ஒரு சந்துமுனை திரும்புகையில் தெரிகிறதந்த புத்தக கடை.
ஓடிச்சென்று ஒரு புத்தகம் எடுத்து வேகவேகமாய் புரட்டுகிறேன். ‘ஒரு குருடனிடம் சென்று அதோ உனக்கான இரு கண்ளும் அங்கே கிடக்கிறது; செல் எடுத்துக் கொள் என்று சொன்னால்’ அவன் எப்படி தேடி துழாவுவானோ அப்படி தேடுகிறேன் நானும் என் படைப்புகள் ஏதேனும் வந்திருக்குமா என அத்தனை வார இதழ்களிலும்..
“தம்பி புத்தகத்தை பிரிக்காதேப்பா”
“கொஞ்சம் மட்டும் பார்த்துக்கறண்ணே”
“இங்க என்ன நூலகமா நடத்தறோம். கடைதானே? போ.. போ..” வெடுக்கென பிடிங்கிக் கொண்டார் புத்தகத்தை; என் மனசு புரியாத கடைகாரர்.
அவர் புத்தகத்தை பிடுங்கிக் கொண்டு விரட்டிய விரட்டில் மனம் வலிக்கத் தான் செய்தது. ஆனாலும் நம்பிக்கையிருந்தது நிச்சயம் இந்த வாரம் என் கதை வந்திருக்குமென்று.
நம்பிக்கை ஆழமாக வேரூன்ற, வேறெங்கேனும் சென்றேனும் பார்த்துவிடுவோமென எண்ணுவதற்குள், அருகில் இரண்டு பேர் புத்தகம் வைத்துக் கொண்டு நின்றிருக்க, அவர்களிடம் சென்று –
“ஐயா ஐயா.. இது ஆனந்த விகடன் தானே ஒரு நிமிஷம் தறிங்களா”
“படிக்கறவன் பணம் கொடுத்து வாங்கிப் படி” அந்த இரண்டு பேரில் ஒருவர்
“பணமில்லீங்க. குடுத்தீங்கன்னா ஒரு சுத்து மட்டும் பார்த்துட்டு கொடுத்துருவேங்க”
“ஒரு சுத்து பார்த்து என்னத்த கிழிக்கப் போற. போவியா”
“நான் ஒரு கதை எழுதி அனுப்பியிருக்கேன் ஐயா. இந்த வாரம் கண்டிப்பா அது வந்திருக்கும்.”
“அப்படியா, உம் பேரென்ன”
“வித்யா’ ன்னு பாருங்களேன்..”
“அதென்ன பாருங்களேன்?? அப்போ நீ எழுதலையா??”
“இல்லைங்கையா, நான் தான் எழுதினேன், வித்யா என் தங்கையோட பேரு” என்றென்
அவர் அப்படியா’ என ஒரு இழுப்பு இழுத்துவிட்டு கையிலிருந்த வார இதழை நான்கு புறமும் புறட்டி சற்று படித்து ஓய்ந்து என்னை இரண்டுமுறை ஏற இறங்க பார்த்து விட்டு, “அதலாம் ஒண்ணும் வரலை யே..” மிகச் சாதாரணமாகச் சொன்னார் அவர்.
எனக்குத் தான் ஏமாற்றம் நெஞ்சை பிளந்தது. இது ஒன்றும் புதிதல்ல என்றாலும், இதை கூட பிரசுரிக்காத வேறென்ன எதிர்பார்ப்பு மிஞ்சிவிடும் இந்த வார இதழ் நடத்துபவர்களுக்கு என ஒரு மூர்கத் தனமாக கோபமெனை மென்றது. ஏதோ ஒரு மனதை அழுத்திய ஏமாற்றம் ‘நான் நடந்துச் செல்லும் தெருவின் நீளமாக என் நெஞ்சைப் அறுக்க, அவர்கள் இருவரும் ஏதோ பேசி சிரிக்கிறார்கள்.
“ஏன்டா சிரிச்ச?” அந்த இரண்டு பேரில் மற்றொருவன் கேட்டான்
“இப்போ இதுல ஒரு கதை படிச்சேன் நல்லாருக்குன்னு சொன்னியே”
“ஆமா ”ஓட்டை குடிசை“
”அது அவன் எழுதியது தான்”
——————————————————————————————————-
வித்யாசாகர்