31 மனைவிக்கு தெரியாமல் எழுதிய கடிதம்! (பெண்ணியம்)

ப்படி நிகழ்ந்ததோ அது
ஆணுக்கு பெண் –
அடக்கம் என்னும் சமாச்சாரம்,

சமபங்கு கொடுப்பதாய்
உன்னையும் வேலைக்கனுப்பி
உன் திறமைகளை வெளிப்படுத்த எண்ணி
பாவம்; அவளும் கஷ்டப் படுவானேன்
நிம்மதியாய் வீட்டில் இருக்கட்டுமே என
நினைத்த இடத்தில் தான்
துரோகம் இழைக்கப் பட்டுவிட்டது போல்;

உடல் கூசப் பார்க்கும்
கயவர்களுக்கு மத்தியில்
மனம் கூசி போவாயோ
வீட்டில் தான் இருந்து விடேன்
உனக்காக உழைக்கத் தான் –
நானிருக்கேனே என்று எண்ணியதில் தான்
துரோகம் இழைக்கப் பட்டுவிட்டது போல்;

அக்கம் பக்கம் கடைக்கு செல்கையில்
சோர்ந்து போகும் நீ –
பேருந்தில் எறி,
நான்கு தெரு நடந்து,
எல்லோருக்கும் பதில் சொல்லி,
எத்தனையோ எரிச்சல்களுக்கு மத்தியில் சிரித்து
நான் படும் இன்ன பிற அவஸ்தைகளை
சரிபங்காய் நீயும் படுவானேன் என
தவறாய் யோசித்த இடத்திலிருந்து –
துரோகம் இழைக்கப் பட்டுவிட்டது போல்;

நானும் போயி –
நீயும் போயி –
இருவருக்கு மத்தியிலும் வாழும் பிள்ளைகள்
பாசமற்று ஏங்கிப் போகுமோ
என்று நினைத்த சுயநலத்தில் தான்
உனக்கான துரோகம் –
இழைக்கப் பட்டுவிட்டது போல்;

ஆணுக்கும் பெண்
சமமாக வேண்டும்
எவருக்கு எவரும் தாழ்வாக வேண்டாம்
என்றெல்லாம் எண்ணினாலும் –
எங்கோ இழைக்கப் பட்ட துரோகம்
எதற்கோ எனக்கு நீ பயந்து
நடுங்குகையில் –
உள்ளே உரைக்காமலில்லை; வலிக்காமலில்லை.

என்னால் உன்னை
‘டி’என அழைக்க சம்மதித்த நீ,
என்னை ‘வா’ போவென்றும்
சொல்ல அனுமதித்திடாத என் நடத்தை
ஒரு பக்கம் தாழ்ந்த தராசில் தானே
நிற்கிறது??? என –
எல்லோரும் யோசிக்கும் நாள்
வெகு தேவையாகிப் போனது – இக்காலத்தில்.

உலகம் முழுக்க
பெண்ணியம் பேசுகிறார்கள்
நானும் ஆமென்று தலை அசைக்கிறேன்,
வீட்டில் –
உனக்கந்த சுதந்திரம் தரப்பட்டதா எனில்
இல்லை என தலைகுனியும் அசிங்கம்
யாரால் –
காலவேகத்தினுள் புகுத்தப் பட்டதோ?? என
கூட்டம் போட்டெல்லாம் வேண்டாம்
அவரவர் மனதிலாவது யோசிக்க வேண்டிய
தருணத்தில் தான் நிறைய பேர்
நிலை கொண்டுள்ளோமோ???!!

‘உலகம் சென்று உபதேசம்
செய்வதற்கு முன் –
வீட்டை சுற்றி பார்’ என எழுதியதால்
நானும் அவ்வப்பொழுது பார்க்கிறேன்
என் வீட்டை –
ஆங்காங்கே காரி உமிழ்கிறது என்
மனசாட்சி, என்னையும் இன்னும்
நிறைய போரையும்.

இதலாம் தாண்டி –
வேறென்ன தான் உனக்கு செய்வதென்று
யோசிக்கையில் –
வீடு நிறைந்த மங்கலமாய் வாழும்
மொத்த பெண்ணினத்தின் குரல்களும்
காதில் இப்படித் தான் கேட்கிறது –
‘மொத்த ஆண்களும் சேர்ந்து
இப்படி யோசிக்கவாவது செய்யுங்க –
‘வீட்டில் மிக வீரமாக எழும் கூச்சலின் வேகம்’
சற்று குறையவாவது செய்யட்டும்!
———————————————————————–
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் and tagged , , , , , . Bookmark the permalink.

8 Responses to 31 மனைவிக்கு தெரியாமல் எழுதிய கடிதம்! (பெண்ணியம்)

 1. முனு. சிவா சங்கரன் சொல்கிறார்:

  ஆஹா ….ஓஹோஹோ…

  என்ன தலைவரே…இப்பத்தான் நம்ம வழிக்கு வந்த்துருக்கிங்க ….உண்ம்மையிலேயே மிகவும்
  மகிழ்ந்துபோனேன். நம்ம ஆளுகூட படிச்சுட்டு உங்கள மிகவும் பாராட்டினாங்க….

  இந்த கவிதையை தனியா வைங்க.. நேரம் இருக்கும்போது மறுபடியும் செதுக்குங்கள்! இது ஒரு
  முத்த்திரை கவிதையாய் மலர்ந்துவிட்டது! நன்றி..!…

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   நாம வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விடுகிறீர்கள், வளர்ச்சியின் போது தேவையானவை தேவையான இடத்தில் கிடைப்பதையும், கிடைப்பதை பதிப்பதாகவும் நம்புகிறேன்..

   மிக்க நன்றி ஐயா..

   Like

 2. Manju Bashini சொல்கிறார்:

  ஆணுக்கு பெண் அடக்கம் என்பதை உங்க கவிதையில் ஆணுக்குள் அவன் அன்பு மனதுக்குள் பெண் என்றும் அடக்கமாகி இருக்காள்னு சொல்ல வந்த வரிகள் நீங்கள் எழுதியது…

  ஒவ்வொரு வரியிலயும் உங்க மனைவியின் மேல் நீங்க கொண்ட அன்பு தெரிகிறது….

  தன் சுகம் தன் நலம் தன் சந்தோஷம் அப்டி மட்டுமே நினைச்சால் அங்க வாழ்க்கை ருசிக்குமா? இனிக்குமா? ஆணுக்கு பெண் சரிநிகர் என்று சொல்லி ஆண்களை துன்பப்படுத்தும் பெண்களையும் பார்த்திருக்கேன்பா…

  எளிய வரிகள் தான் ஆனால் அதில் அன்பு தெரிகிறது…

  ஐயோ என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லையோ? என்ற ஒரு பதட்டம் தெரிகிறது…

  நான் என் மனைவியை சந்தோஷமா வெச்சிருக்கேனா அப்டின்னு மனசாட்சியுள்ள ஒரு நல்ல ஆண்மகனா நீங்க நினைப்பது தெரிகிறது…

  ஆண் பெண் இருவருமே வேலைக்கு போயிட்டு வந்தாலும் ஆண் வந்ததும் முகம் கை கால் கழுவிட்டு டிவி போட்டுக்கிட்டு உட்கார்ந்துவிடுவதுமுண்டு….

  மனைவி வரும்போதே புடவை தூக்கி சொருகிக்கொண்டு நேராக கிச்சனில் நுழைபவரும் உண்டு….

  என் அம்மா ஞாபகம் வந்தது இந்த கவிதை படிக்கும்போது…

  உங்க கவிதை பெண்ணினத்துக்காக குரல் கொடுக்கும் ஒரு நல்ல உள்ளத்தின் உயர்வான குணம் தெரிகிறது….

  இரவின் அமைதியான உறக்கத்தில் நீங்க யோசித்த வரிகளா இது இருந்திருக்கும்னு நினைக்கிறேன்…

  என்ன செய்தேன் என் மனைவிக்கு? அவளுடைய எதிர்ப்பார்ப்புகள் என்னவா இருக்கும்? நான் அவளை சந்தோஷமா வெச்சிருக்கேனா? அன்பு என்பது நான் எழுதும் கவிதையில் மட்டும் தானா? உண்மையாவே நீங்க உங்க அன்பு மனைவிக்கு அருமையான உதவிகள் வீட்டில் செய்றீங்கன்னு எங்களுக்கும் தெரிய வந்தாச்சு இதன் மூலமா….

  கண்டிப்பா இப்படி எழுத கூட மனசு வரனுமே இப்ப இருக்கும் காலத்திற்கு…. ஆண்கள் மனசும் கனிவுடன் பெண்கள் மேல் கருணை காட்டுகிறது என்பது ஊர்ஜிதமாகிறது….

  வரிகளில் வழியும் அன்பு உங்கள் மனதை சொல்கிறது வித்யாசாகர்…. அன்பான பாராட்டுக்கள்….

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   நான் கவிதை எழுதிய நேரத்தை விட அதிக நேரமும், நான் சிந்தித்ததை விட அதிக ஆழமுமாக சிந்தித்து, என்னை நிறைய இடத்தில் ஆமென்று தலையாட்ட வைத்தீர்கள் மஞ்சு. அப்படி இரவிலெல்லாம் இல்லை, மனசாட்சியோடு, நேற்றைய இதே நேரம், இந்நிலையில், என்ன செய்யலாம், என்ன நேர்ந்தது, என்று சிந்தித்தலில் உதிர்த்த வார்த்தைகளில் ‘அப்படியே பகிர்ந்து இங்கே கவிதை என முழங்க முயன்றேன். இந்த சிந்தனை பிறரை சேர வேண்டும் என்பது மட்டுமே என் ‘கவிதை’ என்று உச்சரித்ததன் நோக்கமின்றி, வேறில்லை.

   நிறைய கேள்வியும், பதிலையும், அழகாக ஒரு சகோதரா பாசத்தோடு வாசித்த உங்களின் வாசிப்பினால், கொடுக்கப் பட்டிருப்பதை உணர்கிறேன் மஞ்சு. உண்மையில் அம்மாவின் வருத்தம் புரிந்த, உழைப்பு புரிந்த நிறைய பேர், அம்மாவிற்கு உதவிய நிறைய பேர் அல்லது அம்மாவிடம் காட்டியதை விட அதிக அன்பை மனைவியிடம் கொண்டவர்கள் மனைவிக்கு உதவுவதையும் ‘தனி கடனாக நினைக்க’ வாய்ப்பொன்றுமில்லை.

   நாளெல்லாம் அலுவலிலும், ஒப்பந்த பணி வளாகத்திலும், கட்டாந் தரையிலும், வெட்டும் வெயிலிலும் கொட்டும் வியர்வையை தொடைத்து எப்போடா வீடு வருவோம் என்று நினைத்து வரும் ஆண்களுக்கும் மனைவியின் அசதியான தருணங்கள் ‘அதிக பேருக்கு’ உணரப் படாமலில்லை; என்றாலும், எப்படி வந்ததிந்த விகிதாச்சாரம்??? ஆணுக்கு இந்த வேலை பெண்ணுக்கு இந்த வேலை என்று நாம் வளர்ந்ததற்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்???

   எனக்குத் தெரிந்து இப்போதைய நிறைய ஆண்கள் பெண்களை முடக்க எண்ணுவதில்லை, ஆயினும், அவர்களின் அடுத்த சில படிகளை அவர்களின் நன்மைக்கென சில காரணத்தை சொல்லி அதை வேண்டாமென தீர்மானிக்கும் தீர்வு எப்படி சரி?

   இப்படி எல்லாம் யோசிப்பது.. பேசுவது கூட.. பெண்களை நன்றாக நடத்தும், அல்லது இன்றைய வாழ்வின் ஆதாரமில்லா போக்கில் சிக்கிய ஒரு ஆண்மகன் சிந்திக்கும் ஒரு பகிர்வு எனலாம், எனினும்; எதையுமே மனதில் நிறுத்தாமல் பெண் என்பவள் என் அடிமை என்று மட்டுமே போதித்த போதிப்பில் வளர்ந்த ஒருவன் தன் மனைவியை தெருவில் இழுத்து அடித்து மான பங்கம் படுத்தும் வக்கிரத்திற்கு ஒரு மூலக் காரணம் நாம்; என்பதை நிராகரிக்காமல் இருக்க இயல வில்லையே.

   அவர்களை எல்லாம் நம்மால் மாற்ற இயலாது, மாற்றும் உரிமையோ யோக்கியதையோ கூட நமக்கு கிடையாதெனலாம், இருப்பினும், நாமிப்படி சிந்திக்கையில், இன்னும் சற்று நமாமி நம் போன்றோரை மாற்றிக் கொள்கையில், நாளை அவர்கள் மாறவும் ஏன் நாம் காரணமாக ஆகக் கூடாது என்பதே என் நெடுநாளைய சிந்தனையின் முயற்சியாக இருந்தது.

   சரியோ தவறோ, ஆண் என்பதை மீறி, ஒரு மனிதனாக சிந்தித்தால் காரணங்கள் மட்டுமே போதுமானதென தெரியவில்லை; பெண்களின் மேல், அதிக கோபம் கொள்வதற்கும், அடிக்கக் கை ஓங்குவதற்கும். அதிக பட்சம் என் மனைவியின் முகம் கோனும் தூரம் தான் எனக்கான கோபம், தரை தொடும் கண்ணீர் இதயத்தை உடைத்தெடுத்து, ‘எதுவாயினும் போகட்டும் போவேன’ எல்லாம் மறக்கும் அளவு தான் அவளுக்கான என் இதயம் நிறைந்த இடம்.

   எதன் காரணமோ இருந்து போகட்டும், என, கால நிலை சூழல் குறித்து, விட்டு விட்டாலும் வேறென்ன செய்வேனென்ற ஓ-ரன்பு தான் இந்த கவிதைக்கான காரணம் என்பதை நீங்கள் வரிக்கு வரி சொன்ன இடத்தின், புரிதலுக்கான, தேவை தான் – பெண்களுக்கென ஆண்கள் பேச முற்படும் பெண்ணியமும் இந்த கவிதையும் சகோதரி.

   தங்களின் வாசிப்பிற்கும், மிக நீண்ட முதல் விமர்சனத்திற்கும் மிக்க மிக்க மிக்க நன்றி!!

   Like

 3. seethagm சொல்கிறார்:

  மிகவும் மனதைதொட்ட கவிதை. தரவிறக்கம் செய்துள்ளேன்.

  நான் 20 வருடஙளுக்கு முன் மருத்துவப் படிப்பு முடித்தபோது, என்னிடம் எல்லாரும் கேட்ட கேள்வி ‘சமைக்கத்தெரியுமா’ என்றுதான். ஏனோ இதே கேள்வியை ஒரு ஆண் மருத்துவரிடம் யாரும் கேட்பதில்லை. நான் ஓரிரு முறை கேட்கப் போய், மிகவும் கனமான ஒரு இம்சிக்கும் மவுனமே நிலவியது. இந்த சுய பரிசோதனை ஏன் ஆண்களுக்கு வருவதில்லை. ‘நான் ஒரு நல்ல கணவனா’ என்ற் கேள்வி ஏனோ தோன்றுவதில்லை.

  men seem to have what is called culturally fostered narcism.

  anyhow honestly it is a very touching poem.

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   என் முக்கிய படைப்புகளில் ஒன்று ‘சாமி வணக்கமுங்க’ ஆன்மீக குறுநாவல், லியோ பதிப்பகம், தி.நகர், சென்னை வெளியீடு. அதை என் மகனுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவரம்மா அவர்களுக்கும், அங்கு பணியாற்றிய ஏனையோரில் உதவியாய் இருந்தவர்களுக்கும் ‘சாமி வணக்கமுங்க’ புத்தகத்தை சமர்ப்பணம் செய்திருந்தேன்.

   நம் மேதகு அப்துல் கலாம் ஐயா அவர்களால் பாராட்டப் பட்ட படைப்பும், கலைமகளில் குறு நாவல் போட்டியில் முதல் பரிசும் வென்ற கதைகளை கொண்ட தொகுப்பது. அதற்காகவே காத்திருந்து அல்லது தக்க நேரத்தில் அதை வெளியிட்டு அந்தம்மாவை உயர்வு படுத்த எண்ணி அவசரப் பட்டு வெளியிட்ட நாவல் என்றும் கூட சொல்லலாம், இதை இங்கு சொல்லும் காரணம், இதில் இப்படி கீழ்காணும் சில வரிகள் வருவதை பாருங்கள்:-

   //என்னை கேட்டால் – கடவுள் அவ்வப்போது
   வெள்ளை உடை இடுத்திக் கொள்கிறார்,
   காதுகளில் ஸ்டெதாஸ்கோப் மாத்தி
   மருத்துவம் பார்கிறார்..,

   மருந்துகளை தேடித் தேடி
   நோய்களை குணமடைய செய்கிறார்..,

   இரவும் பகலும் கண் விழித்துப் பார்க்கும்
   பிரசவன்களால் –
   தாய்மைக்கும் தாயாகிறார்!

   ஆம்; நல்ல மருத்துவர்கள்
   அத்தனை பேரும் –
   நம் கண்முன் நடமாடும்
   கடவுளர்கள் தானே?!! //

   இந்தளவிற்கு ஒரு மதிப்பு மிக்க ஒரு தாய்மையுள்ளத்திடம் இருந்து கிடைத்த மறுமொழிக்கான என் மகிழ்ச்சி எல்லையற்றது என்பதை இங்கு இவ்வாறு விவரித்துக் காட்டவே, இந்த நீள விளக்கம்.

   முரண்பட்டுக் கிடக்கும், சமுதாய சீர் இல்லா நிறைய வலிகளுக்கும், மோதலுக்கும் மத்தியில் தான் நேர்த்தியாக சிந்திக்க முயற்சிப்பவருக்கான இன்றைய வாழ்க்கை நிலை உள்ளது என்பதை நம் போன்றோர் புரிகிறோம். அவைகளை தாண்டி சிந்திக்க முற்படவே பெரும்பாடு எனில் வெளியில் சொல்லவோ பேசவோ எல்லோராலும் இயலுவதில்லை தான்.

   ஆண்களுக்கு சமைக்கத் தெரியாமல் போனதற்கோ, அதை ஒப்புக் கொல்லும் மனப் பாங்கிற்கோ, பெண்கள் முழுமை சுதந்திரம் கொள்ளாமைக்கோ, கொள்ளாமையை சிந்திக்கவோ சொல்லவோ இயலாத காரணத்தை எல்லாம் மொத்தமாக குழி பறித்து எத்தனையோ ஆண்டுகளுக்குப் முன் பேரும் பள்ளத்தில் புதைத்துவிட்டனர் நம் மூதாதையர்.

   அதற்கான காரணத்தை நன்மையாகவும் தீமையாகவும் எத்தனை எத்தனை வேண்டுமாயினும் இன்றளவில் நாம் காட்டிக் கொள்ளலாம், விவாதிக்கலாம், சண்டை கூட போடலாம். எல்லாம் தாண்டி ஒரு ஆண் பெண்ணிடமோ, ஒரு பெண் ஆணிடமோ முட்டிக் கொல்லும் ஓரிடத்தில் எழும் கேள்விகளுக்கு சரிநிகர் பதிலை காலத்திடம் மட்டுமே கேட்கவேண்டிய நிர்பந்தத்தில் நிற்கிறோம் என்பதே சிந்திக்கச் செய்கிறது..

   மாறுபட்டிடாத நிலை ஏதுமில்லை உலகில். காலம் புதைத்ததை எல்லாம் நம் வாழும் கலையால் கொண்டு வராததொன்றுமில்லை இல்லையா. நேற்றைய பொழுதை ஏக்கமாய் பார்ப்பதை காட்டிலும், நாளைய பொழுதை ஆக்கமாகப் பார்ப்பதே காலச் சிறந்ததென என்னுகிறேனம்மா. ஆண்கள் வீட்டில் வேலை செய்யாமலில்லை, செய்வது தியாகமுமில்லை. பெண்கள் வீட்டு வேலைகளை பார்க்கலாம், வீட்டு வேலை தான் பார்க்கக் வேண்டும், வீட்டு வேலைக்குத் தான் பெண்கள் போன்ற முத்திரைகளில் இருந்து மட்டும் எல்லோரும் விடுபடுவோம்.

   வீட்டின் பொருளாதாரம், பரஸ்பரம் ஒருவருக்கொருவர் புரிந்துள்ள நிலை, திறன், பலம், தேவை பொருத்து வேலைக்குப் போவதையும் வீட்டில் இருப்பதையும் இருபாலரும் சிந்திக்கலாம். இதில், குழந்தை வளர்ப்பிலிருந்து, குழந்தைகளின் ஆரம்ப கால தேவையிலிருந்து தேவையை பூர்த்தி செய்ய தாய்மையால் மட்டுமே இயலும் என்பதாலும் அதன் பிறகு தக்க ஓய்வு உடல் நலம் மற்றும் இன்ன பிற காரணங்களாலும் பெண் வீட்டில் இருக்க வேண்டிய ஆரம்ப கால அவசியம் இருப்பதால், அதன் பொருட்டு பெண் வீட்டில் இருப்பதும் ஆண் வேலைக்கு செல்வதும் ஏற்பட்டிருக்கலாம். இதை சமகால புரிதல் தாண்டி பெண்ணின் இடம் இதுவென்று போட்ட வட்டம் களைதலே இன்றைய கால தேவையாகிப் போனது.

   என் மனைவியும் எதையேனும் செய்யவேண்டும், வித்யாசாகர் வித்யாசாகர் என்கிறார்களே செல்லம்மா செல்லம்மா என்று சொல்லட்டுமே அல்ல, சொல்லவேண்டுமே என்ற ஒரு அக்கறை எனக்கும் வருகிறது, எனினும் ஐயோ எப்படி சமாளிப்பாளோ என்று ஒரு பதைப்பும் எழுகிறது. இந்த இரண்டிற்கும் மத்தியில் உதவியாகவும் பலமாகவும் இருந்து நாளைய பெண்ணினத்தை முழுதாய் வெளிக் கொணர, ஆண் பெண் போட்டியின்றி ஒரு சரிசம புரிதல், ஒத்துழைப்பு, அன்பு நிலவ என்ன செய்யலாம் என்பதை செய்து முடிப்போம்.

   ஆணுக்கு பெண் சமம் என கோசம் எழுப்புவதோ, உடை மாற்றித் தரிப்பதோ, தோளுக்கு தோள் நிகராக நின்று ஆங்காங்கே நான்கு பேர் நிமிர்ந்து நடப்பதோ, எல்லோருக்கும் போதிய மாற்றமல்ல.

   மாற்றம் என்பது, ஆப்படி தேவை, “எதை யாரும் நிகழ்த்தாமல், இயல்பாய் எல்லோராலும் நிகழ்த்தப் படுகிறதோ, எது பிறரை நிந்திக்காது பெருமை படுத்துகிறதோ, எந்த பெருமை; இவள் பெண்ணென ஆண்களுக்குப் புரிய வைக்க முற்படாமல், ஆம் அவள் பெண், ‘என்னை போல் ஒருத்தி’ என இயற்கை நிகழ்வுகளுக்குள் ஒத்து ஒரு ஆணினால் சகோதரித்துவமாக ஏற்கப் படுகிறதோ, ஆண் ஏற்பதை எதிர்பாராது வளரும் பெண்ணினம் எங்கு வளர்கிறதோ, ஆண் ஏற்பதும் மறுப்பதும் கொடுப்பதும் வாங்குவதும் இல்லாது வாழ்தல் எங்கு நடை பெறுமோ அந்த மாற்றம் தேவை என்று எண்ணுகிறேன்.

   அதற்கான சிந்தனை தூண்டல் போல் இக்கவிதை. இது தங்களால் மெச்சப் பட்டதில் மகிழ்வடைகிறேனம்மா.. மிக்க நன்றி!

   Like

 4. Manju Bashini சொல்கிறார்:

  மறுபடி ஒரு வரி எழுத தோன்றியது வித்யாசாகர்….

  இந்த கவிதைக்கு கிடைத்த வெற்றியே இது…

  ஒவ்வொருவரும் உங்கள் கவிதை படித்து இட்ட கருத்திற்கு உடனடியாக நீங்களும் அருமையான நீண்ட விளக்கத்துடன் கொடுத்த பதில்கள் நன்றிகள் உங்கள் குணத்தினை மரியாதையுடன் நினைக்க வைக்கிறது…

  அருமையான கவிதைப்பா! ஒரு ஆண் என்ற கர்வம் எங்கே தவிடு பொடியாகிறது? மனைவி என்னும் அழகான இணை; வாழ்க்கையில் கிடைக்காதபோது…. ஆணின் கம்பீரம் எங்கே தொலைகிறது?? மனைவி தன் கணவனை மதிக்காத போது….

  உங்க கவிதையில் நீங்க இப்படி எழுதியதால் நெஞ்சு நிமிர்த்தி கர்வமுடன் சொல்லலாம் எத்தனை அன்பு பார் எங்கள் வாழ்க்கையில்…. எத்தனை அன்பு பார் நான் வைத்திருப்பது என் மனைவியிடம். இங்க உங்க கம்பீரம் நிற்கிறது… அதான் சொன்னேனே… உங்க முதல் கவிதையே ரொம்ப இம்ப்ரெஸிவா இருந்திச்சுப்பா…. ( நான் படித்த உங்களின் முதல் கவிதை இது….)

  அன்புடன்
  மஞ்சுபாஷிணி

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   மனதிலிருக்கும் தாய்மையான பெண்மையை நிலைநாட்டும் அன்பு தங்களுக்குரியது. ஆண் பெண் என்பதற்கிடையே அன்பையே வளர்ப்போம், உண்மையான அன்பு அத்தனை தேவையையும் பூர்த்தி செய்யுமென நம்புவோம், நானும் அதையே செய்தேன் என்பதை மீண்டுமிங்கே பதிவு செய்கிறேன்.

   பெருத்த நன்றிகள் தங்களுக்கே..

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s