ஒரு தலைகீழ் நடனம் போலத்
தான் வாழ்க்கை,
எங்கோ எதையோ சுற்றித்
எல்லாம் தெரிந்து கொள்வதற்குள்
வீடெல்லாம் மரண வாடை!
மரணம் விட்டொழியா
வாழ்வென்றில்லை –
மீண்டும் பிறக்கும் பிறப்போ
உறுதியென்றில்லை –
எவர் வந்து சொல்லியோ, கேட்டோ
ஜாதி கற்று; மதம் கற்று;
இனம் பெற்று – மனிதன்
மனிதனாக மட்டுமில்லை!
அடுத்தவனை அடித்தால்
அவன் வீழ்ந்தால்
அவனிடமிருப்பதை பெற்றால்
அது வெற்றியென்ற கோட்பாட்டிற்கு
யார் காரணமோ???
தன் நிறைவுகளில்
நிறைந்து போகும் அவலம் தாண்டி
பிறர் நிம்மதி கெடுக்கத் துணியும்
காலம் மாற –
இன்னும் எத்தனை ஜென்மம்
பிடிக்குமோ???
அடிமனதின் சுயநலம்
அறுக்கவும்,
பிறர் நலம் கருதி
எல்லோரும் வாழவும்
மனிதனை – யார் வந்து
மாற்றுவரோ???
பொய்யின்றி மனதில் தூய
எண்ணம் கொள்ளவும்,
மன அமைதியின்றி திரியும்
இவ்வாழ்க்கைக்கு – ஒரு
தீர்வான நிம்மதியை தரவும்
மரணம் தவிர்த்து –
வேறென்ன விடை கிடைத்துவிடுமோ???
வந்தவர் போனவர்
விட்டுச் சென்ற அடையாளத்தில் –
வாழ்பவர்
சரிசமமாக வாழும்
பாடமில்லாது போனது
எவர் குற்றமோ???
மனிதனுக்கான அதிக கூறுகள்
மனிதனை –
மனிதனாகவே வாழ்விக்கவில்லையே????????
என்ற மவுனத்தின் கேள்வியில்
எங்கிருந்தோ கேட்கிறது
காலத்தின் மிக வேகமான
பதிலொன்று –
‘வாழ்ந்தென்ன ஆகும் – நீ
வீழ்ந்த செய்தியே மிச்சமாகும்!
———————————————————-
வித்யாசாகர்
இக்கவிதைக்கான மூலக் காரணம் ஒன்றை இங்கே தெருவிக்க விரும்புகிறேன் தோழர்களே. எத்தனை கேள்விகளையும் வாழ்வின் கட்டாயங்களையும் தாண்டியே வெற்றியில் சிரிக்கிறோம்; நம்மில் நிறைய பேர். அந்த விதத்தில், பிறருக்கு கெடுதல் நினைத்தோ தரக் குறைவான வாழ்வினை வாழ்ந்தோ என்ன கிடைத்துவிடும்?
இறுக்கி மூக்கை பிடித்தால், தடுக்கி வீழ்கையில் இடம் மாறி படுமானால் ‘அணைந்து போகும் விளக்கு’ போல் தானே நம் உடல், வாழ்க்கை, இன்னபிற-யெல்லாம். இதில் எதற்கு குதர்க்கம், கோபம், சுய நலமென நீட்டி முழக்கி நிலைகொள்ளா ஆட்டமெல்லாம்???
சற்று, இயன்றவரை, முறையாக வாழ்ந்து, எவருக்கும் பாரமின்றி வாழ்ந்து, யாருக்கும் நம்மால் வருத்தமின்றி வாழ்ந்து, யாரையும் வெறுக்காது வாழ்ந்து, பிறரின் தவறை கூட அவருக்கு புரிய வைக்கும் நோக்கிலெடுத்துக் கூறும் அளவு நம் நடத்தையை அமைத்துக் கொள்வது நலம்’ என்பதே கவிதைக்கான கூற்று!!
LikeLike
நல்ல கருத்து மிக்க வரிகள்.. கவிதை நல்லாருக்கு.
LikeLike
மிக்க நன்றி ஸ்டார்ஜன். அறிவுரைகள் எல்லோருக்கும் பிடிப்பதில்லை. மறைமுகமாக சொல்லவேண்டியுள்ளது. மறைமுகமாக சொன்னாலும், நல்லவர்களுக்கு, அறிவுரையின் காரணம் நல்ல நோக்கத்திற்கானதென புரிந்துவிடுகிறது. நன்றி ஸ்டார்ஜன்!
LikeLike
அண்ணா இப்படி வாழுவதற்கு முயற்சிக்கிறேன். கவிதை வரி மிக அருமையாக இருக்கிறது.
LikeLike
மிக்க நன்றிப்பா. நல்லதே நினைத்தலில், செய்தலில், வாழ்தலில்; நல்லவர்களாக மெச்சப் படுகிறோமோ இல்லையோ, கெட்டவர்களாக இல்லாத நிம்மதி பெரிது! வாழ்த்துக்கள் சோழா!!
LikeLike