உள்ளே மின்னலாய் வெட்டி
உள்புகுந்து –
உயிர்தின்கிறது முள்ளிவைக்காளின் ஓலம்;
மறக்கமுடியாத அந்நாட்களின்
இழப்பில் புதையுண்ட எம்
விடுதலையின் வேகத்தை
மீட்டெடுத்துவிடும் துணிவில் தான்
இரவு பகல் கடக்கின்றோம்;
அம்மா என்றழைக்கும் பிள்ளைகளின்
குரல் தாண்டி –
அம்மா……….யென அலறிய அலறலில்
ஒன்று கூட உலகத்தாரின்
மனம் துளைக்காத குற்றத்தால் தான் – இன்று
அனாதையாய் ஓர் இனமே தவித்து நிற்கிறது;
உயிர் போனால் போகட்டும்
துடித்து துடித்து போன கொடுமை
எம் இனம் தாண்டி எவருக்குமே
வேண்டாத கொடுமை தான்;
வேண்டாத கொடுமை தான்;
ஓடிக் கலைத்து
குண்டு வெடிப்பிலும் உயிர் மீட்டுப் பிழைத்து
எங்கோ கேட்ட
அப்பாயெனும் பெற்ற குழந்தையின் அலறல் தேடி
அலைகையில் –
இந்த குழந்தையா
இந்த குழந்தையாயென
வெடித்து சிதறி வீழ்ந்த பிஞ்சுகளை
பார்க்கவா பிறப்பெடுத்தோம்???
எங்கோ இருப்பார்கள் என்று
இருப்பதே கொடுமை
யாரும் இல்லையென்றறிந்தும்
ஏனிந்த வாழ்வோ??
இனம் என்றால் என்ன
தேசமென்றாலென்ன
வாழ்வென்றாலென்ன
வலியென்றாலென்ன என்றெல்லாம்
என்றோ எழுதி பாடி சொல்லி சலித்த
ஓரினத்தின் வரலாறு –
இப்படியா சரிந்து போகும்??
போர்கவசம் பூண்டு
வாளேந்தி
தேரோட்டி
சீவிய தலைகளோடு சிங்கமென புறப்பட்டு
கண்பட்ட இடமெலாம் கொடி பறக்க வாழ்ந்த வீரம்
மறந்து போனதா உறவுகளே???
புளிவிரட்டியதாய் கேட்ட கதை
நீதி பிறழ்ன்றதால் மதுரை எரித்த கதை
கங்கை கொண்ட சோழபுரத்தின் கதை
கரிகாலன் ஆண்ட கதை
கதை கதை கதையோடு
எம் மக்களின் மரணத்தையும் குறிப்பெடுத்துக் கொண்டு
நிம்மதியாய் தூங்கி யெழுங்கள் உறவுகளே;
நாங்கள் செத்து மடிந்த
வரலாறில் –
நாளை உங்கள் பிள்ளைகள்
நூற்றுக்கு நூறு
மதிப்பெண்ணெடுக்க –
இதோ இந்த நாட்களை எல்லாம் வேண்டுமெனில்
சேகரித்துக் கொள்ளுங்கள்,
இலவசமாக எங்களின் கண்ணீரையும்
தருகிறோம் – கதைஎழுதுங்கள்,
எங்கள் மரணம்
உங்களுக்காவது
வாழ்க்கையை தரட்டும்!!
நீங்கள் வாழ்ந்து தீர்க்கும்
மதப்பில் –
எங்களின் கல்லறைகள் கனக்கட்டும்!!
ஏனென்று கேட்காத
எதையேனும் செய்யாத
வீடுவிட்டு நகராத உங்களின்
வீரத்தில் –
ஈழம் கனவாகவே போகட்டும்!!
உங்களுக்கென்ன
யாரோ தானே இறக்கிறார்கள்
எங்கோ தானே குண்டு வெடிக்கிறது
ஏதோ எல்.டி.டி. தானே சண்டை போடுகிறார்கள்;
நீங்கள் தூங்கியெழுங்கள் தூங்கியெழுங்கள்
எழுகையில் காபியோடு கிடைத்த
ஒரு நாளேட்டில்
இத்தனை குழந்தை
இத்தனை பெண்கள்
இத்தனை முதியோர்
இத்தனை தமிழர்கள் ஈழத்தில்
இறந்ததாய் போட்டிருக்கும்
ஒரு உச்சு கொட்டிவிட்டு நாளேட்டை
புரட்டிவிடுங்கள் –
நாளைய தமிழினம் இன்றிலிருந்தே மடியட்டும்!!
————————————————————————-
வித்யாசாகர்
வலிக்க.. வலிக்க வாழ்ந்துகொண்டிருக்கிறோம் வித்யாசகர், இறந்துபோன இதயத்தை வைத்துக்கொண்டு..
LikeLike
நம் போன்ற நிறைய பேருக்கு வலிக்கிறது உமா, வலிக்காதவர்களுக்கே இதுபோன்ற கவிதைகள் எழுதப் படுகின்றன. வலியில் புடம் போட்டு; வேறென்ன செய்வதென யோசிக்க வேண்டாமா…, அதற்குத் தான்.. இது போன்ற கவிதைகள். யார் மீதும் கோபப் படும் உணர்வுமல்ல இது, தன் மீதே தான் கொண்டு ‘தன்னை உறுத்தும் குற்ற உணர்வினால்’ தனக்கும், தன்னோடுள்ளவருக்கும் அடுத்த கட்ட முயற்சிகளை நினைவுறுத்தும் விடுதலைக்கான ஒரு வேட்கை; உயிரற்று போனவர்களுக்கான பதிவுகள் இது.
பகிர்விற்கு நன்றி உமா!!
LikeLike