உறவோடு உயிர்வளர்க்கும் பெண்மையை
உதறிவிட்டு –
எம் உறவிற்காய் உயிர்தந்த
தாயுமானவளே,
அடுப்பெரிக்கும் பெண்ணிற்கு படிப்பெதற்கு
என்றோருக்கு முன் –
அடித்து போர் புரிந்து
ஈழ விடுதலை நெருப்பிற்கு தன்னையே தரித்தவளே;
பெண்படைக்கு
ஆண்படை அஞ்சுமளவு
எம்படை – எவரையும் வெல்ல ஒரு
தனிப்படையையே தேற்றியவளே;
காலம் காலமாய்
யாரேனும் வந்து எமக்கென்று
ஒரு தேசம் மீட்டுக் கொடுப்பார்களா என்றிருந்த
எம் இனத்திற்கு –
நானுமுண்டென –
நம்பிக்கையும், உயிரையும் தந்தவளே;
ஆனந்தபுரம் எழுதத் துணிந்த
வரலாற்று வெற்றிக்கு – அநீதி இழைத்து
சிங்களவன் வீசிய நச்சு குண்டிற்கு
தன்னுயிரையும் தந்து தலைவனைக் காத்த வீராங்கனையே;
முள்ளிவாய்க்காலின் பெருந்துயரை
உன் கனிவான முகத்தில் மறைத்து
எங்கள் இதயத்தில்; இரத்தத்தில்; உணர்வில்
விடுதலை என்னும் ஒற்றை வார்த்தையை
உன் மரணத்திற்கு பதிலாய் ஆழப் பதிந்தவளே;
தீபன், விதுசா, கடாபியெனும் வீர வரிசையில்
நான்காவது நட்சத்திரமாய் மறைந்துக் கொண்ட
ஈழக் கனவில் பூத்த – வீர நெருப்பே;
எம் – வெற்றியின் காத்திருப்பே;
உன் கனவுகளில்
தோல்வி குறிப்பெழுத துப்பில்லாத சிங்களவர்
சதிகார கூட்டு சேர்ந்து
விடம் பாய்ச்சி வீசிய குண்டுகளுக்கு
அஞ்சாத மரண வாகை சூடி
ஈழ விடுதலைக்கு ஜோதியாய் கனப்பவளே;
வானத்தில் ஓர்தினம்
விண்மீன் கூட அற்றுப் போகலாம்; போகட்டும்,
தரணி நாளை – எப்படியும் மாறலாம்;மாறட்டும்
மாறா எம் தமிழ் – மறையாத தலைமுறை வரை
எங்களின் வாழ்தலின் –
விடுதலை வேட்கையின் –
நாளைய வெற்றி முழக்கத்தின் –
உயிர்ப்பாய்.. துடிப்பாய்.. நீயும் இருப்பாயடி அம்மா;
ஈழம் ஜெயிப்பாயடியம்மா!!
—————————————————————————
வித்யாசாகர்
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
http://www.thalaivan.com
LikeLike
வணக்கம் தோழரே,
மகிழ்ச்சியான வரவேற்பு, ஆயினும் இக்கவிதைக்கான ஒரு சின்ன பாதிப்பு கூட இவ்விமர்சன இடத்தில் இல்லையே, இதை நீங்கள் எனக்கு மின்னஞ்சலில் கூட அனுப்பியிருக்கலாம். ஒரு போர் வீராங்கனையின் இழப்பிற்குரிய செய்தியல்ல இது, இரத்தத்தோடும் சதையோடும் தன் ஈழ விடுதலை ஒன்றை மட்டுமே கலந்து சுவாசித்த தியாகிகளை உலகின் பார்வையில் பதிய வைக்க முயற்சித்த எழுத்துக் குவியலோ; வார்த்தை கூட்டமோ; ஏதோ ஒன்றென்றாலும், அதில் ஒரு வார்த்தை கூடவா உங்கள் மனதை நனைக்கவில்லை’ என்ற கேள்விகளை எல்லாம் தூக்கிஎறிந்து விட்டு, புதிய முயற்சியை ஊக்குவிக்கும் முகமாய் மனதார வாழ்த்துகிறேன்.
இயன்றளவு இனி எழுதும் படைப்புகளை அனுப்பித் தருகிறேன், நிச்சையம் நம் வலையின் மூலம் நிறைய பேர் ‘தலைவனை’ அறியப் பெறுவார்கள் என்றே நம்புவோம்.
தமிழன் தொலைக்கும் தருணங்கள் பல படைப்புகளால் பதிவு செய்யப் பட்டு வருகிறது, அதில் பேரும் பங்காற்றும் இணையத்தில் தங்கள் தளமும் ஒரு முத்திரை பதிக்கும் தளமாகவும், தமிழரின் இன்றைய வாழ்வை சுமந்து நாளைய தலைமுறைக்குத் தரும் வரமாகவும் விளங்கட்டும்.
மனம் நிறைந்த வாழ்த்துக்களுடன்..
வித்யாசாகர்
LikeLike
நீங்கள் நச்சு புகையுடன் மரணித்தீர்கள் ….
இன்று நாம் வேரற்ற மரமானோம்; செல்லரிக்கும் நிலையில்….
வீர வித்துகள் ஆல மரமாய் எழுகவே
எங்கள் கனவு நனவாகவே!!!
LikeLike
வணக்கம் ராதா,
ஈழ மண்ணில் நாம் தொலைத்தவர்கள் எல்லாம் நமக்காக விதைக்கப் பட்டவர்களே. சொட்டும் ஒரு துளி வியர்வைக்கு கூலி உண்டு, தமிழரின் ரத்தமா வீண் போகும்?? ஒரு நாள் நமக்கான நீதி கிடைக்கும். கிடைக்கும் நீதி நம் ஈழ கனவுகளை, ‘வாழ மீட்ட விடிவாய் இருக்குமென்றே நம்புவோம்!
LikeLike