அன்புடையீர் வணக்கம்,
தமிழுலகம் சில காலம் தவறவிட்ட ஒரு படைப்பாளி ச.சக்திவேல். வாழ்வின் ரசனைமிக்க ஒரு நல்ல மனிதரின் சமூக பார்வை கவிதையாகியும் காலம் கடந்து கிடைத்ததன் வருத்தம் எழத் தான் செய்கிறது. அப்படிப்பட்ட படைப்போடுத் தான் தன் முதல் பயணத்தை தொடங்கியிருக்கிறார் இந்த ச.சக்திவேல்.
எனக்குத் தெரிந்தே பல மேடைகளை அலங்கரித்து, எண்ணற்ற கவிதைகளை படைத்து, கவிதைகளுக்கு ஏற்றார் போல் அழகிய சித்திரங்களும் அமைக்கும் தரமான ஓவியரிவர். லெப்ட்ல கட் பண்ணி ரைட்ல கட் பண்ணும் ஆங்கில மோக மக்களிடையே அழகாக தமிழ் உச்சரிக்கும் அருமை குணம் படைத்த மனிதர். என் கவிதைகளின் ரசிகன். என் கவிதைக்கான குரலை தமிழக மேடைகளில் ஒலிக்கச் செய்த முதல் பற்றாளர் இந்த ச.சக்திவேல்.
எழுதும் எவர்க்கும் உதவும் நோக்குக் கொண்ட இந்த படைப்பாளிக்கு தன் படைப்பை கொடுக்க ஏனோ நரை தட்டியே போய்விட்டது.
தமிழ் தமிழர் என்று; ஏதோ இரு நிறுவனங்களை கொண்டவர்களை போல, தமிழ் தமிழன் பெயர் சொல்லி பிழைப்பு நடத்தும் போலிகளுக்கு மத்தியில் தமிழுக்காய் தமிழருக்காய் வெளியில் தெரியாமல் உழைத்து எண்ணற்ற பொது சேவைகளில் ஈடுபட்டு வரும் உன்னத மனிதரிவர்.
காதல் மலர்களை தூவி மனமெழுப்பி; மையமாய் சமூக சாட்டை சொடுக்கும் ஒரு அற்புதமான படைப்பையே தன் முதல் படைப்பாய் கொடுத்திருக்கிறார் இந்த கவிஞர். முதிர்கன்னி என்றொரு கவிதையை பாருங்கள் –
“நாளை –
எனக்கும் மணமாகி மாமியாராகின்
மகனுக்கு –
நானும் சீர் தேடுவேன்;
காரணம்,
நாமெல்லாம் –
பிறரிடம் மட்டுமே நியாயம் நோக்கும்
மனிதப் பிறப்பன்றோ” வென நோகிறார் பாருங்கள்.
இன்னொரு கவிதையில் –
“நம்மை –
சுற்றும் கோயில்…
கருவறை உள்ள
கடவுள்..
நாத்திகனும் நம்பும்
தெய்வம்..
தாலாட்டுப் பாடும்
தேசியகீதமென” தாயைய் பற்றி புதிய வார்த்தைகளில் ராகத்தில் பதிவு செய்திருக்கிறார்.
அதோடு நின்று விடாமல் இறைவன் என்றொரு கவிதையில் –
“ஓரறிவு முதல்
ஆறறிவு வரை படைத்த
உன்னத பகுத்தறிவு;
தலையெழுத்தை எழுதும்
சுருக்கெழுத்து கடவுள்” என்றெல்லாம் மிக அழகாக கற்பனை செய்துள்ளார் இந்த ச.சக்திவேல்.
இதலாம் தாண்டி, யாரிடமோ சொல்லாத தன் காதலை பொத்திவைத்து பொத்திவைத்து கவிதை சரம் தொடுத்த ‘ஒரு காதலனின் அழுகுரல் – ஆங்காங்கே கவிதைக்கான இலக்கணத்தை விட்டு தள்ளி நின்றிருப்பது தெரிந்தாலும்’ கண்ணீரால் நம் இதயம் நனைந்து போகுமளவிற்கு தன் கவிதைகளை படைத்துள்ளார் இவர்.
இருப்பினும், ஒரு குழந்தைக்கு பிறந்த உடன் பெயர்வைக்கும் அவசரம் இந்த கவிஞருக்கு குழந்தை வளர்ந்த உடன் தான் புரிந்துள்ளது. ஏனெனில் கவிதை காலத்திற்கேற்றார் போல தன்னையும் மாறுபடுத்திக் கொள்கையில்; இவர் பத்திருபது வருடங்களுக்கு முன் வெளிவந்த பாடல்களுக்கான வரிகளை கவிதைகளாக காலம் கடந்து தொகுத்திருக்கிறாரே என சொல்லத் தான் வைக்கிறது இவரின் படைப்பு.
எனினும், எழுதுபவர்களுக்கு எழுத்து கைகூடி, கைகூடிய எழுத்து ஒரு நாலு பேரையாவது கவரப் பட்டு, கவரப்பட்ட கவிதைகளை ஒருசேர தொகுத்து, தொகுத்த கவிதைகளை புத்தகமாக்க பிரசுரத்தை தேடியலைந்து, பிரசுரத்திற்கு தன் கவிதைகள் பிடித்து, பிடித்த கவிதைகளை ‘ஒரு புத்தகமாக்கி வெளியிடுவதென்பது ஒரு பிரசவத்திற்கு சமம்தான்.
அந்தவிதத்தில் இக்கவிஞரின் முதல் பிரசவம் காலத் தாமதமாக நிகழ்ந்திருந்தாலும்; இனிவரும் காலமாவது இவருக்காக கைத் தட்டட்டும். மேடைகளில் முழங்கும், டைரிகளில் எழுதும், சித்திரத்தில் தீட்டப் படும் இவரது படைப்புகள் இனியாவது தமிழ் சமூகத்தால் மென்மேலும் கவரப் பட்டு மெச்சப் படட்டும். இன்னும் பல அரிய படைப்புகளை தந்து; தமிழுலகின் தீரா தாகம் இவரின் எழுத்துப் பயணத்தால் தீரட்டும்.
அதற்கு துணை நின்று; சாமானியர்களை கவிஞராக கவுரம்கொள்ளச் செய்யும் மணிமேகலை பிரசுரத்தார்க்கும் நன்றிகளை ‘மகுடமாய் சூட்டி, கவிஞர் ச.சக்திவேலை மனதார வாழ்த்தி, இந்த கவிஞருக்கான வெற்றியை முழுக்கமுழுக்க தனக்குள்ளே வைத்திருக்கும் வாசகர்களை அவருக்கான வெற்றியை அவரிடமே கொடுத்து விடுங்களென கேட்டு பேரன்புடன் விடைகொள்கிறேன்.
—————————————————————————————————
வித்யாசாகர்
(கவிஞர் எழுத்தாளர் நாவலாசிரியர்)
11, சூர்யகார்டான்
குமரன் தெரு,
மாதாவரம் பால் பண்ணை,
சென்னை – 600 051
தொலைபேசி: 25942837
http://www.vidhyasaagar.com