வாருங்கள் தோழர்களே..
உறவுகளின் உயிர்மூட்டை சுமந்து
முல்லிவைக்காலில் உயிர் நடவு செய்வோம்;
பச்சிளம் குழந்தைகள் துடித்த
நினைவெடுத்து –
சிங்களனுக்கு ‘வெண்மனப் பட்டம் தருவோம்;
நான்கு புறம் பரிதவித்த – என்
மக்களின் கதறல்களையெல்லாம் சேகரித்து
உலக மனிதர்களின் காதுகளில் ஓதுவோம்;
பால்குடி மறக்காத பச்சிளம் குழந்தைகளையும்
அப்பாவி மக்களையும் – அநீதியில் கொன்ற
கோழைகளுக்கு – போர்வீரன் பட்டம் அளிப்போம்;
துண்டு துண்டாய் தகர்த்தெறியப்பட்ட –
உடல்களால், உயிர் ஊனமுற்று துடித்த – நம்
இன அழிவு சேதி கேட்டு –
பதறாத இன உறவுகளே………..; வாருங்கள்
நோட்டீஸ் அடித்து நினைவு தினம் கொண்டாடுவோம்;
நஞ்சு பாய்ச்சி
விச குண்டெறிந்து
நயவஞ்சகத்தால் சிங்களன் – எம் கருவறுக்க
துணைபுரிந்த தேசங்களே…………; வாருங்கள்
சமாதானம் பற்றி; அடிமை ஒழிப்பு பற்றி; அஹிம்சா பற்றி
புதியதாய் ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டு
வெற்றிவிழா நடத்துவோம்;
பிணக் குவியல்களில் சுடர்விட்டெரிந்த
என் உறவுகளின் பிணவாடையை –
சற்று நினைவுற்று –
நன்றாக நுகர்வுற்ற போதையில் நம்மை
மனிதர் என்று –
மார்தட்டிக் கொள்வோம் வாருங்கள்; உலகத்தீரே!!!!
தாய் எரிந்து
தந்தை உடல் சிதறி
தங்கை கருவறுத்து
அக்கா; தம்பி; அண்ணன்; குடில்; குழந்தை; எல்லாம்
ஒழித்து –
ஒழிந்து போய்விட்டோம்;
எங்களிடம் –
நினைவுகளே மிச்சமுண்டு கண்ணறுத்த தெய்வமே!!!! வா..
தொலைகாட்சிக்கு தீனி போட
செய்தியாக்கி பணம் செய்ய
அனுதாபம் தெரிவித்து ஓட்டுவாங்க
கவிதை எழுதி புத்தகமாக்க –
எம் இனமா நலிந்துபோனது உலகத்தீரே???
பச்சை பச்சையாய் அறுத்து
எரிகிறானங்கே சிங்களவன் – மேலும்
வெற்றி முழக்கமிட்டு
நடனம் ஆடுகிறான் சிங்களவன்
நம் தோல்வி அவன் வெற்றியெனில் போகட்டும்
எம் மரணம் –
அவன் இலக்குயெனில்
சரிதானா உலகத்தீரே???
அறுபது வருடம் போராடி
லட்சாதி லட்சம் உயிர்களை தொலைத்து
வெறும் தீவிரவாதி பட்டம் சுமந்து
வேறு தேசம் தேடி அலைகிறோமே
மனசு யாருக்குமே பதைக்காதா.. உலகத்தீரே???
எச்சில் உணவு தின்று
எவன் கூரை ஓரமோ ஒதுங்கி
துண்டிக்கப் பட்ட கை, கால்களோடாவது
உயிர் வளர்க துணிந்துவிட்டோம்;
வருட வருடம் விளக்கேற்றி
எம் உறவுகள் துறந்த உயிரின் மண் தின்று
உள்ளே சிலிர்த்தெழும் உணர்வு கூட்டி
சிவந்த கண்முழுதும்
ரத்தம் வெறிக்க ரத்தம் வெறிக்க
கோபக் கனல் சுமந்து –
முல்லைவாய்க்காலின்
மரண நெடிக்கு மத்தியிலே – ஓர்தினம்
எம் வெற்றிக் கொடியை பறக்கவிடுவோம்;
அந்த எண்ணம் போகும் தினம்
உயிரையும் துச்சமென விடுவோம்;
யாம் துச்சப் பட்டுப் போகும்
அந்நாளில் – வேண்டுமெனில்
நினைவு தினத்தை நீங்கள் கொண்டாடுங்கள்
உங்கள் நினைவுகளில் எம் உயிர்
ஈழ தேசத்திற்காய் விட்டதாகப்
பதியப் பட்டுக் கொள்ளட்டும்!
———————————————————————-
வித்யாசாகர்
உள்ளத்தை தொடும் உணர்ச்சியுள்ள கவிதை. ஆயிரம் நன்றிகள். புதிய இணையத் தளமான http://www.tamilsworld.net ற்கு வருகை தந்து உங்கள் ஆக்கங்களையும் அனுப்பி வையுங்கள். அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் tamilsworld@hotmail.com.
நன்றிகளுடன்
சிகன்
LikeLike
உள்ளத்தை தொடும் உணர்ச்சி பொங்கலில் நம் ஒற்றுமை தழைத்து; ஓடிக் கொண்டிருக்கும் தமிழினத்திற்கு ஒரு விடிவு பிறக்கட்டும் சிகன். தங்களின் மனதார்ந்த மெய்சிலிர்ப்பிற்கு மிக்க நன்றி. நிச்சயமாக இனி எழுதும் என் படைப்புகளை அனுப்புகிறேன் சிகன். தற்காலிகமாக தங்களுக்கு மனம் கவர்ந்த கவிதைகள் நம் தளத்தில் உண்டெனிலும் தாங்கள் அதையும் அங்கே பதிந்துக் கொள்ளலாம். எழுதுவதற்கும் பதிவதற்கும் நேர அவகாசமின்றி உள்ளேன், இச்சிறு உதவியை செய்துக் கொள்ளுங்கள். இனி எழுதும் கவிதைகளை தங்களுக்கு மின்னஞ்சல் செய்கிறேன்.
தங்களின் அழகிய வலை இன்னும் மெருகேறி.. இன்னும் வளர்ந்து.. தமிழ் சமுதாய பயணத்தின் காலச் சுவடுகளாய் என்றென்றும் நிலைக்கட்டும்.. மனதார்ந்த வாழ்த்துக்கள் சிகன்!
LikeLike
//தொலைகாட்சிக்கு தீனி போட
செய்தியாக்கி பணம் செய்ய
அனுதாபம் தெரிவித்து ஓட்டுவாங்க
கவிதை எழுதி புத்தகமாக்க –
எம் இனமா நலிந்துபோனது உலகத்தீரே?//
மனதை சுட்டு பொசுக்கிய வார்த்தைகள்!
இன்னும்.. இன்னும்.. எழுதுகோலை கூர் சீவிக் கொள்ளுங்கள் நண்பரே…
LikeLike
மிக்க நன்றி ஐயா. கணப் பொழுதும் எழுத்தின் கனக் கூர்மைக்காய் தவம் கொள்கிறேன். உரித்ததை செய்வோம், நடப்பது நல்லதே நடக்குமென நம்புகிறேன். இருப்பினும், அதையெல்லாம் தாண்டிய ஒரு வலியின், அக்கறையின் பதிவிது; இந்த ஈழக் கவிதைகள் எல்லாம்!
LikeLike
மனிதம்??? … அர்த்தம் தெரியாமல் அப்பாவிகள்……
உலகில் விடை அற்று மாண்டனர்….
இங்கல்ல பாலஷ்தீனதிலும் இன்னும் நாடுகளிலும்…
விடை சொல்ல கண்ணன் வருவனோ கீதையில் சொன்னது போல்….
LikeLike
ஆம்; மனிதன் படைத்த நாடுகளின், சுயநலத்தால் அழிந்த மொத்த மனிதத்தின், வேர்தொடும் காரணங்கள் தான் இதுபோன்ற இழப்பிற்கும் காரணம். எனினும் அநீதியின் தலைவிரித்தாடிய கொடுமையும் அதற்கு உடன் பட்ட கூட்டுசதியும் நம்மொடில்லாத ஒற்றுமையுமென கசக்கும் மனக் கசப்பிற்கு, அந்த கண்ணனும் காரணமோ!! தெரியவில்லை. அசையும் ஒவ்வொரு அசைவிற்கும் அவனே காரணமென்று நம்புகையில்; இழப்பை ஈடுகட்டும் கடனும் அவனை சார்ந்ததே என்றும் உள்ளே ஒரு வீரிய அழுகை அழுது பொங்குகிறது ராதா..
LikeLike