சிறகின்றி பறக்கும்
துள்ளலின்றி நகரும் மேகங்களுக்குள் ஒளிந்து
அழகுற்ற வான மதப்பில்..
நீண்டு வளைகிறது –
வண்ணம் நிறைந்ததொரு ஓவியம்,
தூரல் மழையின் சிலிர்ப்பில்
காது மடல்கள் அசைவுற –
சிதறும் மழைத்துளிகளின் ஓசை
இயற்கையின் ஜாலமாய்
உள்புகுகிறது இசை,
பசுமையை அள்ளிப் பருகும்
மரங்களின் அசைவுகளில் – காற்று
விளையாடி யுள்ளே –
இதமாய் எழுதும் தென்றல்
தன்னை மறந்து எழுதுகிறதொரு, ‘கால கவிதை’,
சுடும் நெருப்பென தகிக்கும்
வெய்யிலின் வெக்கையில் –
காற்றினை சூடு கொள்ளைகொண்ட – இறுமாப்பை
உடைத்தெறிய –
இலட்சியமின்றி துணிகிறது; மர நிழல்கள்,
முகமெல்லாம் அழுக்கு பூசி
பால்குடி வாசம் கழுகாத மழலையின்
பளிச்சென்ற வெள்ளை சிரிப்பில் – மதிமயங்கி
லயிக்கிறதொரு –
ரசனை பூத்த யதார்த்தம்,
வாசலில் முகம் சாய்த்து
வருகைக்குக் காத்திருக்கும் மனைவியின்
முகம் பார்த்த பரவசத்தில் –
லேசாய் அவளுதிர்த்த புன்னகையில் – பிறக்கிறதொரு
குடும்பத்தின்; வெற்றிப் புன்னகை,
மரக்கட்டைக்குள் எரிக்கையிலோ
மண்கொட்டி மூடும் பொழுதிலோ
மனசு மட்டும் கனவு சுமந்து –
கதறியழ இயலாதா உயிர் போன உடலின்
ஈரத்திலிருந்து நீங்கியிராத –
நீண்டதொரு நன்றிக்கான ‘அம்மா’ ‘அப்பா’ எனும்
தோற்றுப் போன அழைப்பு நிரூபிக்கிறது
அவர்கள் வளர்த்த அன்பை!
————————————————————-
வித்யாசாகர்
//சுடும் நெருப்பென தகிக்கும்
வெய்யிலின் வெக்கையில் –
காற்றினை சூடு கொள்ளைகொண்ட – இறுமாப்பை
உடைத்தெறிய –
இலட்சியமின்றி துணிகிறது; மர நிழல்கள்//
இந்த வரிகள் அருமை…
LikeLike
மிக்க நன்றி சௌந்தர், பிறர் ரசனைகளில் தான் மிளிர்கிறது ஒரு படைப்பாளியின் உழைப்பும் திறனும். வாழ்க!!
LikeLike
காற்று விளையாடி யுள்ளே –
இதமாய் எழுதும் தென்றல்
தன்னை மறந்து எழுதுகிறதொரு, ‘கால கவிதை’
ஆஹா.. அழகான வரிகள் இயற்கையோடு விளையாடுகிறது…
யாவும் மறந்து நாமும் இயற்கையின் குழந்தைகளாக ஏங்கும் மனது…:-(
LikeLike
நல்ல ரசனை உள்ளோரை மன்னிக்கவும் ஒருங்கிய அல்லது ஒத்த ரசனை உள்ளோரை கவரும் போல். நான் எதிர்பார்த்து ரசித்து எழுதிய வரிகள் இவை..
நன்றிகள் உரித்தாகட்டும்!!
LikeLike