உன் குறுகுறு பார்வையும்…
குறும்பு சிரிப்பும்…
நீ அழைக்கும் ஒரு ஏம்பாவும்…
கலுக்கென்று கால்கொலுசு உதிர்ந்ததாய் – நீ
சிரிக்கும் சப்தமும்…,
உன்னை நினைத்து நினைத்து
நான் அழுவதற்கு – நீ
கேட்காமல் கொடுத்த பரிசுகளா?
அடி என்னவளே…,
மூணு முடுச்சி போட்டதால என்
உயிர்மூசி ஆனவளே…!
துடிக்கும் நாடி –
துடிப்பில் கூட
ரத்தமின்றி கரைந்தவளே;
மனசெல்லாம் உருகிப் போனேன்;
வயசெல்லாம் கரைந்து போனேன்;
ராசாத்தி நீ அழுத அழைக்கு –
ஜென்மம் ஏழும் செத்துப் போனேன்!
கடலெல்லாம் அலைபோல
மனசெல்லாம் வலிக்குதடி;
உடலெல்லாம் எறிவது போல்
உன் கண்ணீரில் உடல்கட்டை வேகுதடி!
வானம்பூமி கனப்பது போல்
மனதில் வருடம் இரண்டு – கனக்குதடி;
உயிர் வலிக்குமுன் பிரிவாலே –
இங்கே நொடிகளெல்லாம் மரணமடி!
உன்னோடு உறங்கிக் கழித்த இரவுகளெல்லாம்
இங்கே உலகம் தொலைத்து அலையுதடி;
வெளி-நாட்டுக் கனவில் பூத்த விழிகளிரண்டும்
இன்று அழுத ரணத்தில் இமைக்குதடி!
உன் அருகில் கிடைக்கும் மரணமேனும் –
போதுமென்று – மனம் தவிக்குதடி;
ஊரில் – பட்ட கடன் பாதியை தூக்கி
குவைத்து தினார் விழுங்குதடி!
விண்முட்டும் கட்டிடமும்.. மின்னும் மாளிகையும்..
இங்கே – இருந்து மட்டும் என்ன செய்ய?
ஏன்கி ஏங்கியே கரையுமிந்த வாழ்க்கைக்கு –
நீ – சிரிச்ச ஒரு சிரிப்பு ஈடில்லையேடி!
விளக்கு வைத்து அணைந்தது போல்
கொஞ்சம் இருட்டு தானோ இந்த வாழ்க்கை?
உன்னை விட்டு இருக்க சொன்னா –
நரகம் தானோ; சொர்க்கம் கூட!!
———————————————-
வித்யாசாகர்