நீ அழுகின்ற ஒருசொட்டுக் கண்ணீருக்கு
என் உயிரு உருகுதடி; இப்படி
இரவில் அழுது தீர்த்த வருடங்களெல்லாம்
நமக்கு வாழக் கிடைக்காத வாழ்க்கையடி…!
இரவு மூணு மணிக்கும் நாளு மணிக்கும்
சூரியன் வரமாலேயே – பொழுது விடியுதடி;
இரவு பத்தோ-பன்னிரண்டோ ஆனாக்கூட
உன் நினைவில் உயிருருக –
தூக்கமெல்லாம் எங்கோ மறைந்து தொலைக்குதடி!
நீ பேசும் குரல் கேட்க – குவைத்தின்
மாதச் சம்பளத்தில் பாதி குறையுதடி; இடையே
பேசமால் சேர்தனுப்பிய பணத்தில் உயிர்மெல்ல-உயிர்மெல்ல
விலகி ஆயுளைப்பாதியாய் குறைக்குதடி!
தெருவெல்லாம் நடந்து திரிகையில் – உன் நினைவில்
காற்றாய் கரைந்து – நேரங்கள் வருடமாய் நகருதடி;
வீட்டில் வந்து படுக்கையில் விழ்ந்தாலோ
நொடிகளெல்லாம் யுகமாய் காமச்சூட்டில் வேகுதடி!
கைத்தட்டி-வாய்பொத்தி- புலனடக்கி வாழுகையில்
இதற்குத்தான் வழ்கையான்னு
மனசெல்லாம் வலிக்குதடி;
காலமிட்ட சாபமிது ‘பிரிவின் வேதனை’ முற்றிலும் நரகமடி!
நீயும்-நானும் பேசிய கதைகளாயிரம்
நித்தமும் நினைவில் இனிக்குதடி;
நீயழைக்கும் ஒரேவொரு ‘என்னங்க’ கேட்க
வருடங்களிரண்டு கொள்ளுதடி.. கொல்லுதடி!!
நான் உதைத்த உதையின் ‘வலி’
என் தாயின் வயிறறியுமா தெரியலடி;
நம் பிள்ளை உதைக்காமல் வலிக்கும் வலி
அவனைப் பிரிந்தபின் தான் உரைக்குதடி!
அவன் பேசும் பொற்சித்திரம் போல்
கையசைத்துக் கொஞ்சிச் சிரிக்கும் கடவுளோடி;
நீ வயிற்றில் சுமந்த பத்துமாதம் – நான்
மனதில் சுமந்த ‘வாழ்வின் அர்த்தமடி!’
அவன் பிறந்த சேதியை – தொலைபேசியில் கேட்டு
சிரிக்க முடியாமல் அழுதது ‘கொடுமையடி;
அவன் ‘அப்பா!’ என்றழைத்த – முதல் குரலை
நான் தொலைபேசியில் மட்டும் கேட்ட பாவியடி…!!
——————————————————–
வித்யாசாகர்
அழவைக்கிறீர்களே வித்யா. கலங்காத நெஞ்சும் பிரிவுக்குப் பின் கண்டால் கலங்குமே. அருமையான கவிதைகள்
LikeLike
அழுத கணங்கள் எத்தனை எத்தனையோ. அவற்றில் பதியத் தக்க பொது மானுட வலி; இது பரவலாக நம்மை போன்று வெளிநாட்டு வாசிகளுக்கு சபிக்கப் பட்ட பிரிவின் துயர், ஒரு வீட்டின் அனைத்து இயக்கமுமாய் இருக்கும் பெண் இல்லாத இடம் எத்தனை துன்பத்திற்குரியது என்பதை இருக்கும் பொது நாம் உணர்ந்துக் கொள்ளும் நோக்கிலும் புனையப் பட்டக் கவிதைகள் இந்த பிரிவுக்குப் பின்.
அந்நிய தேசத்தில், அதிலும் குறிப்பாக வளைகுடா நாடுகளில் வெயில் குளிர் மணல் காற்றென பிரிவுக்கு இடையேயும் துடிக்கும் நெஞ்சங்கள் ஏராளம். அவர்களின் வலி இப்படியும் இருக்கலாமோ என நம் தேசத்துப் பெண்களில் ஒரு சாராராவது புரிந்து வாய்ப்பேற்படும் பொழுதுகளில் அவர்களிடம் அன்பு கொண்டிருக்கவும் மற்றும் பெண்களின் இருப்பின் மகத்துவத்தை இல்லாமையில் உணர்ந்து இருசாராரும் ஒருங்கிணைந்த குடும்ப வாழ்வை முழு அன்போடு வாழ்ந்து சிறப்பிக்கவும் ஒரு எச்சரிக்கை உணர்வாகத் தான் இந்த பிரிவுகளின் வலிகளின்கே பதியப் பட்டுள்ளன மனோ. மிக்க நன்றி!
LikeLike