ஒரு உயிர் பூத்த
நெருப்பாகத் தான்
என்னுள் நுழைந்தாயடி..
என் உயிரின்
ஆழம் வரை
நினைவுகளாய் பற்றி எரிந்தாயடி..
உன் ஒரு சொல்
வார்த்தைக்காய்
துடிக்க வைத்தாயடி..
உன் கடைக்கண்
பார்வைக்காய்
நாலும் தவித்தேனடி..
நீ சுற்றித் திரிந்த
தெருவெல்லாம்
நானும் அலைந்தேனடி..
நீ தொட்ட
பொருளெல்லாம்
சேர்த்து வைத்தேனடி..
நீ கோரும்
விருப்பத்திற்கே
வாழ்வை சமைத்தேனடி..
நீ இல்லாத
நொடியையும் கூட
சபித்தேனடி..
உனக்குப் பிடிக்காத
என்னையும்
வெறுத்தேனடி..
காதல் காதல் என்றே
உன்னில் –
கரைந்தேனடி..
சாதல் சாதலொன்றும்
பெரிதில்லை –
நீயின்றி நிச்சையம்; இறப்பேனடி..
நீ மட்டும்
உண்டென்றால் –
உண்டென்றால்ல்ல்ல்….?
வேறென்ன –
இனிக்க இனிக்க நகரும்
தருணங்களில் – இரண்டு கைவிரித்து வானில்
பறப்பமோடி;
உலகத்தை நம் சிரிப்பொலியில்
நித்தமும்.. நித்தமும்.. நிறைப்போமடி!!!
———————————————————————
வித்யாசாகர்
அடி என முடிக்கும் வார்த்தைகள் கொண்டு கவிதை எழிலாய் நகர்ந்துள்ளது. நிகழ்வுகள் யாவற்றையும் ஒரு பெண்ணுடன் பேசுவதாய்ச் சிலாகித்துக் கவிதையாய் வடித்துள்ளீர்கள். அடி எனும் அடி கொண்டு அழகான ஓவியமாய் நடை போடுகிறது கவிதை. பறக்க ஒரு சிறகு கொடு: வினாக்கள் நிறைந்த விடை காணத் துடிக்கும் ஒரு ஜீவனின் உள்ளத்து உணர்வின் வெளிப்பாடின் வரி வடிவம்!
LikeLike
கவிதை எழுத எழுதுகோல் எடுக்கும் போதே உள்ளே ஒரு கலந்துரையாடல், யாருடனோ பேசும் ஒரு நிகழ்வு, எதையோ முன்னிறுத்தி தீர்வு காணத்துடிக்கும் ஒரு பதைப்பு, எதையேனும் – இவ்வரிகள் முடியும் தருணத்தில் வாசிப்பவரின் இதயத்தில் விட்டுச் செல்ல துடிக்கும் அக்கறையாகத் தான் எழுத முயல்கிறேன்.
என் கவிதைகள் அல்லது படைப்புகள் எனக்கானதாக இல்லாவிட்டாலும் யாரேனும் ஒருவருடையதாகவே உள்ளபடியால், உயிர்த்துக் கொள்கிறது போல். தற்போதெல்லாம். உங்களை போன்றோரின் ஊக்கம் என்னை எனக்குள் ஒரு கனகம்பீரமாக, கர்வமின்றி, நம்பிக்கையை மட்டும் ஆயுதமாக ஏந்தி எழுதப் பனிக்கிறது தமிழ் மதுரம். என் தமிழுக்கு நான் காரணமல்ல, நான் காரியம், அதாவது செயல்; காரணி உங்களை போன்றோர் மட்டுமே. மிக்க நன்றிகள் தங்களின் வரவிற்கு!
LikeLike