கோடி நட்சத்திரங்களில்
உயிர் பெற்றாவது
ஒன்றாக நீயிருக்க மாட்டாயா…?
உள்ளிழுக்கும் –
உயிர்வரை சுவாசத்தில்
சிறு காற்றாக நீயிருக்க மாட்டாயா…?
பொங்கும் கடலெங்கும் – அலை
முட்டும் கரையிலாவது –
உன் காலடிச் சுவடுகள் தென்படாதா..?
உயிர் குத்தி விழியசையும்
காட்சிகளிலெங்கிலும் –
நீயாக நீயாக – நீயாக இருக்கக் கூடாதா..?
உயிர் கொள்ளும் இதய நெருப்பில்
நானழிந்தாவது –
நீயாக மாட்டாயா..?
உடல் கொள்ளும் கட்டில் பசிக்கு
ஒரு கனவிலாது வந்து –
உயிர் மீட்டுத் தருவாயா..?
சுடர் மின்னும் தீக்
காட்டில் –
ஒரு பிணமெரியும் காட்சி கண்டேனே..,
பிணம் அதுவா..?
பிணம் நானா..?
உன் நினைவேன் தனிமையை கேட்கிறதே..?
ஒரு வானம்; ஒரு பூமி;
ஒரு காற்று; ஒரு தண்ணீர்;
ஒரு உறக்கம்; ஒரு பசி;
இந்த உலகம்.. இந்த வாழ்க்கை-
எல்லாம் உன்முன் – தோற்கிறதே..?
ஒரு தொடுதல் -ஒரு பார்வை;
ஒரு சிரிப்பு – ஒரு சப்தம்;
உயிர் மிஞ்சும் விலை பேசி
குவைத்தின் பணம் தான் –
கொள்ளை கொள்கிறதே..?
இரண்டாய் – மூன்றாய் வருடங்களை
தலை மேல் சுமந்து –
உனக்கும் எனக்குமாய் – இதயம்
அறுகிறதே..?
கடுங்குளிர் – கடும் வெயில்
இங்கே சுடவில்லை;
என்னை தொடவில்லை;
மீளா உன் பிரிவே –
வலியென வலியென.. என்னை வதைக்கிறதே!