முத்தம் கொடுக்கும் ஆசையிலேயே
வாழ்க்கை – கணக்க
முகம் பார்கவே வருடம் இரண்டு ஆகுதடி;
காமம் தலைக்கேறி அமர்ந்து
உடல் வருத்தியும் –
உள்ளம் உனக்காக உனக்காக – உனக்காகவே
நரை தின்று வாழுதடி!
குளிர்பெட்டி தின்ற மிச்ச மீதியில்
உடல் கட்டை பிழைக்குதடி –
இது வாழ்க்கை இல்லை – விதிதானே
நிமிஷம் கூட வலிக்குதடி!
கட்டில்சுகம் பெரிதில்லை – உன்னை
தொட்ட சுகம் போதுமடி;
மிச்சமீதி கடலளவு – உன்
அலைபேசி சிரிப்பில் மறக்குதடி!
மண்ணும் பொன்னும் பெரிதில்லை – உன்
மனசும் வயசும் வாழ்க்கையடி;
மகமூனு பெத்துட்டோமே – இனி
குவைத்தோ துபாயோ சாபமடி!
தெருவில் நடந்த வீரமெல்லாம் – இங்கே
செருப்படி பட்டுக் கிடக்குதடி;
அரபி அழைக்கும் “ஒமாருக்கு’ ஏழ்மை
ஆயிரம் கும்பிடு போடுதடி!
தூக்கியெறிஞ்சா ஒரு நிமிஷம் –
அரபியும் அவனப்பனும் தூசியடி;
பொண்ணுங்க படிக்கக் கட்டும் -பணம் வந்து
நடுவில் நின்னு சிரிக்குதடி!
லட்சியமும் தன்மானமும்
கடவுசீட்டில் பொதிஞ்சதடி;
செரிக்க முடியா அவமானமெல்லாம்
நெஞ்சுக் கூட்டில் நிக்குதடி!
எப்படியோ வந்துபோன
விடுமுறையில் –
நான் ஆம்பளைன்னு காட்டியாச்சேடி;
உன்னை அம்மாவாக்கி சிரிச்சதுல
மூணு பொன்னும் இப்போ –
பாரமாச்சேடி!
மண்ணு தின்னும் செத்த மனிதர்காவது
உலகம் பிணமின்னு பெயர் சொல்லும்
சொல்லட்டுமேடி;
வறுமையின் விரக்தியும்
ஏக்கமும் தின்று செரிக்க –
‘எங்களுக்கு என்ன பெயர் மிச்சடி???
—————————————–
வித்யாசாகர்
Some spelling mistakes are there. Please correct.
Few here:
/பொன்னும்/ பொண்ணும்
/விரக்த்தியும்/விரக்தியும்
/மூனு/மூணு
LikeLike
மிக்க நன்றி தோழர். செய்துவிடுகிறேன்…
LikeLike
திரு. செல்வராஜ்,
திருத்தவேண்டியது “விரக்த்தியும்/விரக்தியும்” மட்டுமே. திருத்திவிட்டேன். தங்களின் மேலான அக்கறைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்!
LikeLike
குறிப்பு: அரபியில் ‘ஒமார்’ என்றால் கழுதை, இந்த தேச ஜாம்பவான்கள் நம்மை போன்றோர் சற்று தாழ்ந்த பணிக்கு வந்து விட்டால் அவர்களை பேருக்கு பதிலாக இப்படி அடிக்கடி அழைக்கும் ஒரு கூப்பு ‘ஒமார்’
LikeLike