“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா”

முன்பாகவே வாழ்த்தி மகிழ்ந்த அன்புள்ளங்களுக்கு நன்றி!

21.05.10, வெள்ளிக் கிழமை மாலை ஆறு மணியளவில், குவைத் பிந்தாஸ் அரங்கத்தில் விழா துவங்கி இரவு பத்து மணிவரை, மிக சிறப்பாகவும், தமிழரின் சிறப்பு இப்படித் தான் இருக்கும் என்பதாகவும், தமிழர் விழாக்களை இப்படி நடத்துங்கள் என நம் பண்பினை மீண்டும் நமக்கே போதிப்பதாகவும், நாட்டியம் கிராமியப் பாடல்கள், ஐயா அவர்களின் தமிழ் பேச்சாழி என வந்தவரின் உள்ளம் கவர்ந்து நிறைவடைய தமிழர் என்ற பெருமிதத்துடன் கலைந்தது கூட்டம்.

ஐயா திருவுடையான் அவர்களின் குரலில் பாரதியார் பாட்டும், பட்டுக் கோட்டையார் பாட்டும் இன்ன பிறவும் கலந்து அனைவராலும் மிகையாய் ரசித்து சிந்திக்கப் பட்டு, தலையாட்டவைத்து; குத்துப் பாட்டிற்கும், க்ளப் ஆட்டத்திற்கும் ஒரு கொட்டு வைத்தது மறுக்க இயலாதது.

பேராசிரியர் நன்னன் ஐயா அவர்களின் என்பத்தி எட்டு வயது வாழ்க்கையின் அனுபவத்தை ‘நீங்களும் இப்படி வாழுங்களேன் என்பது போல்’ மறைவின்றி சில அவசியமான அனுபவங்களை நகைச்சுவை கலந்தும் யாதார்த்தம் மாறாமலும் பகிர்ந்து, முடிவில் தமிழ் வாழ; மொழி வாழ, வேறொன்றும் இல்லை; பேசுங்கள் போதும் என்றார்.

ஆம்; தமிழர் யாரை பார்த்தாலும் அழகிய, தமிழில் பேசுங்கள், கலப்பின்றி பேசுங்கள், நம் பெருமைக்குரிய தமிழை மீட்டெடுங்கள் என்றார். நம் பழங்கால தமிழரின் சிறப்புகள் சிலதை சொல்லி இத்தனை சிறப்பிற்குரியவன் தமிழன், நம் தமிழ் மொழி இன்று செம்மொழி ஆகவில்லை, அது என்றுமே செம்மொழி தான், அதை இன்று தான் தில்லிமா நகரம் புரிந்துள்ளது, அதன் காரணமாக இன்று உலகளவில் தமிழை கொண்டாடத் துவங்கி விட்டார்கள், தமிழின் பெருமை உலகறிய துவங்கியுள்ள இந்த காலகட்டத்தில் நாமும் அப்பெருமைக்கு உரியவர்களாய் தமிழர்களாய் வாழ்ந்து கலப்படமின்றி பேசி நம் மொழியையும் அதன் மூலம் நம் பண்புகளையும் காப்போம் என்று கூறி மனமின்றி நேரமின்மையால் முடித்துக் கொண்டார்.

மிக இனிய பொழுதாக வாழ்வின் ஒரு உண்ணத நிமிடங்களாக கடந்தது அவரோடிருந்த கணங்கள். ஐயா தமிழ்நாடன் தம்பி தமிழன் மணியன் ஐயா முத்துக் குமார் மற்றும் இன்னும் இதர பொறுப்பாளர்கள் எல்லோருமே வெள்ளை சட்டை வெள்ளை வேட்டியில் வந்து அரங்கத்தை அழகு படுத்தினர். குறிப்பாக நாட்டியமாடிய குழந்தை என்று சொல்லுமளவு வயதை யொத்த சகோதரி அழகாக பரத கலையின் சிறப்பை தன் நாட்டியத்தில் உணர செய்தார்.

இனிய தமிழ் பேச்சில் இரண்டு குழந்தைகளை வைத்தே விழாவை தொகுத்து வழங்கியது விழாவின் இன்னொரு முத்தாய்ப்பு. அதோடு நில்லாமல், தமிழில் பேசுவது போல் குழந்தைகளுக்கு சர்க்கரை பொங்கல் என்று வைத்தாலும் பரவாயில்லை அழகிய தமிழில் பெயர் வையுங்கள் என்று ஐயா கேட்டுக் கொண்டதற்கிணங்க, தொகுத்து வழங்கிய அக்குழந்தை அவரிடம் சென்று என் பெயர் தமிழா தாத்தா என்று கேட்க, அவர் இல்லையென்று சொல்ல,அதற்கென்ன செய்வதென்று அக்குழந்தை வினவ, தமிழில் பெயர் வைக்கவேண்டுமென்று அவர் சொல்ல, முடிவில் இனியவள் என்று அக்குழந்தைக்கு பெயர் சூட்டி மகிழ்ந்தார் ஐயா நன்னன் அவர்கள்.

எல்லாம் கடந்து விழாவில், வந்தோரை நடமாடும் நூலகமாக்கும் முயற்சியாக விரும்பிய அத்தனை பேருக்கும் அவரவர் அலைபேசியில் திருக்குறள்,நளவெண்பா, பாரதியார் பாட்டு, ஆத்திச்சூடியை ஏற்றித் தந்து விழாவிற்கு மேலும் சிறப்பை சேர்த்தது ஒரு சகோதரா குழு.

இத்தனை சிறப்புகளோடு அழகிய விழா மலர் சேர்ந்து நற்றமிழ் சிந்தனைகளோடு வந்து நமை ஆட்கொண்டு விடை பெறுகையில், அன்பு சகோதரர் ஐயா பாலன் அவர்களின் ‘உதயம் உணவகத்தின்’ மணங்கமழ்ந்த சுவை மிகு உணவில் வயிறும் நிறைய ‘பொங்கு தமிழ் மன்றத்திற்கு” மனதார்ந்த நன்றியை கூறி விடைபெற வைத்தது விழா!!

அத்தகைய தோழர்களுக்கு வாழ்த்தை தெருவித்து; இது போன்ற விழாக்களை மேலும் நடத்தி தமிழை சிறப்பித்து தமிழரை தமிழராய் அடையாளப் படுத்துவோம்.

பெருத்த நன்றிகளின் கைகூப்புடன்..

வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அறிவிப்பு and tagged , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s