உலக ரசனையை திரும்பிப் பார்க்க வைத்த
முதல் சாதனை –
பணத்தை கொட்டி – இறைத்து – வாரிய
பிரம்மாண்ட வியாபாரம்!
சதைக்கும் தோலுக்கும்
முதலிடம் கொடுத்து –
முடிவில் மனசாட்சி பற்றி பேசும்
மனிதர்கள் குவிந்த நவீன சந்தை!
உழைப்பை –
திரைக்குப் பின் மறைத்துக் கொண்டு
சொகுசாக வந்தவனுக்கு –
கம்பள வரவேற்பும் கட்டவுட்டும் வைக்கும்
கலை துரோகம்!
திறமையும் போலித் தனமும்
திறமையும் சிபாரிசும் –
திறமையும் பணமும் புகழும் உள்ளதால் வளர்ந்த
நிறைய பொய்முகங்களின் கூடாரம்!
பதினாறு வயதில் நடிக்கவந்து
மரணம் வரை நடிப்பு கனவாகவே கடந்த
எண்ணற்றவர்கள் –
ஆவியாய் கூட வாய்ப்பு வேண்டித் திரியுமிடம்!
முகத்தை எடுப்பதாக நினைத்து
முழு உடலை குடிக்கும் கேமரா கண்களுக்கு
பெண்மையை இரையாக கொடுத்துவிட்டு – வெறும்
பணத்தில் குளிக்கும் – நிறைய நங்கைகளின்
நிஜம் தொலைந்த திரை காவியம்!
முடிக்கப் படாத படமும்
ஒடுக்கப் பட்ட மனிதர்களின் கதறலும்
தோற்றுப் போன இளைஞனின் கண்ணீரையும்
வலிமை குறைந்தவனின் ஏமாற்றத்தையும்
மறைத்துக் கொண்டு ஆடும் –
ஆட்டமும் பாட்டும் கும்மாளமும்!
ஒருவன் தோல்வியில்
மொத்தபேரும் தோற்றுப் போகும்
அவல அஸ்திவாரம்!
இரவுபகல் உழைத்தவனின் உழைப்பில்
ஒருவன் அடைந்துக் கொள்ளும் –
வானம் தொடும் – வெற்றுப் புகழ்!
அழகற்று வந்தவனை அரியணை ஏற்றி
அழகான கதானாயக நாயகிகளை –
அசிங்கப் படுத்தி –
திறமைக்கு தரக்குறைவு சான்றிதழ் தந்த
போலியான பல்கலைகழகம்!
விளம்பரத்தில் கொடி உயர்த்தி
வீட்டுக்கு வீடு புகழ் பரப்பி –
அதிஸ்டத்தில் கிடைத்த ஆயிரத்தில் லட்சத்தில்
கோடி படாடோபம் காட்டும் அதிக –
வித்தைகாரர்கள் ஆடுமிடம்!
இருபத்திநான்கு மணிநேரம்
உழைத்த பணத்தில் –
எளியவருக்கு உதவும் ஈர இதயங்களை
கர்பமின்றி பிரசவித்த வயிறு!
உண்மை பேசுவது போலவே
பொய் பேசி – உயிர் போகும்வரை ரத்தம் குடிக்கும்
நய வஞ்சகர்கள் சிலர் நடு மரமிட்டு
அழுத்தமாக அமர்ந்துக் கொண்ட வீடு!
இதத்தனையும் தெரிந்து
தோல்வியின் வேரறுத்து
விடாமுயற்சியில் வேற்றிநடை போட –
நம்பிக்கையை உயிர்வரை பதித்துக் கொண்ட
ஒரு சாதாரண மனிதனை –
வரலாற்றின் உச்சியில் நிறுத்திக் காட்டும்
ஒற்றை ஊடகம்; உலகம் தொட்ட – மெத்த ஊடகம்; சினிமா!
————————————————————–
வித்யாசாகர்
வணக்கம்,
கொசு கடி யின் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை உங்கள் கவிதைகளை பார்த்து அறிந்து கொண்டோம். அதே போல் தெரு குழாய், புகைப்படம், சினிமா இவைகள் எல்லாம் கூட தங்களின் அன்றாட வாழ்க்கையின் பாதிப்புகள் தான். ( சரியா? ) இருந்தாலும் அருமையான எதார்த்தங்கள். உங்களுக்கு மக்களிடம் உள்ள ஈர்புத்தன்மை புரிகின்றது. இது தான் உண்மையான நிதர்சனம். நல்லது, உங்கள் பணி தொடர எங்களின் வாழ்த்துகள்.
நன்றி!
LikeLike
எழுத்துக்களின் மேல் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளீர்கள்.
என் மீது கொண்ட தங்களின் நம்பிக்கையில் நீண்டதொரு பற்று ஆழ்கிறது. ஆழ்ந்த பற்றின் உச்சத்தில் சமூகம் மீதான கோபமே மேலிடுகிறது. மேலிட்ட கோபத்தில்; முளைக்கிறது மீண்டும் மீண்டுமான கவிதை!
மிக்க நன்றிகள் பல!
LikeLike
உண்மை அண்ணா,
உங்களின் பிரதிபலிப்பு அருமை
கொண்டு சேர்த்த விதம் அருமை.
LikeLike
மிக்க நன்றிப்பா சிவா..
LikeLike
//முகத்தை எடுப்பதாக நினைத்து
முழு உடலை குடிக்கும் கேமரா கண்களுக்கு
பெண்மையை இரையாக கொடுத்துவிட்டு – வெறும்
பணத்தில் குளிக்கும் – நிறைய நங்கைகளின்
நிஜம் தொலைந்த திரை காவியம்//
கண் திறந்தீர்… மனம் கூசுகிறது.. கண்மூடிக்கொண்டேன்
LikeLike
ஆம்; கூசவேண்டும். இன்னும் நிறைய பேருக்கு கூசவேண்டும். கூசவேண்டியோருக்கு கூசுமோ???!!!
வருகைக்கு நன்றி ஐயா!
LikeLike