ஈழ விடிவு நோக்கி
இடையுறாத காத்திருப்பிற்க்கிடையே
விதி ஏற்று –
குடும்பம் சுமந்த சுயநல பிறப்பாய் வந்தேறிய
தமிழக தெருக்களில்
தள்ளாடுகிறது என் கால்கள்;
ஒரு –
மழை படராத சுவற்றில்
வர்ணப் பூச்சுகள் உதிர்ந்த
சுவடுகளுக்கிடையே ஏனோ
லயிக்கிறது மனசு;
என் உடைபடாத
வார்த்தைகளுக்கிடையே
சிக்கித் தவிக்கும்
கண்ணீர் குவியலில்
யார் யாரை நான்
குற்றவாளியாக்கவோ???
கத்தி ஓ’வென்றழ இயலாத
மனக் குமுறல்களோடு –
அந்த மழை படராத சுவற்றில் சாய்ந்து நிற்கிறேன்,
மழை கொல்லென்று வீழ்கிறது
பூமி நோக்கி;
என் தலை நனைத்து
உடல் நனைத்து
உயிர் நனைத்து
உள்ளம் மழையால் நிறைந்து
வெளியேறுகையில் –
யாரோ ஆட்கொண்ட உணர்வு
பீறிடுகையில் –
கண்ணீர் மழையென புரண்டோடி
அம்மா அம்மாயென்ற வார்த்தையும் அழையுமாய்
அடக்கவொனா நீண்டு –
மழை ஓய்ந்த ஈரம் போல்
தேங்கிய வேதனையில் –
மீறி அழ திராணியின்றி
தெருவில் அங்காங்கே திரியும்
மரணம் நோக்கி நடக்க முயல்கிறேன்……..
ஊரில் நடந்த –
முள்ளிவாய்க்காலின் சதி நிகழ்வு
செய்தியாய் தொலைகாட்சி எங்கும் தின்று
உலக சாலையெங்கும் துப்பப் படுகையில் –
அதில் காட்டும் இறந்தவர்களின் சடலங்களில்
எது என் தாய், எது என் தந்தை, எது மனைவி குழந்தையென்று
யார்வந்து அடையாளம் காட்டுவாரோ?????
என் கண்ணீர் சுமந்த
தமிழ் மண் –
தன் இன ரத்தம் ஊரும்
ஈழத்திற்கு –
என்ன பதில் வைத்திருக்கிறதோ???
அண்ணாந்து வானம் பார்க்கையில்
நகரும் மேகமெலாம் –
என் உறவுகளாய் தெரிகிறதே;
அசையும் காற்றிலெல்லாம்
என் உறவுகளின் –
அவலக் குரலாய் கேட்கிறதே;
வயிற்றுப் பிழைப்பிற்கு
தேசம் கடந்து வந்த நான் –
அவரோடு இருந்து
இறந்தாவது போயிருக்கக் கூடாதா??
எவர் வந்து சொல்லும் தீர்ப்பிற்கு
இன்னுமென் உயிர் மிட்சமோ; மிட்சமோ; உலகே??!!!!!!
————————————————————————————–
வித்யாசாகர்
அன்பரே, அது முல்லை வாய்க்கால் அன்று. முள்ளிவாய்க்கால்.
உங்கள் கவிதைகள் அருமையாக இருக்கின்றன.
LikeLike
பிழை திருத்தியமைக்கு மிக்க நன்றி கோகுலன். இயன்றவரை விரைவில் மாற்றி விடுகிறேன். தவிர, தங்களின் பாராட்டிற்கும் நன்றியறிவிக்கிறேன். விரைவில் இந்த ஈழம் சம்மந்தப் பட்டக் கவிதைகள் புத்தகமாக வெளிவர உள்ளது. இதுபோல் ஏதேனும் எழுத்துப் பிழையோ வரலாற்று தவறோ நிகழ்வின் குறிப்பிட வேண்டுகிறேன். எனினும், புத்தகம் அச்சிடும் முன் கலந்தாய்வு கொள்வோமேன்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது அன்பிற்குறிய கோகுலன்!
LikeLike