ஒவ்வொரு இடமாக நகர்கிறது
வாழ்க்கை;
கேட்டது கிடைத்ததோ இல்லையோ
தேவைகள் கூடி கூடி
குறைத்துக் கொண்டே வருகிறது –
நமக்கான உயிர்ப்பை!
உள்ளும் புறமும் உண்மை ஒழித்து
பொய்மையில் புழங்கிக் கிடக்கும் –
நம் ஏதோ ஒரு கண்மூடி தனத்தில்
தொலைந்து போகிறது மனிதனுக்கான யதார்த்தம்!
மனம் சொல் சிந்தனை செயலென
அத்தனையிலும் வீரியம் கொண்ட மனிதன்
மனிதத்தை இழந்ததில் தான் –
தன்னையும் இழந்து விட்டான் போல்!
காலம் செய்யும்; செய்யும் தான்,
ராகுகாலம் எமகண்டம் இன்னபிற
கெட்ட நேரமென நாமே காலத்தை
கொன்று குவிக்கையில் –
வெற்றிக்கான கால அளவு
எங்கோ நம் மூடத்தில்; முடங்கித் தானே போகிறது!
வெற்றியும் தோல்வியும் கூட வலிதில்லையே
வாழ்வின் குறைந்த தூரங்கள் வலிதில்லையா –
பேசிக் கழித்த பொழுதுகள் போகட்டும்,
நாட்காட்டி பார்த்து செயல்பட்ட –
மூடதனம் போகட்டும்,
மேல்சாதி கீழ்ஜாதி பிரித்துக் கொண்ட –
ஏகாந்தம் போகட்டும்,
மதம் இனமென நம் தோள்களில் சுமற்றிய
உறவுகளின் உயிரருத்த கொலைகளும் –
நமக்குள்ளே நாம் செய்துக் கொண்ட
கொள்ளைகளும் போகட்டும்,
மனிதன் தனக்காய் வாழாமல்
பிறர் சொல்லையே ஏற்று வாழ்ந்து மடிந்த
காலங்கள் போகட்டும் போகட்டும்…
வாஸ்த்தும் மந்திர கல்லும்
கடவுளின் ஈர்ப்பினால் –
எல்லாம் மாயையென போர்த்திய
கபடத் தனங்களும் ஒழியட்டும்;
எல்லாம் அநீதி தனமும் தின்று துப்பியத்தில்
நமக்கான மிச்சம் மரணம் மட்டுமே என்பதை
உயிருள்ள போதே கைவிடுவோம்!
நமக்கான வாழ்க்கை –
இன்னும் மிச்ச்மில்லாமலில்லை!
——————————————————————–
வித்யாசாகர்