அந்த கிழவனின் கண்களில் ஊடுருவித்
தான் பிறக்கிறது –
என் பார்வையும் பயணமும்!
அவனின் இதயம் வழியாகத் தான்
பேச ஆரம்பித்தன –
என் நாடிகளும் நரம்புகளும்!
அவன் உணர்வுகளிலிருந்து தெளிந்து வந்து தான்
சுயேட்சைப் பெற்றது –
என் மனசாட்சியும் லட்சியங்களும்!
அவன் கொள்கையின் அழுத்தத்திலிருந்து தான்
வளர்ந்தது –
என் வீரமும் விவேகமும்!
அவன் உண்ணக் கிடைக்காத உணவும்
உறங்கி செரித்திடாத பொழுதுகளுமே
என் பட்டமும் பாடமும்!
கடைசி வரை அவன் ஊன்றிடாத கைத்தடியும்
அணிந்திடாதக் கருப்புக் கண்ணாடியும்
கற்றுத் தந்தது தானென் – நம்பிக்கையும் பலமும்!
அவன் கற்றுத் தராத பாடம் மட்டுமே
எனக்கு மிச்சம் மீந்த –
தேடல்களும் ஞானமும்!
அவன் தொட்டும், சாய்ந்தும் வாசம் செய்த
ஆறடிக் கயிற்றுக் கட்டில் தான் –
எனக்குக் கொடுக்காமல் கிடைத்த உலகமும் சொர்கமும்!
ஆக, அவன் வாழ்வின் அர்த்தமாகவே
நீள்கிறது – என் வாழ்வின்
எஞ்சிய நாட்கள்!
அந்த நாட்களின்.. நிமிடங்களின்.. நொடிகளின்..
ஒவ்வொரு விளிம்பிலும் – எங்கே அவன் உயிர் படாத
கடைசி இடமெனத் தேடுகிறேன்.,
சுடுகாட்டு நெருப்பு எங்கோ தூர நின்று
எனைச் சுட்டு எரிக்கையில் –
அப்பா என்று அழுவதைத் தவிர
வேறு வழி தெரியவில்லை!
______________________________
வித்யாசாகர்
ஒருவன் தன் வயதான அப்பாவிற்கு கொல்லி இட்டுவிட்டு தெருவில் நடந்து போகையில்.. எங்கு கண்டாலும் அவர் முகமும் நினைவுமாகவே இருக்கிறது..
அவனின் மன ஓலம் தான் மேலுள்ள கவிதை.. அப்பா என்றொரு வேதம்!
ஒருவன் வாழவேண்டிய விதத்தை வேதம் சொல்கிறதாம், வாழும் விதத்தை அப்பா சொன்னாரல்லவா?
அவருக்கு காணிக்கையிட்ட தலைப்பிது.. அப்பா என்றொரு வேதம்!
LikeLike