புறா
யாரேனும் தூது
விட்டால்
பல்லாயிரக்
கணக்கான மைல்களை
பறந்து –
கடப்பாயாமே புறாவே;
நானொரு –
ஈழ மகள்,
என் மகன்
எங்கேனும்
தொலைந்தாவது;
இறந்தாவது;
கிடக்கிறானா பார்த்து
சொல்வாயா?
அவள் கதறிவிட்டு
மீண்டுமந்த
புறாவிடம் – சொன்னாள்
“இன்னொன்றையும் கேள்
புறாவே..
ஒருவேளை அவன்
சிங்களனுக்குப் பயந்து
எங்கேனும் ஒளிந்திருந்தாலோ;
சிங்களனின் குண்டு அவன்
மார்பை துளைக்கும் முன்
தன் துப்பாக்கி முனையில் –
பல நூறு எதிரிகளை – வீழ்த்தாது
இறந்திருந்தாலோ;
தயவுசெய்து அவனைப் பற்றி
என்னிடம் சொல்லிவிடாதே”
அவள் கர்ஜித்த கர்ஜனையில் –
புறாவின் மயிர்கால்கள்
குத்திட்டு நிற்க;
சிலிர்த்துக் கொண்டு வானில்
பறந்தது.
உண்மையை
புறாவே அறியும்!!
—————————-
வித்யாசாகர்