உனக்காக நான்
தேடித் தேடி வாங்கிய
விளையாட்டுப் பொருட்களை
உனக்கு அதிகம் பிடிப்பதில்லை,
உனக்குப் பிடித்ததெல்லாம்
உடைந்த காரும்
வீட்டு உபயோகப் பொருட்களும்
கைகால் இல்லாத பொம்மைகளும் தான்.
சரி வேறென்ன செய்வதென
உடைந்த பொம்மைகளையெல்லாம்
பாதிவிலைக்கு வாங்கிவந்தேன்,
நீ தூக்கி என்மீதெறிந்து விட்டு
புதியது வாங்கித் தா என்றாய்,
நான் புதிய பொம்மைகளை தேடி
கடைக்கு ஓடுகிறேன்,
நீ வாங்கிவந்த உடன்
உடைத்துப் போட –
வாசலிலேயே காத்திருக்கிறாய்!