நான் –
வெளிநாடு வந்து
சில வருடங்கள் ஆகிறது
இம்முறை –
திருமணக் கனவோடு
ஊர் செல்கிறேன்..
ஊரில் எனக்கென்று
முன்னதாகனவே
பெண் பார்த்து வைக்கப் பட்டுள்ளது.
முதன் முதலாய்..
நானும் அவளும் சந்திக்கிறோம்
இன்றெனக்கு நிச்சயதார்த்தம்.
அடுத்த சில தினங்களில்
திருமணமும் முடிய..
காதல் பறவைகளை போல்
வாழ்வைத் துவங்கினோம்.
வாழ்க்கை சில தினங்கள்
சில்லறை பட்டாசுகளாய்
சந்தோசத்தில் வெடித்து ஓய்ந்துவிட…
காலம் –
கைகடிக்க ஆரம்பிக்கிறது!
பணத் தட்டுப் பாடு நிலவுகிறது..
கடன்கள் ஆங்காங்கே
முளைவிட்டிருப்பது தெரிகிறது..
மீண்டும் அனைத்து அனுபவ –
நற்-சான்றிதழ்களையும்
கையில் சுமந்துக் கொண்டு
மன அழுத்தத்தோடு –
வெளிநாட்டிற்கனுப்பும் படிகளில்
ஏறி இறங்குகிறேன்..
திடீரென ஒருநாள் –
‘விசா வந்துவிட்டதாம்..’
காலண்டரை கிழித்து விட்டுப்
பார்கிறேன் – மனம் வலிக்கிறது..
இத்தனை வருடம்
மனதில் சுமந்த கனவுகளெல்லாம்
ஏக்கங்களாய் என் முன்
பல்லிளித்துக் காட்டியது..
வெறும் –
நாட்கள் அளவில் தானா
நம் வாழ்க்கையென –
கவலை கொள்கிறது மனம்..
மனைவி கலங்கிய கண்களோடு
நிற்கிறாள்,
திருமண வாசமெல்லாம்
அவளுடைய கண்ணீரில் கரைந்து போக..
கையசைத்து விட்டு –
விமானமேருகிறேன்!
நாட்களை விழுங்கிவிட்டு
தொலைபேசியில் வருகிறது செய்தி
மனைவி அம்மாவாகிறாளாம்!
நான் அப்பாவாகிவிட்ட
சந்தோசத்தை –
தொலைபேசியில் என் மனைவியிடம்
எப்படி காட்ட???
‘இறந்து பிழைத்தேன் என்கிறாள்’ அவளாக.
என்னால் ‘எப்படி இருக்கிறாய்’ என்று கூட
கேட்கமுடிய வில்லை-
சற்று தாமதித்து..
மவுனத்தில் மாத சம்பளம்
வேகமாய் கரைகிறதே என்ற அச்சத்துடன்
‘உடம்பை பார்த்துக் கொள்ளலம்மா’ என்கிறேன்..
அவள் ‘எப்பொழுது வருவீங்க’
என்கிறாள்..
இப்போ தானே வந்தேனென்று என்னால்
சொல்லமுடியாவில்லை..
‘உடம்பை பார்த்துக் கொள்ளம்மா’ என்கிறேன்
‘குழந்தையை பற்றி கேட்கவே இல்லையே’ என்றாள்
‘சொல் சொல்
எப்படி இருக்கிறது நம் குழந்தை’ என்கிறேன்..
நம்மை போலவே இருக்கிறதென்கிறாள்.
நான் தொலைபேசியில் –
எச்சரிக்கை செய்ய வரும் – ‘பணம்
தீந்து விட்டதன்’ சிற்ரொளியின் சப்தம் கேட்டு
‘அச்சச்சோ போன்கார்டு முடிந்துவிடும்
நான் பிறகு பேசுகிறேன்’ என்றேன்
அவள் ‘கார்டு போகட்டும்..
பணம் போகட்டும்…
தயவுசெய்து வீட்டுக்கு வந்துவிடுங்கள்’ என்கிறாள்
‘எனக்கும் வரத் தான் ஆசை
வந்துவிடட்டுமா’ என்கிறேன் நான்
அவள் ‘என்னால் முடியலீங்க’ என்று
சொல்லிவிட்டு விசும்புகிறாள்..
‘எது அவளால் முடியவில்லை’ என்றெழும்
கேள்விகளின் பாரத்தை –
என்னால் தாங்க இயலாமல்
‘எத்தனை மணிக்கு
குழந்தை பிறந்தது என்கிறேன்..
அவள் –
‘இத்தனை மணிக்கு’ என்கிறாள்..
என்ன குழந்தை என்று கூட
கேட்கத் தோன்றாமல் –
அந்த கணம் மட்டும் எனக்குள் வலித்தது..
கண்களை துடைத்துக் கொண்டு
‘சரி உடம்பை பார்த்துக் கொள்’ என்கிறேன்
‘அழுகிறீர்களா’ என்றாள்
‘இல்லை தனியாக கஷ்டப்
பட்டிருப்பாயே’ என்றேன்
‘அதான் சொன்னேனே –
செத்துப் பிழைத்தேனென்று’ என்கிறாள்
என்னால் அடக்கமுடியவில்லை
விரைவில் வந்துவிடுவேனென்று சொல்வதற்குள்…..
என் வார்த்தை தடுமாறும்
உதறலை புரிந்துக் கொண்டு –
ஓ..வென கத்தி அழுகிறாள் என் மனைவி!
என்னால் –
ஆறுதல் சொல்ல முடியாமலேயே
தொலைபேசியில் பணம் தீர்ந்து போய்
இணைப்பு துண்டிக்கப் பட்டுவிட்டது.
இங்கு நானும் – அங்கு அவளும்
அழுகிறோம்..
இடையே.. யுள்ள –
பல்லாயிரக் கணக்கான மயில்களும்
எங்களை கேள்வி கேட்டது –
ஏனிந்த வாழ்க்கை என்று!!
மிகவும் அற்புதமான பாசத்தின் வெளிப்பாடு, மனம் கனக்கிறது, ஏன் ? அவன் நானுமாய் அவள் என்னவளுமாய் பாவிக்கிறேன், அதனாலோ?
உணர்ச்சிகளின் வெளிப்பாடு அருமை…
LikeLike
கடவுள் உங்களை சேர்த்தே வைத்திருக்க இறைஞ்சுகிறேன் சிவா. பிரிவு உயிர் தைக்கும் வலி. அது, அன்புள்ள இதயங்கள் விலங்குகளுக்காயினும் நிகழ்வது தகாது. நினைத்து நினைத்துருகும் வலியின், பிரிவின், நினைவுகளின் சுவடாய் – சிந்திய கண்ணீரே சொட்டு சொட்டாக இறுகி கவிதைகளாயின. பிரிவின் வலி தந்தையிடம் தங்கையிடமிருந்து நிரந்தரமாகவும், தாயிடம் அண்ணன் தம்பிகளிடம் இன்ன பிற உறவுகளிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும், ஏன், விட்டு வந்த வீடு மரம் விலங்குகளின் நினைவில் கூட இதயம் கண்ணீரால் நனயாமலில்லையே சிவா. வலித்து வலித்து விடுமுறை இறுக்கத்தில் மருந்திட்டு சுவடுகள் பதிந்த இதயமாகவே நம் வாழ்க்கை ஏனோ; ஏனோ????
LikeLike
very well
iam also in the same feel
iam crying for this kavithai
thank u
LikeLike
ஒரு பாடல்கேட்டால் கூட இளகிப் போகும் வாழ்கை தானே தோழர் நம் வாழ்க்கை. வருந்தாதீர்கள். காலம் அவரவர்க்கான தீர்ப்பை எழுதி வைத்துக் கொண்டே கடக்கிறது, புதிதாக ஒன்றும் நடந்துவிடப் போவதில்லை,எது நடக்க வேண்டுமோ அதே நடக்கும். கவிதை ஒரு உணர்வுப் பிரவாகம். உள்ளிருக்கும் மன அழுத்தத்தை கவிதை உடைத்தெறிந்துவிடும். உடைத்தெறிந்ததன் அர்த்தமே உள்ளே குமுறுதலுக்கான காரணமும் என்றெண்ணி, மன அமைதி கொள்ளுங்கள். பிரிவு வலியெனினும்; பிரிவும் நன்மைக்கே எனும் ஆறுதலை தற்காலிகமாய் கொண்டு, பிரிவை உடைத்தெறிவதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் தோழர். இறைவன் எல்லோருக்குமே நல்வாழ்வை தான் கொடுத்துள்ளார் எனப் புரிந்துக் கொள்வது கடினம், ஆனால் கொடுத்துள்ளார். நாம் தான் அதை நம் விருப்பத்திற்கிணங்க மாற்றிக் கொள்கிறோம். மீண்டுமொரு மாற்றத்தை நாமே ஏற்படுத்துவோம். அந்த மாற்றத்தில் பிரிவு வேண்டாம் தோழர்!
காலம் ஒரு அருமருந்து; எல்லாம் கடக்கும், எல்லாம் சரியாகும். சரியாக வாழ்த்துக்கள்!
LikeLike