அரைபெடல் அடித்தே
உலகம் சுற்றிய காலமது!
விழுந்து முட்டி உடைந்த
பல தடவைக்குப் பிறகும் –
மிதிவண்டி ஆசை விட்டதேயில்லை!
அப்பாவின் –
பழைய ராலி சைக்கிள் தாண்டி
BSA SLR கனவு மிதிவண்டியாகவே
கடந்துவிட்டது வாழ்க்கை!
நானும் அண்ணனும்
ஊர் ஊராய் சுற்றியதும்;
என் ஒரே தங்கை
இறந்துப் போவாளென்று தெரியாமல்
அவளை மிதிவண்டியில் ஏற்றிச் செல்லாததும்;
அப்பா மிதிவண்டி ஒட்டி மூச்சிரைக்க
நான் வாங்கி ஒட்டியதும்;
பள்ளி விட்டு வரும் அவளை பார்ப்பதற்காக
எட்டுப் பத்து மைல் தூரத்தை
கால்-அரை மணிநேரத்தில் –
வியர்க்க வியர்க்க ஓட்டிக் கடந்ததும்;
எங்கள் வீட்டு ஜூலி
எகுறி எகுறி – என் மிதிவண்டியின் வேகத்திற்கு
தெருமுனை வரை நாலுகால் பாய்ச்சலில் வந்து
வழியனுப்பி விட்டுச் சென்றதும்;
எத்தனையோ முறை பஞ்சர் போட பணமில்லாமல்
பணமிருந்தால் கடையில்லாமலும் –
எங்கெங்கிருந்தோ மிதிவண்டி தள்ளிக் கொண்டு
வீடு வரை நடந்து வந்ததும்;
அடிக்காத பெல்லும்
கட்டை தேய்ந்து பிடிக்காத ப்ரேக்கும்
கழட்டி தூக்கி எறியத் தோணாத டைனமோவும்
செயின் கழன்று கழன்றும் வரும் மிதிவண்டியில்
அவசர அவசரமாய் வேலைக்குப் போனதும்;
ஓர் நாள் திடீரென
தங்கை இறந்துவிட்ட சேதி கேட்டு –
நானும் தம்பியும்
அழுகை மீறி; மிதிவண்டியோட்ட திராணி போதாது
மிதிவண்டியை தெருவிலேயே போட்டுவிட்டு
இறங்கி – கத்தி – கதறிக் கொண்டே
ஓடி வருகையில் –
என் தம்பி மட்டும் ஒரு நிமிடம் நின்று
தெருவில் –
அனாதையாய் சாய்ந்துக் கிடந்த மிதிவண்டியை
பார்த்த பார்வையின் நினைவுகள் –
இதயத்தில் –
கோடு கோடுகளாய் .. கோடு கோடுகளாய்
நீள்கின்றன!
————————————————
வித்யாசாகர்
வருணனை மேல்பூச்சுகள் இல்லாமல் அனுபவங்களை நேரடியான சொற்களில் பதிவு செய்கிறபோது, கவிதைக்கு ஒரு தனி அழுத்தமும் ஆழமும் கிடைத்துவிடுகிறது. வாழ்த்துக்கள்.
கவிதையின் ஆரம்பத்தில் நானும் அண்ணனும் என்று வருகிறது, பிற்பாதியில் நானும் தம்பியும் என்று வருகிறது. அது பிழையா அல்லது மூன்று சகோதரர்களைப் பற்றிச் சொல்கிறதா கவிதை?
http://www.vaarthaikal.wordpress.com
LikeLike
மிக்க நன்றி சார்ல்ஸ். நாங்கள் ஐவர். நான்கு சகோதரரர்கள்; ஒரு தங்கை. கவிதை பிழையில்லை. ஓரிடத்தில் அண்ணன் மற்றொரு இடத்தில் தம்பியை காட்ட முயற்சித்துள்ளேன். மிக்க நன்றி!
LikeLike
இது மற்றோருக்கு கவிதையாக தெரிந்தாலும் எனக்கு அது உங்களின் உள்ளக் குமுறல் என உணர முடிகிறது!!! வித்யாவின் நினைவு உங்களுடன் வாழ்வதை உணர்கிறேன்!
LikeLike
வலி; நெருங்கியவர்களுக்கே – புரியவருகிறது சகோ!
LikeLike
பதின்பருவத்தை மிதித்து கடக்கின்ற நடுத்தர வர்க்ககனவு…எனக்குகூட பல்லுடைந்த .நினைவு….
LikeLike
நிறைய பேருக்கு உடைந்த பல்லை நினைவுறுத்தத் தான் ஐயா என் உணர்வுகள் கூட கவிதையானது. நினைவு கூர்ந்ததில் வரிகளை கவிதையாக்கித் தந்துவிட்டீர்கள். மிக்க நன்றி சிவசங்கரன்!
LikeLike