கண்ணாடியின் அழகு
உனை கண்ட பிறகு தான்
தெரிந்தது.
அதிலும் நீ
உன் கண்ணாடியை மேலுயர்த்தும் போது
லேசாக எச்சில் விழுங்கி
பாதி சிரித்து
இன்னொரு கையில்
நெற்றியில் விழுந்த முடியை
தள்ளிவிடும் அழகு
அழகு தான்;
அப்போதெல்லாம் உனை ரசித்த
ரசிப்பின் ஈர்ப்பில் தான்
நீயும் நானும் –
கல்லூரியிலிருந்து வீடுவரை
இச் சமூகத்தின் எதிரியானோம்.
சற்று நாள் கழித்து
சற்று தூரத்தில் நின்றே பேசுகையில்
பட்டும் படாமல் நடந்துக் கொள்கையில்
அண்ணன் தங்கை போல்
என்றார்கள் ஊரார் நம்மை.
பாழாய் போன ஊர்;
எதனையேனும்
சொல்லிப் போகட்டுமென
விட்டதில் –
உனக்குப் பெண் பார்ப்பதாய் சொல்லி
எனக்குப் பார்த்து
நிச்சயித்து
கனவு போல் இருக்கிறது
எனக்குத் திருமணமானதும்
நீ செய்துக் கொள்ளாததும்.
கடைதெரு செல்ககையில்
காய்கறி வாங்கி வருகையில்
தெருவெல்லாம் நடந்து போகையில்
நீயும் நானும் –
சேர்ந்து திரிந்த நினைவுகள்
கல்லும் முல்லுமாய் கல்லும் முல்லுமாய்..
காலிலும் நெஞ்சிலும்
தைக்காத பொழுதில்லை.
இன்று; இதோ..
இரண்டு மூன்று வருடங்களை குடித்து விட்ட
ஒரு மாலை பொழுதில்
வீடேறி வருகிறாய்,
சோகத்தை பவுடரில் மறைத்து
லேசாக நீ புன்னகைத்ததில்
உடம்பெல்லாம் ஏதோ
உயிர் பூ பூக்கிறதெனக்கு.
சுடிதார் புடவையாகவும்
ஆசைகள் மெலிந்த உடலாகவும்
வருடங்கள் மூன்றில் தொலைந்த
சிரிப்பாகவும் –
நீ என் மனைவியிடம் பேசிக் கொண்டிருக்கையில்
யாரையோ பார்ப்பதுபோல்
உனக்குள்ளிருந்து உயிர்பெற்று உயிர்பெற்று
உனையே பார்க்கிறேன் நான்.
திரைப்படங்களில் வருவது போல்
உன் புகைப்படம்
நீ கொடுத்த நினைவு பரிசு
நான் சேகரிப்பதாய் சொன்ன – உன்
துண்டு வளையல்கள்
எழுதி முடிக்காத உன் கடிதங்கள்
எதையேனும் வைத்திருப்பேனா எனப்
பார்க்கிறாய்.
என் மகள் ஓடி வந்து
உனை யாரென்றுக் கேட்டதில்
என் மனைவி அத்தை என்று
அறிமுகம் செய்து வைத்ததில்
குழந்தையின் பெயரும்
நீயும் –
முழுதுமாய் என்னிடமிருந்து
அந்நியப் பட்டிருப்பதை உணர்ந்திருப்பாய்.
அம்மா வந்து
உனை வரவேற்று
விசாரித்த விசாரிப்புகளுக்கிடையே
நீ நாளைக்கு எங்கோ
போகப் போவதாகவும்
வேறு மாநிலமென்றும்
திரும்பி வரப் போவதில்லை என்றும்
சொன்னதில் –
நான் எத்தனை உடைந்திருப்பேனென
நீ புரிய நியாயமில்லை தான்.
வெகு நாட்களுக்கு பிறகு
யாறுக்கும் தெரியாமல் அழுத
அழைகளுக்குப் பரிசாக
நீ வந்திருப்பதாக எண்ணுகையில்….
இதோ –
வாசலில் இறங்கி விட்டாய்
விடை பெறுவதாய் எல்லோருக்கும்
கைகாட்டி சொல்லிவிட்டாய்
போகிறேனென்கிறாய்
ஒரு ஐந்து நிமிடமின்னும்
இருந்துப் போயேன் என
மனசு கெஞ்சுகிறது.
உனை கடைசியாய் பார்ப்பதான
உயிர்மெல்லும் –
ஏக்கப் பார்வையோடு பார்க்குமென்னை
வெகு இலகுவாய் அழைத்து
போய் வரேனென்று சொல்லி
என் மனைவி திரும்பும் நேரம் பார்த்து
எதையோ என் கையில் திணித்துவிட்டு
விசும்பியவாறே அதோ ஓடுகிறாய்….
உன் விசும்பலின் சப்தத்தில்
உடைந்துப் போய்
தெருவையே வெறித்துப் பார்க்கிறேன்
தெருவின் முக்கால் தூரம்
நீ போனதும் –
என்ன கொடுத்தாயெனப் பார்க்க
கை விரித்தால் –
மரணம் என்றெழுதியிருக்கிறது ஒரு தாளில்.
நிமிர்ந்துப் பார்த்தால்
தெருவில் நீ –
விழுந்துக் கிடக்கிறாய்
எல்லோரும் ஓடி
உன்னை தூக்கி நிறுத்துகிறார்கள்
நீ மீண்டும் மீண்டும்
கீழே விழுகிறாய்
நான் அங்கேயே நிற்கிறேன்.
மரணத்தை
நீ பாதி தின்றுவிட்டு
எனக்கு மீதியை தருவாயென
இந்த உலகிற்கு
அன்றிலிருந்தே புரியவில்லை!
—————————————————-
வித்யாசாகர்
idhayatthai kavidhaiyaal ippadi udaikkireergale vidhya..
nalla ezhudi irukkinga vaazhtthukkal
LikeLike
இதயத்தை உடைக்கும் திறன் கவிதைக்கு உண்டு. கவிதையால் இதயங்களை இணைக்கவே விரும்புகிறேன் மனோ; இந்த உடைதலில் இதயங்கள் இணையுமென்றே நம்புவோம், மிக்க நன்றி!
LikeLike
அண்ணா என்னுடைய பழைய நினைவுகள் நினைவில் வந்தது. சிறிது நேரம் உலகம் மறந்து போய்விட்டேன். உங்களின் கவிதைகளுக்கு என் இதய வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
LikeLike
நல்லதுப்பா. எங்கோ யாரோ தொலைத்த நினைவுகளை திரட்டுகையில் நான் உள்வாங்கிய அனுபவத்தின் வாயிலாக தானே கவிதை வெளியேறுகிறது. வலியை படிக்கையில் வலி வலிக்க செய்ததது போல். வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சோழன்!
LikeLike
//கல்லூரியிலிருந்து வீடுவரை
இச் சமூகத்தின் எதிரியானோம்//.
எதிரெதிர் துருவங்கள் இணைகிறபோது அதிர்வுகள்…..அளவெடுத்த வரிகள்….
LikeLike
ஆம்; அதிர்வுகளுக்கு உட்பட்டுப் போனதில்; அளவெடுக்க சிரமமேற்படவில்லை தான்!
நிஜமும் கற்பனையும் போட்டிபோடுகையில், கற்பனை மிஞ்சுவதில், கவிதை உலகத்திற்கான பார்வையில் பூப்பதில், உண்மையும் சற்று; மிக சற்று வெளிப்படுவதை தடுக்க முனைவதில்லை தோழர்!
LikeLike