்டிமன்றத்தை நிறைவு செய்கிறேன். நன்றி வணக்கம்!
———————————————————————————————————————-
இறைவன் அருளால்
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பட்டிமன்றம். Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s