உடம்பெல்லாம் நரைத்து சிரித்த
ரோமங்களுக்கிடையே –
வலித்துக் கொண்டன – உன்னோடில்லாத
அந்த தனித்த நாட்களெல்லாம்;
ஊரெல்லாம் சிரிக்கும் சப்தங்களை
தாண்டித் தானடி கேட்டுக் கொண்டிருக்கின்றன –
நாம் பிரிந்து தவித்த அந்த
விசும்பலின் சப்தங்களெல்லாம்;
நெருப்பில் சிவந்து தகித்த அனலாய்
எரியுதடி – உன்னோடில்லாத நாட்களின்
இரவில் கரைகளாய் படிந்து கரைந்தோடிய
நம் இளமையும் துள்ளலும்;
எட்டி தூரவைத்த கால்களிங்கே ஓய்ந்து
தரையில் வீழ்கையில் – மிச்சம் மீந்ததென்ன
நீயும் நானும் சேர்ந்திடாத நாட்களின்
வெறுத்து வாழ்ந்த சலிப்பு நினைவுகள் தானே..?
ஒருவேளை –
விடுமுறையில் வந்து போனதை
ஊரார் வேண்டுமெனில் கணக்கில்
வைத்துக் கொள்வர்; கொள்ளட்டுமேடி –
நீயும் நானும் வாழ்ந்ததெல்லாம்
‘சீக்கிரம் வந்து விடுங்களென’
நீ போட்டக் கடிதத்திலும்’இம்மாதக் கடைசியில் வந்துவிடுவேனென’
நானெழுதிய கடிதப் பொய்யிலும் தானே;
இப்படி ஆசைகளை மூட்டைகட்டி
இருபது வருட வாழ்வை தொலைத்து –
வீடு திரும்பினால் –
பிள்ளைகள் பேசிக் கொண்டன
‘பொறுப்பில்லாத அப்பாவாம் நான்;
பணத்திற்காய் ஓடுகிறேனாம்;
நான் – எனக்காய் வாழ்ந்தாவது போனேனா???
இல்லையென என் பிள்ளைகளுக்கு நான்
பாடையில் போன பிறகு தான் புரியுமோ?
உன் கனவையும் என் கனவையும் சேர்த்து
நான் அங்கு தொலைத்ததால் தான்
இவர்களின் வாழ்க்கையை – இங்கு பெற்றேனென
புரிந்துக் கொள்ளும் முன் –
என் மீது – புள் பூண்டு முளைத்துப் போகுமோ???
முக்கிப் பெற்ற மூன்று பிள்ளைகளுக்குக் கூட
எனை அப்பா என்று நீ –
தொலைபேசியில் சொல்லித் தெரிந்தது தான்
நான் பெற்ற சாபமோ?
நிஜத்தில் –
காற்றும் வானமும் மட்டுமேடி
உன்னையும் – என்னையும் அறிந்திருக்கும்,
தொலைபேசியில் நீ அழைத்தப் போதெல்லாம்
நீ கேட்டுத் தர முடியாத – முத்தங்களெத்தனை
ஒன்றாயிரண்டா..?
தொலைபேசியில் பெருமூச்சு விட்டே
கழிந்த வருடங்களெத்தனை
ஒன்றாயிரண்டா..?
ஆசைப்பட்டு – ஆசைப்பட்டு
பட்டு.. பட்டு.. பட்டுப்போன
கனவுகளெத்தனை – ஒன்றாயிரண்டா..?
அத்தனையும் வாழ்ந்துத் தீர்க்க
இன்னும் ஜென்மமெத்தனை பிடிக்குமோ
பிடிக்கட்டுமேடி;
இதோ மரணக் கயிறு வந்து
கழுத்தை இருக்கும் கடைசி இறுக்கத்தின்
அழுத்தம் வரை –
உனக்காய் நானும்; எனக்காய் நீயும்
மட்டுமே வாழ்ந்தது வாழ்க்கையடி; வாழ்க்கையடி!!
—————————————————
வித்யாசாகர்
தனிமை……
பிரிவு…..
நினைவுகள்….
வலிகள்…..
தியாகங்கள்…..
உயிராய் கரைத்த நிமிடங்கள் வருடங்களாகி ஓடி மறைந்து…..
தனிமை கணவன் மனைவியை விட்டு வெளியூர் வேலை என்று தேடிக்கிட்டு போனால்… அதனால் ஏற்படும் இழப்புகள் அத்தனையும் ஒன்னு கூட விடாம நீங்கள் இங்க வரிகளாய் தந்த விதம் மனதை கனக்கச்செய்கிறது…..
இளமையில் பிரிவென்பது எத்தனை கொடுமை….. அதிலும் கொடுமை உற்றார் ஊரார் பேசும் கொடும் பேச்சுக்கள்….பிறந்த பிள்ளைகள் முகம் கூட பார்க்க முடியாது என்பது எத்தனை வேதனை…..
பிள்ளைகளை வளர்க்க ஒரு பக்கம் தந்தையின் உழைப்பு வெளியூரில் தாயின் சிரமங்கள் சங்கடங்கள் ஊரில்….
கணவன் அருகிலிருப்பது எத்தனை பலம்… அதுவே கணவன் அருகில் இல்லாமல் அவன் நினைவுகளுடனே காலம் தள்ளுவது மிக துன்பமான காலங்கள்…..
காலங்கள் உருண்டோடுகிறது…. மனைவி உடலளவில் தளர்கிறாள்…. ஆனால் மனதில் நம்பிக்கையோடு கணவனின் வருகைக்காக… அதே போல் அங்கே கணவனின் நிலையும்… அன்புடன் ஊட்டும் ஒரு கவளம் சோறில் தெரியும் அன்பு மெஸ்ஸுல ஹோட்டல்ல கிடைக்குமா? இரவு கனவும் தலையணையில் புதைத்து அழும் கண்ணீரின் துணையுமாக எத்தனை காலங்கள் கழிந்தன என்பதற்கு இரவே சாட்சி….
பிள்ளைகள் வளர்ந்து அவர்கள் இஷ்டப்பட்டதெல்லாம் வாங்கிக்கொடுத்து அப்பா அருகில் இல்லா குறை தெரியாமல் பார்த்துக்கொண்டு அப்பிள்ளைகள் அப்பாவின் துன்பமும் அம்மாவின் சிரமமும் புரிந்துக்கொண்டால் நாம் உழைத்த உழைப்புக்கும் ஒரு பலன் இருந்திருக்கும்… அதுவும் இல்லாமல் இருவரையும் குறை சொன்னால் ஹும்…..
வெளியே கால் எடுத்து வைக்கும்போது எல்லோரும் ஜோடி ஜோடியாக போகும்போது மனதில் பரவும் ஏக்கத்தை எதை கொண்டு சமாதானம் செய்ய முடியும்? அருகே இருந்து ஊடலும் கூடலுமாக நாட்கள் நகரும்போது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருந்தது போலிருக்கும்…
இயந்திரங்களுடன் இயந்திரமாக தானும் முடங்கி தன் உடல்பலத்தை எல்லாம் இங்கே வியர்வையாக்கி அதை காசாக்கி ஊருக்கு அனுப்பி மனைவியை தவிர மீதி எல்லாரையும் முடிந்த அளவு திருப்திப்படுத்தி….. மனைவியின் ஆசை காத்திருப்பு ஏக்கம் எல்லாமே கணவனின் அருகாமை தான்… வேணாங்க போகாதீங்க… இருப்பதை கொண்டு கூழோ கஞ்சியோ குடிச்சிக்கிடலாங்க…. போகாதீங்க…. மனைவியின் சிந்தனை குண்டு சட்டியில் ஓட்டும் குதிரையை போல… அந்த அளவுக்கு தான் சிந்திக்கமுடியும்…
ஆனால் ஆண் சிந்திக்கிறான்… எதிர்க்காலம் பற்றி… பெற்றோரின் இறுதிக்காலத்தில் உடன் இருந்து தரமுடியாத அன்பை இப்படி தன் பணத்தால் நிறைவு செய்யமுடியவில்லை என்றாலும் வாழ்க்கை ஓட்ட பணம் அத்தியாவசியமாகிவிடுகிறது… அதற்கு பலிகடாவாக கணவனும் மனைவியும் தன் சுகங்களை முழு மனதுடன் தியாகம் செய்து,……
பிள்ளைகளை வளர்க்க வெளியூர் போகவேண்டிய அவசியமில்லை… உள்ளூரில் இருந்து சம்பாதித்தால் போதும்… ஆனால் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு சொந்தமாய் இருக்க ஒரு வீடு கொஞ்சம் சேமிப்பு பெண்குழந்தை என்றால் அதன் கல்யாணத்துக்கு உடன் பிறந்த கல்யாணமாகாத தங்கைக்கு நன்றாய் படிக்கும் தம்பிக்கு கல்விச்செலவுக்கு….
இப்படி எல்லாம் சிந்திக்கிறான்….. அதற்கு தன்னையும் தன் மனைவியையும் வேள்வியில் நெய்யாய் தாரை வார்க்கிறான்… தன் இளமையை தன் சுகத்தை தன் சந்தோஷத்தை இருவருமே தியாகம் செய்து சேர்க்கும் பணம் தான் இன்று வீடாகி உயர்ந்து நிக்கிறது….. பிள்ளைகளின் பட்டமாய் மிளிர்கிறது….
இளமையையும் தன் சுகத்தையும் வயதையும் கொடுத்து தனிமையும் பிரிவையும் வாங்கி இதோ இறுதிகாலத்தில் எல்லா கடமைகளையும் முடித்து அக்கடான்னு உட்காரும் அந்த பொழுதிற்காக முதுமையிலாவது மனைவியின் மடியில் தலை சாய்த்து கதைகள்பேச காத்திருக்கிறான்……
அழகிய கவிதை எளிமையான வார்த்தைகள்…. அட நாமும் இப்படி தானேன்னு எல்லோரையும் நினைக்கவைக்கும் வரிகள்….. எல்லோரும் இப்படி ஒரு வாழ்க்கை தான் வாழ்ந்துட்டு இருக்கோம், ஆனால் அதை கவிதையாக்கி படைக்கும் திறமை உங்களுக்கு இருக்கு…. இது தான் உங்க வெற்றி வித்யா….
ஹாட்ஸ் ஆஃப் வித்யா…..
அன்புடன்
மஞ்சுபாஷிணி
LikeLike
//இப்படி எல்லாம் சிந்திக்கிறான்….. அதற்கு தன்னையும் தன் மனைவியையும் வேள்வியில் நெய்யாய் தாரை வார்க்கிறான்… தன் இளமையை தன் சுகத்தை தன் சந்தோஷத்தை இருவருமே தியாகம் செய்து சேர்க்கும் பணம் தான் இன்று வீடாகி உயர்ந்து நிக்கிறது….. பிள்ளைகளின் பட்டமாய் மிளிர்கிறது….
இளமையையும் தன் சுகத்தையும் வயதையும் கொடுத்து தனிமையும் பிரிவையும் வாங்கி இதோ இறுதிகாலத்தில் எல்லா கடமைகளையும் முடித்து அக்கடான்னு உட்காரும் அந்த பொழுதிற்காக முதுமையிலாவது மனைவியின் மடியில் தலை சாய்த்து கதைகள்பேச காத்திருக்கிறான்……//
ஒரு மழை ஜோவென பெய்து விட்ட மாதிரி இருக்கு மஞ்சு. நான் மேலும் கீழுமாய் வார்த்தைகளை போட்டிருக்கிறேன், நீங்கள் வரிசையாய் அமைத்திருக்கிறீர்கள், அவ்வளவு தான் விஷயம், மற்றபடி என் மொத்த “பிரிவுக்குப் பின்” புத்தகத்திற்கான காரணத்தையும் நீங்கள் உள்வாங்கி எழுதிவிட்டீர்கள்.
ஒரு வேலை நான் புத்தகம் வெளியிடும் முன் இப்படி ஒரு விமர்சனம் கிடைத்திருப்பின் இதையே கூட ‘புத்தகத்திற்கான அணிந்துரையாக போட்டிருக்கலாம் போல். மிக்க மிக்க மக்க நன்றிகள் பல உங்களின் விரிவான விமர்சனத்திற்கு மஞ்சு!
இது ஒரு பதிவிற்குறிய வலி என்பது மட்டும், இதயத்தில்; நம் வளைகுடா சகோதரர்களின் முன் முத்தைப்பாய் நிற்கிறது!!
LikeLike
பிரிவின் வலி; பிரியாமலே உணர்கிறேன், வித்யாவின் கவிதையிலும், மஞ்சுவின் கருத்திலும்.
பகிர்ந்து கொள்ளுவோம் வலிகளை.
சந்தோசத்தை பகிர ஆயிரம் பேர் உண்டு;
வலிகளை பகிர தான் உங்களை போன்ற ஒரு ஜீவன் போதும்!
LikeLike
ஆம் சரளா. வலியை பகிர்ந்துக் கொள்ளவோ தாங்கிக் கொள்ளவோ எல்லோரும் தயாரில்லை. எனக்கு வலிக்கும் போது ஐயோ எனக் கத்தும் மனசு அவனுக்கும் இப்படி வலிக்குமே என்று சிந்திக்க எல்லோரும் அதிக பேர் முனைவதில்லை.
எனக்கு வலித்த போது உணர்ந்தேன், வெளிநாடுகளில் தொழிலின் புரிய சுய உணர்வுகளை கூட மரத்து கொண்டு வாழ வந்துள்ள அத்தனை கோடி மனிதர்களின் வலியையும்.
எங்கோ யாரோ பகலெல்லாம் இரும்பில் அடிப்பட்டு, வரிசையில் நின்று சாப்பிட்டு, வரிசையில் நின்று சம்பளம் வாங்கி, வரிசையில் நின்று வண்டியில் எறி.. கடைசியில் அலுத்து போய் வந்து படுக்கையில் விழுகையில், உச்சி மண்டையில் அடித்தது போல், மனசெல்லாம் நனைக்கும் மனைவியின் வலி????? எப்படி பட்டதென சிந்தித்தில்;
ஒரு கடிதத்திற்காக காத்திருந்த இருப்பின் தவிப்பில் வருடங்களை தொலைத்தும், தொலைபேசி அழைப்பு துண்டிக்கையில் உடைந்த மனதின் விசும்பலிலும் வழிந்ததென் கண்ணீர் ‘பிரிவுக்குப் பின்னென’ சரளா…
அங்கனம் கூரை பார்த்து படுத்திருக்கும் ஒரு உயிரின் உணர்வை நம் கவிதை சொல்லுமானால் அது கவிதையின் இலக்கணம் இல்லாவிட்டாலென்ன ஏதோ ஒன்றாக இருந்து பதிவாகட்டுமே என புத்தகமாக்கியதே இந்த பிரிவுக்கு பின்!
LikeLike
உடல் கூறுகளை மட்டுமே
உயர்வாக பேசி திரியும்
உயர்வில்லா உள்ளங்களுக்கிடையில்
உளகூறுகளை அறிந்து
உலகரியசெயும்
உன்னத உள்ளங்களை அறிய முடிகிறது
எங்கோ ஒரு மூலையில்
ஒரு உயிரின் அவலகுரலை
ஊடகத்தின் மூலம் பார்க்கும் போது
உள்ளம் கசிகிறது
உணர்வு பொங்குகிறது
மனசு கனத்து போகிறது
என் இரத்தம் துடிக்கிறது
அந்த உயிருக்கும் எனக்கும் என்ன உறவு
என்று எதார்த்தமாய் இருக்க முடிவதில்லை
என் வீட்டில் இழவு விழுந்தது போல
எனக்குள் அப்படி ஒரு சோகம்
எதையோ இழந்தது போல தவிப்பு ….
எப்படியாயினும் பிழைத்து விடக்கூடும்
யாரேனும் காப்பாற்றிவிட வேண்டும் என்று
கடவுளோடு மன்றாடுகிறது மனது ………….
ஏன் எனக்குள் இந்த வலி
என்று ஆராயவில்லை
ஆச்சரியபட்வும் இல்லை
எங்கு பறந்து சென்றாலும்
படர்ந்து சென்றாலும் – நாம்
ஒரு தாயின் தவப்புதல்வர்கள்
என்பதால் வந்த வலி இது …………………
LikeLike
ஆம்; தமிழின் தவப் புதல்வர்களென்று மகிழ்வோம் சரளா.. மிக்க நன்றி!
LikeLike