காற்றின் ஓசை (5) சிறிது காதல்; சிறிது காமம்

இதற்கு முன் நடந்தது..

மின்னலின் மேகங்கள்

ம.. டம..

மேகங்கள் ஒன்றோடொன்று இடித்துக் கொண்ட இடியோசையில் மின்னலொன்று வெட்டி மேகத்தை நனைத்து மின்னலின் மேகங்களாகிய சமயம்.., இரண்டு இதயங்களின் சப்தங்கள் காற்றில் வந்து கலக்கின்றன..

“டேய்.. நீ என்னை கட்டிக்குவியா?” கேட்டது பத்து பன்னிரண்டு வயதை யொத்த பெண்ணிளந்தேவதை மாலினி.

” கட்டிக்குனா.. என் கூடவே இருப்பியா..?” பதிலுக்குள் கேள்வியை வைத்தது அதே வயதையொத்த மாலன் தாண்டவராயன்.

“ஐய இது கூட தெரியாதா.. நீ என்னை கட்டிக்குனா, என் கூடவே இருக்கலாம்.., முத்தம் கொடுக்கலாம்.., கட்டிப் புடிச்சிக்கலாம்., பக்கத்துல கூட படுத்துக்கலாம்”

“அப்போ நானுன்னை கட்டிக்க மாட்டேன் போ”

“ஏன்டா?”

“நீ பக்கத்துல படுத்தா தப்பெல்லாம் பண்ணுவ, பெரிய இவ நீ…”

“ஹ்ஹ ஹ்ஹ ஹா…” களுக்கென சிரித்துக் கொண்டால் நினைவிலிருந்து திரும்பிய திருமதி மாலினி.
தன் படுக்கையில், அருகில் படுத்திருக்கும் கணவனை திரும்பிப் பார்க்கிறாள்.., வெளியே அதே மழை சாரலின் சப்தங்கள் ஜன்னலை வந்து தட்டிவிட..பழைய ஞாபகங்கள் மீண்டும் அவளுக்குள் புன்னகை பூக்கிறது..

“நீ –
பேசிக் கொண்டு
தானிருக்கிறாய்,

இதயங்கள் மட்டும்
இடையே-
உனக்கும் எனக்கும்
தெரியாமல்-

மாறி மாறி..
உன்னையும் என்னையும்
தொட்டுக் கொள்கிறது”

“நல்ல கவிதை மாலினி, நீ கவிதை கூட எழுதுவியா?” பத்து பன்னிரண்டிலிருந்து சில வருடங்களை தாண்டிவிட்ட மாலன் கேட்க..

“உனக்கென்னை –
எப்படி புரிய வைப்பதேன்றே
தெரியவில்லை;

என் எழுதுகோலின் முட்கள்
தன் தலையை –
முட்டிக்கொண்டு
மாண்டு போன சரித்திரமாயிரம்;

நீ-
என்னை
புரிந்துக் கொள்ளாத
கணங்களில்-

இறந்து இறந்து – மீண்டுமுன்
பார்வைகளில் உயிர் பெற்ற
கொடுமைகளாயிரம்;

செத்தும் –
சுடுகாடாய் மாறிடாத
என் இதயத் தெருக்களில்,

உன் – புன்னகை
பூத் தூவி-
காதல் நகரமாக்குமுன்
ஜாலங்கலாயிரம்;ஆனால்-
காதல் செய்யேன்!!”

மாலன் கேட்ட மாத்திரத்திலேயே வெட்கத்தை விட்டு எழுதித் தருகிறாள் மாலினி. அவன் அவளையே பார்க்கிறான், அவள் மெளனமாகிறாள்.., அவனும் மெளவுனம் கொள்ள மாலினிக்குள்ளே எழுதுகோல் மாலினியின் உணர்வுகளுக்கு மை கோர்த்துக் கொண்டு மீண்டும் கவிதையாய் ஊறுகிறது..

“நூறுமுறை –
உன்னை –
காதலிக்கிறேனென்று
சொல்ல ஆசை;

ஒருமுறை கூட
சொல்லமுடிவதில்லை;

எங்கே சொல்வது..இதோ.. நாம் பேசுவதற்கு
முன்னதாகவே
நம் – இதயங்கள் தான்
இப்படி-

இதழோடு இதழாக
ஒட்டிக் கொள்கிறதே!!”

லேசாக புன்னகைக்கிறான் மாலன்.., அவள் தன் இதையத்தில் எழுதிக் கொண்ட கவிதையின் சப்தத்தை இதயம் வழியே கேட்டுவிட்டான் போலவன். மெளனமாகவே அவளை பார்த்து புன்னகைக்க.., அதே மெளனனம் மாலினியை கொள்ள அவள் கேட்கிறாள் –

“ஏனடா மாலு.. இப்படி இருக்க”

“எப்படி..?”

“அதோ அங்கே பார்.. பெரிய ஒரு பாறை தெரிகிறது பார், அதோ ஒரு மரம் அசையாமல் நிற்கிறது பார், அப்படி”

“அந்த பாறைக்குள்ளும் மரத்திற்குள்ளும் பேசாதவர்களின் மவுனத்திற்குள்ளும் அவ்வளவு எளிதில் புரியாத ஒரு சங்கீதம் இருக்கிறது மாலினி””உன் மெளனம் கூட எனக்கு சங்கீதம் தான் மாலன், ஆனால் அந்த சங்கீதம் கொஞ்சம் சப்தமாய் என் காதுகளில் கேட்கத் தருவாயா”

“சங்கீதம் தானே.. வா அங்கே கடலோரம் போவோம்.. நிறைய கேட்கும்”

“மண்ணாங்கட்டி. நீ என்னை காதலிக்கிறாயா இல்லையா? என் காதல் உனக்குப் பிடிக்கிறதா இல்லையா?”

“ம்…” ஒரு இம்மெடுத்து வீசி, கண்களை அகலத் திறந்து, புருவங்களை உயர்த்தி, ஆயிரம் ஆச்சர்ய கேள்விக் கணைகளை பார்வையில் தொடுத்து அவள் மீது வீசுகிறான் மாலன்.

இரு மெளனத்தின் பார்வை மொழிதனில் ‘ஒன்றெனக் கலந்த தீ சுவாலை போல் எரிகிறது காதல். இங்கே காதல் அம்புகளென்ன செய்துவிடும் அவைகளை முறித்தெறிந்து விடுகிறது மாலன் சொல்லும் கவிதை –

காதல் கேள்.. காதல் கேள்..
பெண்ணே.. காதல் கேள்;

விண்ணை துளைக்குமுன்
ஒரு பார்வைக்கு-
என்னை பிறந்த போதே தந்த
காதல் கேள்;

சொல்லில் பூ உதிர்க்குமுன் ஒரு
வார்த்தைக்கு –
என்னை ஏழேழு ஜென்மத்திற்கும்
தந்த காதல் கேள்;

துடிக்கும் இதயமெலாம்
எனதாய் துடிக்குமுன்
இதயத்திற்கு-
உனதாகவே என்றோ
கலந்துவிட்ட என் காதல் கேள் – பெண்ணே
காதல் கேள்;

நம்மை போன்ற
காதலர்களை-
வாள் வேல் கத்திகளெல்லாம்
ஒன்றுமே செய்யாத –
காதல் தெரியுமா?

மெளனம் ஒன்றே –
வெட்டி –
வீழ்த்தும்
காதல் புரியுமா….????”

“ஆம்! எத்தனை இதயங்கள் இப்படி தெருக்களில் வீடுகளில் அறுபட்டுக் கிடக்கின்றனவோ..” நினைத்துக் கொண்டே அருகில் படுத்திருந்த தன் கணவன் மாலனுக்கு குனிந்து ஒரு முத்தம் தருகிறாள் மாலினி.

உள்ளே சிரிக்கும் புன்னகையின் சப்த கீற்றுகளை வெளியே கொட்டிய மழை சாரல் சற்று சாய்ந்து வந்து அவள் வீட்டு ஜன்னலை தட்ட, எட்டி கணவனை தாண்டி ஜன்னலை திறந்து விடுகிறாள்.

வெளியே ஜன்னலுக்கருகில் நீண்டிருந்த நகர சாலையில் வாகனகள் கடக்கின்றன. எந்திர வாகனங்களின் சப்தமவளின் காதுகளை துளைக்க, ஜன்னலோர சிட்டுக் குருவிகள் கிரீச் கிரீச்சென்று ஜன்னலோடு சேர்ந்து அவள் நெஞ்சிலும் வந்து குத்த..,

தெருவினை தாண்டி., தெருவின் விடிகாலை ஆள் நடமாட்டங்களை தாண்டி.., வரும் போகும் எந்திர வாகனங்களின் சப்தங்களை தாண்டி.. அவள் பார்வை நான்கைந்து மாடி விடுகளுக்கும் அப்பாலிருக்கும் ஒரு மொட்டை மாடியின் மேல் சென்று நின்றது.

“இது தாண்டா மாலு எனக்கு ரொம்ப பிடித்த இடம்.., இங்க தான் நீயும் நானும் மட்டும் இருக்கோம்”

“ஏன்.., கீழே வீட்டிலிருந்தால் கூட என்ன்னை பொருத்த வரை நீயும் நானும் மட்டும் தானிருக்கிறோம் மாலினி, எனக்குத்தான் இப்போதெல்லாம் உன்னை தவிர யாரையுமே தெரிவதில்லையே..”

:சரி…, அதை அப்படியே ஒரு கவிதையா சொல்லேன்”

“ஒரு வானம்-
ஒரு பூமி-
இந்த காற்று
அந்த நெருப்பு-
வரும் சூரியன்
போகும் நிலா……

அத்தனையையும்
காண்கிறேனன்பே;

அவைகளிலெல்லாம் தெரிவது
நீ மட்டுமே!”

“அப்படி போடு சக்கைனானாம். இது கவிதை.., ஹே.. என் மாலு கவிதை எழுதிட்டான்.. என் மாலு கவிதை எழுதிட்டான்…”

“ஆயிரம் கவிதைகளை
ஒரு இமைப்பில் –
சொல்லும் உன்
பார்வைக்கு;

எனக்குள் எழுதி வைத்திடாத
கவிதைகள் கூட-
சமர்பனமடி தோழி”

“மாலன் மாலன் மாலன்.. அப்படியே உன்னை கட்டிப் புடித்துக் கொள்கிறேன்; உன் கவிதைகளோடு சேர்த்து எனக்கொரு மரணத்தை கொடுப்பாயா?”

“ச்ச.. அசடு! நாம வாழனும் மாலினி. இரண்டு கை வீசி வானில் பறக்குற சந்தோசத்தை இதோ இந்த மண்ணுல வாழனும் மாலினி”

கைகளில் ஒரு கற்றை மணலை எடுத்துக் கொண்டு சொன்னான் மாலன். அந்த மண்ணின் வாசம் அவள் மூக்கை சற்றேனும் துளைத்திருக்கும் போல் உணர்ந்த மாலன், அதை அப்படியே “ம்.. இந்தா..”வென அவளிடம் கொடுக்க அவள் அதை வாங்கி பறந்து விரிந்த வானத்தை நோக்கி தூவுகிறாள்.. அவைகளெல்லாம் பூமியின் மேல் கவிதைகளாய் விழுந்து இருவரின் மனதையும் நனைக்கிறது..

“கவிதைன்னா உனக்கு சின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடிக்குது..ல்ல மாலினி?”

“ஆமாம் மாலு.. எனக்கு கவிதைனா ரொம்ப பிடிக்கும்; அதிலும் உன்னை மாதிரி உண்மையான மனசுக் காரங்க எழுதினா இன்னும் பிடிக்கும். கவிதைன்றது நம்மை வெளியில் தெரியாமல் ஆளும் உள்-உணர்ச்சிகளை எழுத்துப் பூக்களாக வெளியில் கொட்டுவதுடா மாலு”

“இப்படியும் சொல்லலாமில்லையா மாலினி”

“எப்படி?”

“வாழ்வின் ஒவ்வொரு புது அசைவுகளினாலும் நம் இதயங்களில் சிக்கித் தவித்து தடுமாறும் உணர்வுகளை ‘தமிழின் வார்த்தைக்குள்’ கோபுரங்களாகப் பொதித்தால்.., அதாவது சின்ன வார்த்தையை பெரிய அர்த்தங்களோடு பொதித்தால் அது கவிதை””போடா..”

“என்ன மாலினி?”

“நான் சுருக்கமா சொன்னேன், அதை நீ நீட்டி முழக்கி சொல்லுற”

“ஆம் கண்கள் நான்கு, பார்வை ஒன்று ஆனால் பார்க்கும் இடம் இரண்டில்லையா மாலினி”

“இல்லை..இல்ல.. நான் சும்மா சொன்னேன், நம்மால் எப்படி மாலு இரண்டாகிப் போக முடியும். நீ என்னை பார்க்கிறாய்; நான் உன்னை பார்க்கிறேன்; ஆனா நாம் இருவரும் ஒருவரை தானே பார்க்கிறோம், ”

“அப்படியா ராஜகுமாரி”

“அப்படித் தான் ராஜகுமாரா”

“ஹ்ஹ ஹஹா.., பயப்படாதே மாலினி.. நமக்கு எதையும் தெளிவா சிந்திக்கும் திறன் இருக்கட்டும், அதனால மட்டுமல்ல எதனாலும் நம்மை இனி பிரித்திட முடியாது..”

“உண்மை தான்டா.. இப்பொல்லாம் நான் கல்லூரிக்குப் போனாக் கூட படிப்பதே இல்லை, எங்கு போனாலும் எங்கு வந்தாலும் உன் நினைவு.. தான், வெறும் மாலு.. மாலு..தான்”

“எனக்கும் தான் மாலினி, முன்பெல்லாம் நீ நிறைய என்னென்னவோ சொல்லுவ, நான் அதலாம் சும்மா ஒண்ணுமில்லைனு மறுத்திருக்கேன். ஆனால் அதெல்லாம் நான் உன்னை மறுத்தது இல்லை நினைத்தே இருந்ததுன்னு இப்போ தான் புரியுது மாலினி.

அது சரி.. நீ எப்படி மாலினி சின்னவயசுல இருந்தே இதுமாதிரி விசயத்துல எல்லாம் இவ்வளவு தெளிவா இருக்க?”

“நான் தெளிவா இல்லடா என் மக்கு காதலா.., அப்பத்துல இருந்தே உன் மீது உயிர் உறையும் அன்போடு நானிருக்கேன், நீ தான் பயந்து பயந்து எதையுமே சொல்ல மாட்ட. நாங்க வீர தமிழச்சி பரம்பரை தெரியுமா?”

“நான் சொல்லாததால் கோழைன்னு அர்த்தமா? இதோ பார் இதென்ன தெரியுமா?”

“ஓ.. ஆமாம்டா மாலு இன்னிக்கு ஏதோ மறக்கமுடியாத பரிசு தரேன் வான்னு சொன்ன ல்ல..”

“ஆம் மாலினி இது உனக்கு மறக்கக் கூடாத பொக்கிஷம் தான், இதென்ன தெரியுமா.. இத்தனையும் உன் நினைவுகள் மாலினி.”

“என் நினைவுகளா? எங்க காட்டு?”

“ம்..ம்.. தொடாதே.. இதை நீ உடனே பிரித்துப் பார்த்துவிட வெறும் நாட்குறிப்பல்ல; என் மனசு. உன்னை காணாத பொழுதுகளின் ஓலம், உனக்குத் தெரியாமல் நான் மறைத்து மறைத்து எழுதி வைத்திருந்த நம் காதல்..”

அவன் ஒரு நாட்குறிப்பிற்கு ஆயிரம் சலங்கைகளை கட்டிச் சொல்ல, ஆச்சர்ய கத்திகள் ஒவ்வொன்றாய் சென்று அவளின் இமையை குத்தி விரிக்க..

“நிஜமாவாடா மாலு..”

அவன் புன்னகையாய் தலை அசைத்தான். ஆம்.. மாலினி இந்தாவென அவளிடம் கொடுக்க.. அவள் அதை தானே முதன் முதலாய் பெற்றெடுத்த தன் முதல் குழந்தையை முதன்முதலாய் தொட்டுப் பார்க்கும் ஒரு தாயை போல தொட்டுப் பார்க்கிறாள்.., நிமிர்ந்து அவனையும் பார்க்கிறாள்.., திரும்பி நாட்குறிப்பினை தொடுகிறாள் நிமர்ந்து அவனை பார்க்கிறாள்.. அங்கே பூத்து உதிர்கிறது பல்லாயிரக்கணக்கான காதல் மலர்கள்.

“ஏன் மாலினி புதுசா வெட்கப் படுகிறாயா.., பிரி.. உள்ளே இருக்கும் ஒவ்வொரு நாளின் ஏடுகளிலும் உன் இதையமும் என் இதையமும் ஒன்றோடொன்று கட்டிப் பிடித்துக் கொண்டிருப்பதை காண்பாய் பார்.. பிரி..”

“என்னால பிரிக்க முடியாதுடா மாலு, உனக்கு தெரியாதா நீ வேணாமென்று ஒதுங்கிய போதெல்லாம் உன் மேல் நான் எத்தனை காதலாய் கிடந்தேன்.. இப்போ கொஞ்சம் கொஞ்சமாக இனிப்பதை காண்கிறேன் மாலு..”

“சரி மொத்தமாக வேண்டாம், ஏதேனும் ஒரு பக்கம் எடு.., அங்கிருக்கும் கவிதை படி அதற்கான காரணமும் எப்போ எழுதியதென்றும் சொல்கிறேன்”

அவள் பிரித்தாள்…, “ஆங்.. இது நினைவிருக்கா மாலினி.., ” அவன் அவளுக்கருகில் வந்து விட்டான்..
அவளும் சற்று அவனிடம் நெருங்கி வந்து நின்றுக் கொள்ள மாலன் தன் வலது கையினை மாலினியின் தோளில் போட்டு அனைத்துக் கொண்டு இடது கையினால் நாட்குறிப்பின் ஒரு கவிதையை காட்டிக் கேட்டான்..”இது நினைவிருக்கா மாலினி?”

அவள் அந்த நெருக்கத்தை உடைத்துக் கொள்ள மனம் இல்லாதவளாய் சற்று நிமிர்ந்து மாலனின் பார்வை.. விழிகள்..இமை..நாசி..இதழ்.. என அருகருகே நகர்ந்து புன்னகை மலர்ந்து வந்து அவனை முத்தமிடும் குரலில் “ம்.., தெரிகிறதென்று சொல்கிறாள்”

அவன் சற்று விலக..

அவள் அவனின் தோல் பிடித்து “விலகாதே வா.. வந்து என் உயிர் தின்று நில்.., அருகே ஒட்டி நில் மாலன்..”என காதலில் கர்ஜித்து..”இந்த நாட்குறிப்பென்ன சொல்லும் மாலன்.. உன் சிங்கார பார்வை பார்.., உன் சிலிர்க்கவைக்கும் செவ்விதழ்கள் பார் ஆயிரமாயிரம் கவிதைகள் சொல்கின்றன..மாலன்”

“ஆம்.. மாலினி, கவிதை சொல்லும் தான்.., சிலநேரம் கவிதை இப்படி காதலிலிருந்து நழுவி காமத்தில் கூட விழுந்துவிட்டு கவிதை சொல்லும் தான்..”

“அப்படியா…………………………”

“ஆம்! மாலினி!

இதோ.. உன் மூச்சி
சுடுகிறது;
ஆனால் கவிதை!

உன் வாசம்
என் – உயிர் வரை
நனைகிறது;
ஆனால் கவிதை!

உன் தொடுதலில்
உயிரின் வேர்கள் –
சிலிர்த்து எக்காளமிடுகின்றன;
ஆனால் கவிதை!

உன் பார்வை
இதுவரை –
பருகாத மயக்கம்
கொள்கிறது;
அதுவும் கவிதை!

உன் இத்தனை
நெருக்கத்தில் –
எல்லாமே
மறக்கிறது;
இருந்தும் எல்லாமே
கவிதை! கவிதை! கவிதை!”

அவன் சொல்ல சொல்ல அவள் கையிலிருந்த அந்த நாட்குறிப்பு மெல்ல அவளின் விரல்களின் அழுத்தத்தை விட்டு விலகி, தானே தரையில் விழுகிறது.., காற்றின் அசைவுகளுக்கேற்ப தரையில் விழுந்த அந்த நாட்குறிப்பில் எழுதப் பட்ட கவிதையின் காகித இதழ்கள் ஒவ்வொன்றாய் மாறி மாறி இங்கும் அங்குமாய் பறந்து படபடக்கிறது..,

அந்த படபடக்கும் சப்தங்களில் இதையங்கள் இரண்டும் ஒன்றோடொன்றாய் சங்கமிக்க உடல்கள் இரண்டும் யதார்த்தம் உணர்ந்து படாரென தூர விலகி நின்றன.

‘டம டம..’ டம.. டம..’ சட்டென ஒரு இடி சப்தம்.

இடி இடித்து அதிர்ந்து ஒலிக்க.., மின்னல் ஒரு வெட்டு வெட்டி வெளிச்சங்களை பூமிக்கும் வானத்திற்குமாய் நனைத்துவிட்டு மறைய, அந்த வெளிச்சத்தில் நனைந்து பிரகாசிக்கும் மின்னலின் மேகங்கள் ஜொலித்து சில்லென்ற காற்றின் தொடுதலில் பட, பூமியின் மீது மழை சாரல்களாய் கொட்டோ கொட்டென கொட்டுகிறது..,

அதில் ஒன்றிரண்டு வந்திறங்கி திறந்த ஜன்னலின் வழியே மாலினியின் முகத்தில் பட்டுத் தெறித்து மாலனின் முகத்தில் சென்று விழ, மாலினியின் பழைய நினைவலைகள் கலைகிறது.., உறங்கிக் கொண்டிருந்த மாலன் திடுக்கென்று எழுந்து மழை வருவதை பார்த்து ஜன்னலை மூட..,

“அச்சச்சோ மன்னிச்சிடுங்க.., இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருப்பீங்க, மழை வரது கூட தெரியாம இருந்துட்டேன்”

“பரவாயில்லை மாலினி. நானும் சற்று அசந்து தூங்கி விட்டேன். பயணத்திற்குத் தேவையான துணிகளை எல்லாம் எடுத்துவைத்து விட்டாயா.., நேரமாகி விட்டதே.. இப்போது துவங்கினால் தான் மாலையில் புறப்பட சரியாக இருக்கும் மாலினி”

“ஆமாம் இன்று வெளியூர் பயணம் வேறு இருக்கிறதில்லையா, மறந்தே போனேன். அது எத்தனை நேரமாகி விடும, நீங்கள் தயாராகுங்கள் அதை நான் மின்னலாய் எடுத்துவைத்து விடுவேன். எத்தனை மணிக்கு புறப்படனும்?”

“ஆறு மணிக்கு விமானம் புறப்படும் . நாம மூன்று மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினா சரியாக இருக்கும்”

“எப்போ திரும்ப வருவீங்க?”

“அது தெரியாது மாலினி. அங்கே போனதும் தெரியப் படுத்துறேன்”

“இன்றைக்கு எந்த நாடு”

“மொரீசியஸ்”

“மொரீசியஸ் அழகான நாடு தானே.., அதுசரி என்ன தலைப்புல பேச போறீங்க?

“இருட்டின் வெளிச்சம்”

“தலைப்பே சூசகமா இருக்கே”

“ஆம் சூசகம் தான்.., மனிதர்களின் மன இருட்டிற்குள் இருக்கும் நம்பிக்கை.., பெருந்தன்மை போன்ற..குணங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர முயலும் தலைப்பு இருட்டின் வெளிச்சம்””ஜோர்; ஜோர்; வாங்க குளிங்க சாப்பிடுங்க கொஞ்சம் நேரம் பொறுமையா அமர்ந்து பிறகம் பேசுவோம்..”

பேசினார்கள்.., குளித்தார்கள்.., உணவருந்தினார்கள்.. நேரம் மூன்றானது. மாலன் புறப்பட்டார். மாலனை வரவேற்கத் தேவையான சகல ஏற்பாடுகளும் மொரீசியசில் நடந்துக் கொண்டிருக்க.

நேரம் கடக்கிறது..

இதோ.. இல்லை இல்லை.., அதோ.. மாலனின் விமானம் அகன்ற வானம் கிழித்து மேலே சென்று அதோ மறைகிறது..
கீழே நின்று வானில் பறக்கும் ஒரு விமானத்தை பார்த்து தன் மாலன் அதில் தான் பறக்கிறாரென்ற நம்பிக்கையில் உதடு குவித்து ஒரு முத்தம் தருகிறாள் மாலினி அந்த விமானத்திற்கு. அவளின் முத்தம் விமானத்தை தொட்டதோ இல்லையோ மாலனை தொட்டுவிட்டது..

மாலன் சற்று எட்டிப் பார்த்து எங்கு வந்திருக்கிறோம்.., மாலினி கீழே நின்று நம் விமானம் போவதை பார்ப்பாள் பாவம், அவளை இப்போதெல்லாம் இப்படி தனியாகவே விட்டுவிட்டு வந்து விடுகிறோமென நினைக்க.. மீண்டும் டம.. டம..வென இடியிடிக்க, பளிச்சென விமானத்தின் பக்கவாட்டு இறக்கையில் வெட்டிய மின்னலொன்று வெளிச்சங்களாய் மாலனின் முகத்தில் ஜொலிக்க,

விமானத்தை பார்த்து முத்தமிட்ட மாலினியின் கண்களில் அந்த மின்னல் கூச.. மின்னலின் மேகங்களாய் இருவரின் முகமும் பளிச்சிட்டது..
——————————————————————————————————-
மின்னல் இன்னும் மின்னும்; காற்றும் இன்னும் வீசும்……

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காற்றின் ஓசை - நாவல் and tagged , , , , , , . Bookmark the permalink.

5 Responses to காற்றின் ஓசை (5) சிறிது காதல்; சிறிது காமம்

 1. வித்யாசாகர் சொல்கிறார்:

  மாலனின் வாழ்வினை பற்றி சொல்லவும்.., மாலன் மனதில் பதியவும்.., சற்று காதல் சுவாரஸ்யம் கூட்டவும்.., மாலினி மாலனை வைத்து பின்னே வரும் கதையில் சில முடுச்சிகள் இருப்பதுமே ‘இந்த காதல் அத்யாயத்திற்கான காரணம் தோழர்களே..

  படித்து விட்டு எழுதுங்கள்!

  Like

 2. nellaimuthuvel சொல்கிறார்:

  Very nice conversations, Nalla arumaiyana kavithai Malargalai kathaiyudan korthu maalai aakki manam veesa seitha ungal kavithuvathai vaalthugiren

  Like

 3. C.Rajarajacholan சொல்கிறார்:

  KAITRIN OSUAI NAVAL MIGA,MIGA ARUMAI ANNA.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s