வணக்கம்!
ஒரு உயிருள்ள காதலில் உயிர்த்தெழுந்த கவிஞரிவர்; காலம் திரும்பிப் பார்க்கும் புனித காதலின் பயணமிது. வாழ்தலின் அர்த்தத்தில் பொருள்பட்ட உணர்வுகளின் படைப்பு இது. ஒரு சாமானியன் தன் காதலியின் பிரிவில் வாடி உருகி கசிந்து கரைந்த கண்ணீர் சாரைகள் கோர்த்து கவிதையில் ஆறுதல் பெற்றுக் கொண்ட ஒரு சுவாசத்தின் உயிர்ப்பு இது.
சாலையின் வாகன சப்தத்திலும், முடி திருத்தி உதிரும் ஓசையிலும், வந்து போனவர்களின் பொழுதுபோக்கிற்காக வைத்த வானொலி மற்றும் தொலைகாட்சி அலறல்களுக்கு மத்தியிலும் ஒரு பிரிவின் கூக்குரல் வந்து கவிதையாக புனைந்து கொண்ட தொகுப்பே இங்கு முதல் படைப்பாக அரியணை ஏறியுள்ளது.
டைரியும், கடிதமும் – எழுதி; வெளிவராத காவியத்தின் சில பக்கங்கள் தானெனில், இருபது வருடங்களை சுமந்த ஒரு உண்மை காதலின் காவியம் தானிங்கே எழுத்து கவசம் பூண்டுள்ளதென்பதை உரக்கவே சொல்ல முனைகிறேன்.
இப்படைப்பில், கவிதையின் சந்தமும் – இலக்கிய ஆழமும் ஆங்காங்கே விடுபட்டிருந்தாலும் அவைகளை தாண்டி இரு இதயங்களின் உயிர்ப்பிங்கே கவிதைகளாக அடையாளம் கொண்டு விட்டிருப்பதை மறுப்பதற்கில்லை.
எங்கோ என்றோ நமக்கான காதலை, மனசை – தொலைத்து விட்டுத் தானே நம்மில் நிறைய பேர் உயிர்கொண்டுள்ளோம். அந்த உயிர்கொள்ளலின் இரவுகளில் யாருக்கும் தெரியாமல் அழும் நிறைய பேரின் கண்ணீருக்குத் தான் கவிஞரிங்கே கவிதை உருவம் கொடுத்துள்ளார்.
தமிழுலகம் இதயம் வருடும் உணர்வுகளை தனக்குள் பதிவுகளாக்கிக் கொண்டு தானிருக்கிறது என்பதற்கு இந்த புதுக் கவிஞனின் படைப்பு ஒரு மகுடம் சூட்டும் ஆதாரம்.
“வாயிருந்தும் .ஊமையானேன்
கண்ணிருந்தும் குருடனானேன்
வார்த்தைகளிருந்தும் கோழையானேன்;
உன்னை பார்த்த இடமெல்லாம்
கேலி செய்கிறது –
உனக்காக செலவழித்த
காலமும் கைக்கொட்டிச் சிரிக்கிறது;
பொய்யான உலகத்திலே
உண்மை வேஷம் போட்டதினால்
பைத்தியக்கார வேசத்திற்கு ஆளானேன்” என்று கலங்குகிறார் பாருங்கள்; அங்கே படிக்கும் இதயங்கள் உடயாமலில்லை.
“குருதித் துடிக்கிறது
தன் மானத்தை இழக்கும்
தமிழனின் நிலை கண்டு;
விழிகளில் உதிரம் வடிகிறது
படித்தவனும் –
மூடனாய் இருப்பது கண்டு” என்றும்
“சிவப்பு விளக்கின்
பறவைகளே;
இரைக்காக சதை விற்கும்
அவலங்களே” என்றும் சமூகத்தின் அக்கறைக்கான சாடல்களும் இக்கவிஞனிடத்தில் இல்லாமலில்லை.
“உன் நினைவென்னும் கானகத்தில்
தவிக்கவிட்டு –
நீ சென்றாய்….
பருவ உணர்வை எரியவிட்டு
எரிந்த சருகாய் –
ஆக்கிவிட்டாய்…
காய்ந்த உள்ளம்
காய்ந்தது தான்
பட்டமரம் –
பட்டது தானென” எண்பதுகளில் வெளிவந்த சில பாடல்களை நினைக்கவைக்கும் ஒரு எழுத்து சுரங்கத்தை தன் பதிப்புத் திறனால் கவிஞனாக்கிவிட்ட மணிமேகலை பிரசுரத்தாரை எப்படி பாராட்டுவதோ.
கவிதை என்றாலே ஏதோ பிடிக்காத ஒரு பண்டம் தின்றவரைப் போல் முகம் சுளிக்கும் சிலருக்கு மத்தியில் இதுபோன்ற புதிய படைப்பாளிகளுக்கு தன் வாசலை எப்பொழுதும் திறந்தே வைத்துள்ள ஐயா ரவி தமிழ்வாணன் அவர்களுக்கு நன்றிகள் பல கூற தமிழ் சமூகம் கடமை கொண்டுள்ளது.
வஞ்சம் செய்யா தமிழுலகம் நெஞ்சம் குளிர இப்புதுக் கவிஞனையும் வாழ்த்தி வரவேற்றுக்கொள்ளும் என்பதில் எனக்கும் ஐயம் சற்றுமில்லை என்றாலும், இன்னும் எண்ணிலடங்கா உயர் படைப்புகளை தந்து பல கவிஞர்களின் வரிசையில் தனக்கும் நிலையான ஒரு இடம் பிடிக்க நாமும் மனதார இக்கவிஞனை வாழ்த்தி, தன்னாலும் ஏதோ முடியும் என்பதை ஒரு படைப்பின் மூலம் நிரூபித்த நண்பர் ஜெ.முருகன் அவர்களை பாராட்டி
இவருக்கான வாசலை திறந்து வையுங்கள் தமிழ் நெஞ்சங்களே என்று வேண்டி விடைகொள்கிறேன்.
அன்புடன்
வித்யாசாகர்
(கவிஞர் எழுத்தாளர் நாவலாசிரியர்)
11, சூர்யகார்டன்
குமரன் தெரு,
மாதாவரம் பால் பண்ணை,
சென்னை – 600 051
தொலைபேசி: 25942837
http://www.vidhyasaagar.com