சிட்டுக் குருவி
சிட்டுக் குருவிக்கு
வணக்கம்;
வணக்கம் ஐயா;
எங்கிருந்து வருகிறாய் –
ஏனிப்படி சோகமாகத்
தெரிகிறது உன் முகம்?
உன் கிரீச் கிரீச்
சப்தமெங்கே காணோம்?
வேண்டாமைய்யா
என்னை ஏதும் கேட்காதீர்கள்;
நான் –
ஈழத்திலிருந்து
வருகிறேன்;
கை முடமும்..
கால் முடமும்..
தலை துண்டிக்கப் பட்டும்..
கண்டம் துண்டமாய் மனிதர்கள்
வெட்டப் பட்டும்..
உடம்பெல்லாம் குண்டுகளால் துளைக்கப்
பட்டும்..
சுக்குநூறாக பீரங்கியில் வெடித்த தசைகள்
இங்குமங்குமாய் சிதறப் பட்டும்..
பெண்களின் மரணித்த உடல்கள்
ஆங்காங்கே –
நிர்வாணப் படுத்தியும்;
அப்பாவை இழந்தும்
அம்மாவை இழந்தும்
ஈக்கள் மொய்க்கும்
புண்களை விரட்டி விரட்டியே
மிச்சமுள்ளவர்கள்
நோயினால் அவதிபட்டும்..பட்டும் பட்டும்;
அப்பப்பா.. கொடுமை
கொடுமையாக இருக்கிறது ஈழதேசம்;
எத்தனை குழந்தைகளுக்கு
தாய்பால் கொடுக்கக் கூட
அங்கே தாயில்லை
தெரியுமா???????????????
ஒரு பெண் ஓடுகிறாள், ‘துப்பாக்கியோடு – வந்து
தன் குழந்தைக்கு
முத்தமிட்டு விட்டு’
நானவளை மறித்து
‘இப்படி குழந்தையை விட்டுவிட்டு
போகிறாயே – நியாயமா’ என்றேன்.
அதற்கந்த –
பெண் சொன்னாள்
‘ஏய் சிட்டுகுருவி! என் குழந்தைக்கு பால்கொடுக்க
எவளாவது ஒரு –
தமிழச்சி வருவா;
என் நாட்டுக்காக ஓடி காப்பாத்த
நான் ஒரு –
முண்டச்சி தானே
இருக்கேன்;
கடவுள் –
குழந்தையை
காப்பாற்றிக் கொள்ளும்
எங்கள் ஈழத்தை
காப்பாற்றாது விடு என்னை”‘ என்றவள் ஓடிய கனம்
நான் பறந்திங்கே
வந்து விட்டேனென்று சொல்லி
அழுததந்த சிட்டுக்குருவி.
அழாதே..
அழாதேயென அதன்
கண்களை துடைக்கப் போனேன்;
வேண்டாமைய்யா..
வேண்டாம்,
என் கண்களை
துடைத்து விடாதீர்கள் –
என் கண்ணீர் வழியட்டும்;
வழியும் வரை
வழியட்டும் –
என் கண்ணீரில் இந்த –
பூமி முழுதாய் நனையட்டும்
பூமி நனையுமந்த
ஈரத்திலாவது
ஒரு ஈழம் பிறக்கட்டும்;
ஈழம் பிறக்கட்டுமென மேலே
பறந்து போனதந்த சிட்டுக்குருவி.
சிட்டுகுருவி –
பிடிக்க வேண்டாத ஒரு
நட்சத்திரம்!!
——————————-
வித்யாசாகர்
எல்லோருக்கும் பறவை கவிதை பிடிக்குமென்று நினைக்கிறேன். அது ஒரு வலியின் சுவடு. படித்து விட்டு விமர்சனத்தை கொடுத்து வையுங்கள்.
தவிர இக் கவிதைகளுக்கு காரணம் சொல்லவேண்டாம் அது ஒரு வலி வேதனை ரணம், உடல்கட்டை எரிந்தாலும் ஆறாத காயம்.
நேரில் காணாவிட்டாலும் காதுக்கருகில் வெடிக்காத சிங்கள குண்டுகளின் சப்தம் என் மனதை தொலைத்த வலிகளும், நாளிதழ்களிலும், மின்னஞ்சல்களில், செய்திகளிலும் ரத்தம் ரத்தமாக கண்ட காட்சிகளும், கண்முன்னே என் இனம் ஒவ்வொரு சிறகினையாக உதிர்ந்துக் கொண்டிருந்த கொடுமையும் உயிர் வரை பதிந்துள்ளது.
LikeLike