என் ஜன்னலோரத்தில் நுழைந்த சப்தம்
காதை எரிக்கையில் –
ஜன்னல் திறந்து – சற்று வெளியே பார்க்கிறேன்
அதோ –
ஈழமொரு சொட்டு நம்பிக்கையில்
ஒட்டிக் கொண்டிருக்கிறது,
உலகம் எங்கோ தன் தலையை திருப்பி
வலியவன் தோள் தேடி அலைகிறது,
ஓடி –
ஒரு வார்த்தை ஏனென்றுக் கேட்டிடவோ –
என் உயிர் தந்து தேசம்
மீட்டுமுணர்வை கூட்டவோ
தினவற்றுப் போனேனே;
நாட்கள் நகர்ந்து –
ஈழம் விட்டெங்கோ போகும் வேகத்தால்
சுயம் வெட்கும் ஆளானேனே..
ஈழம் பற்றி செய்தியின்று
அமைதி கொண்டு போனதுவோ???
அமைதி விழுங்கிய மயான கனத்தில்
எம்பாட்டன் முப்பாட்டன் பிள்ளை வரை
தமிழ் ஜாதி புதைந்துப் பழசாகிப் போனதோ???
வரலாறு தன் பொன்னேட்டில்
வியந்து பதித்துக் கொண்ட இனமிங்கே
புல்பூண்டு முளைத்து வெடிசப்தங்களை மட்டும்
நினைவுகளாய் காதுகளில் பதிந்துகொண்டனவோ???
தமிழன் வென்ற இடத்திலிருந்து
பயம் கொண்ட உலகமிது – நமை
மென்று விழுங்கி ஏப்பமிடுகையில்
சிங்களனென்று சொல்லத் துடிக்கிறதோ???
உலகின் பார்வையில் –
உதவியற்றுப் போனாலென்ன ,
உயிர் அறுக்கும் கொடுமை கண்டு
தடுக்கும் மனிதமற்றுப் போனதே, கொடுமை.. கொடுமையில்லையா???
காடுகளில் என் இனம்
திரிந்த வலி போகட்டும்,
வருடங்களில் வாழ்வை தொலைத்து
அற்ப வெடிக்கு உயிர் துறந்த
போராளிகளின் தியாகம் போகட்டும்,
பால் சுரந்து காட்டில் பீய்ச்சிட
வெறும் வீடு வளர்த்த பிள்ளைகளையும்
சிங்களர் சுட்டுக் கொன்றது போகட்டும்,
விடுதலையென்னும் ஒற்றை வார்த்தை சுமந்து
பள்ளிக்குச் சென்ற குழந்தைகளையெல்லாம்
பதுங்குக் குழியில் தள்ளி எரித்தார்களே ஈனர்கள், போகட்டும்
கைகட்டி மரமாக்கி
கண்முன்னே கற்பழித்த தாய் தங்கை
யாரானாலென்ன போகட்டும் போகட்டும்,
இன்னும் என்னென்ன போகவோ எம்-பிறப்பு.. மானிடமே???
சுட்டுக் கொன்று மேலேறி
முலையருத்து –
வெற்றி சங்கூதிய போர்நெறி காத்த சிங்களரா
நீதி கொண்டார்??????????
எந்த நீதி எந்த கடவுள்
எவர் வந்து எமை காப்பவரோ…
எல்லாம் அற்று போய்
தனியே நின்று மயானம் வெறித்து
எங்கேனும் என் தாயின் உறவுகளின்
ஏதேனும் ஒரு அடையாளம்
என்ன ஆனார்களென்றாவது பதிந்திருக்காதா என
தேடும் அவகாசமின்றி
நரிக்கூண்டில் அடைப்பட்ட எமை
எவர் வந்து காக்க இனி?????
எவரும் வேண்டாமென
உயிர்களை துறந்த ஒரு பிடி மண்ணெடுத்து
ஓங்கி வெளியே வீசிவிட்டு –
ஜன்னலை மட்டும் இழுத்து சாற்றிக் கொண்டேன்!
——————————————————————————
வித்யாசாகர்
எவரும் வேண்டாமென
உயிர்களை துறந்த ஒரு பிடி மண்ணெடுத்து
ஓங்கி வெளியே வீசிவிட்டு –
ஜன்னலை மட்டும் இழுத்து சாற்றிக் கொண்டேன்!
LikeLike
உலகின் மீதான வெறுப்பு ஈழத்தை நினைக்கையில் நீள்கிறது கொற்றவை. வேறென்ன செய்ய உலகமென்பதின் அர்த்தத்தில் நானுமோர் அடக்கம் தானே. அகலக் கண் திறந்து பார்த்துக் கொண்டிருக்க முடிகிறதே தவிர என் செய்வதென்றதன் கேள்விக்கான விடை; அடைத்த கதவினை போல் திறப்பாரற்றே கிடக்கிறது தோழி!
LikeLike