நேற்று ராவணன் படம் பார்த்தோம், சொல்ல வார்த்தைகளே இல்லாத படைப்பு. யாரையும் விட்டுப் புகழ வாய்ப்பில்லை. மொத்தத்தில் மணிரத்தினம் அவர்களுக்கே அத்தனை பாராட்டுக்களும் என திரும்பினால்., இசையிலிருந்து; ஒளிப்பதிவிலிருந்து; இடம் தேர்விலிருந்து; அலங்காரத்திலிருந்து; நடிப்பிலிருந்து; வசனத்திலிருந்து … அப்பப்பா… காலம் மாறிப் போச்சின்னு சொல்லி குத்துப் பாட்டு போட்டால் தான் படம் ஓடும் என்பவர்களுக்கு புத்தியிலுரைக்கும் படம்.
பெருசா மாடன் படம் எடுத்துவிட்டேனென பீத்திக் கொள்பவர்கள் மணிரத்தினத்திடமிருந்து பாடம் பயின்றுக் கொள்ளலாம். வெளியில் கேட்டிடாத புன்னகையாக ஒருபுறம் புத்தியை பிரண்டாமல் உள்நுழைகிறது படம். மறுபுறம் நம் இன்ப தமிழில் கலப்படமில்லா பிரம்மாண்ட படைப்பாக புருவம் உயர்த்த வைக்கிறது. ஒடுக்கப் பட்ட மக்களின் கர்ஜனையை நடிப்பில் பிரதிபலித்து அம்மக்களுக்காய் இறக்கம் கொள்ள செய்கிறார் விக்ரம்.
அழகான பெண்ணை பார்க்கையில் மதி மயங்கும் மனிதனின் கட்டுப் பட்டிடாத இயல்பு குணமும், அதையும் மீறி தனக்குரியவள் அவளில்லையென ஒதுங்கி நின்று காயப் படுத்தாமல் கொச்சையுறாமல் அன்பினை மட்டுமே தனக்குள் வளர்த்துக் கொள்ளும் ஒரு சாமானியனின் யதார்த்தத்தையும், அதை உணர்ந்து; மறுக்காமலும் ஏற்காமலும் தன்னிலை மாற்றிக் கொண்டிடாமலும் ‘அவனை புரிந்து; அனுதாபத்தை அன்பாக மனதில் நிறைத்துக் கொள்ளும், ‘ஒரு பெண்ணின் உணர்வும் விக்ரம் ஐஸ்வர்யா ராயினாலும், ஒளிப்பதிவாலும், இசையாலும், இயக்கிய திறனாலும் மிக அழகாக உணர்த்தப் பட்டுள்ளது படத்தில்.
ஒரு பக்க நியாயமாக மண்ணில் புதைந்துள்ள வரலாற்றை; யாரையும் உறுத்தாமல் சொல்கிறது படம். காட்டில் வாழ்ந்த வீரப்பனின் கோபத்திற்கு நியாயத்தையும், உலகிற்கு தெரியாமல் போன அவர் செய்த நல்லவைகளையும் படம் நினைவு படுத்துகிறது. யாரோ ஒரு (காவலாளியை) லட்சிய இளைஞனை அழைத்து அவன் ஒரு குற்றவாளி அவனை பிடிப்பதே நம் தேசத்திற்கு நல்லதென தன் பக்க தவறுகளை மறைத்து, ‘ஒரு நல்லவனை வைத்தே நல்லவனையும் அழிக்கும் அரசியலை நினைவுறுத்துகிறது படம்.
பாடலை பற்றி நிறைய சொல்லலாம். வைரமுத்துவை இது தான் வைரமுத்து எனும் பாடல் வரிகள். ஆட்டமும் பாட்டமும் கும்மாளமுமாக வாழ்ந்தாலும் இடையே நீதிக்கும் நியாயத்திற்கும் அன்பிற்கும் கட்டுப் பட்டு எதற்குமே குறையாதவன் தமிழன் எனும் பாங்கை ஆங்காங்கே காட்சிகளிலும் நிறைய பாடலிலும் உணர வைக்கிறார்கள் படக் குழுவினர். பாடலும் இசையும் வரியும் படத்தின் முழு பலம். அவசியத்திற்குரிய இடத்தின் பாடல்கள் அல்லது பாடல்களுக்கேற்ற சலிப்பில்லாத கதையமைப்பு ரசனை குறையாமல் படம் பார்க்க வைக்கிறதெனலாம். உசுரே போகுதே.. உசுரே போகுதே.. பாடல் கேட்கையில் உயிர் மென்று தின்கிறது.
சொல்லவும் பாராட்டவும் வாழ்த்தவும் நிறைய உள்ளது ராவணா படத்தில். குறிப்பாக இசையும், பாடல் வரிகளும், ஒளிப் பதிவும், பாத்திர தேர்வும் சிறப்பு. ஒரு ஆங்கிலக் கலப்பில்லாத ஆங்கிலப் பட தரத்தில் ஒரு தமிழ் படம் பார்த்த உணர்வு. அந்த ‘யாத்தே…’ அப்படியே மனதில் ஒட்டிக் கொண்டது. படம் பார்த்து விட்டு வெளியேறுகையில் இப்படி ஒரு படத்தை எடுக்கும் அளவிற்கு தமிழன் எத்தனை சுத்தமான உயர்வான மனதை கொண்டுள்ளானென, தமிழரை நினைத்து பெருமை கொள்ள வைக்கிறது படம்.
கள்வரே.. கள்வரே.. பாடலில் ஒரு தம்பதியரின் முந்தைய வாழ்க்கையை அழகிய பாடலும் நடனமுமாக காட்டி முடிக்கும் உத்திக்கு இயக்குனரை பாராட்டுவதா, ஐஸ்வர்யா ராயை பாராட்டுவதா அல்லது திரைக்கு பின்னால் இயங்கிய இப்பாடலுக்கான நடன ஆசிரியை சொபனாவை பாராட்டுவதா என வியக்க வைக்கிறது.
இசைப்புயல் படத்திற்கென உழைத்திருக்கிறார். அவரின் மெனக்கெடல் அவர் மனதை போலவே படத்திற்கு வெற்றியை தந்திருக்கிறது. இசை இசை இமாலய அளவு உயர்ந்துள்ள ரசனை மிக்க இசையின் நகர்வுகளே படமெங்கும் வியாபித்து நம் இதயம் பிடித்து கசக்கிப் பிழிகிறது. இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்துக் கொள்கிறது.
ஒளிப்பதிவு பெட்டி திமிறி சுழன்று காட்சிகளை அள்ளி கண்களில் புகுத்தாமல், ரசனையில் மனம் உள்வாங்கிக் கொள்ளும் விதமும், அதை இசையில் கோர்த்தெடுத்த விதமும், அதற்கு முகபாவம் காட்டும் விக்ரமும் ஐஸ்வர்யா ராயும்.. பிரபு கார்த்திக் பிரிதிவி இன்னும் பிற அத்தனை பேரும் அப்பப்பா… இது தான் மணிரத்தினமென சொல்லாமல் சொல்கிறது படம்.
ஒவ்வொரு பாத்திரமும் படத்தை இரண்டு மூன்று நாளைக்காவது நினைக்க வைக்கும் என்பது உறுதி. மொத்தத்தில்… வைரமுத்துவின் தண்ணீர்தேசம் நாவல் படித்து முடித்து சில நாட்கள் கடலில் கிடந்த கதையாய், ராவணின் இது போன்ற ஒழுக்கத்தை, ஒரு பக்க நியாயத்தை எண்ணி; அத்தனை பேரின் உழைப்பிற்குள்ளும் நனைகிறது மனசு!!
வெளியில் தெரியாமல் திரைக்குப் பின் உழைத்த இதர பல படைப்பாளிகளுக்கு, இத்திரைப்படக் குழுவிற்கு பாராட்டவும் வாழ்த்தவும்.. உலகளாவி நிறைய பேர் இருப்பார்கள்.. நன்றி சொல்லவே நான் கடமை பட்டேன்!
பெரு நன்றிகளுடன்..
வித்யாசாகர்
விமர்சனம் நன்றாக செய்துள்ளீர்கள். பொதுவாக எனக்கு மணிரத்தினம் படம் பிடிக்காது, என்றாலும் பரவாயில்லை ஒரு முறை இப்படத்தை பார்கிறேன். (இது அனேகமாய் கடைசி படமாக இருக்கலாம் என மணி பேட்டியில் கூறியுள்ளார்)
LikeLike
மிக்க நன்றி ராம். இப்படி தான் என்பது என் கருத்தல்ல. இது என்னொரு பார்வை. இங்கு குவைத்தில் தமிழ் படங்கள் வருவதே அரிது. அதிலும் இப்படி ஒரு எதிர்பார்க்கப் பட்ட படமென்றால் என்ன எதிர்பார்ப்போடு படத்திற்கு போவோம். பொதுவாக அதிக குறைகளை காண நான் விரும்பவதில்லை. நல்லதை மட்டுமே தேடும் பார்வை எனதானது. உடனே அதை பாராட்ட வேண்டும் என்றும் நினைப்பேன். தீயதை கண்டு கண்டு நொந்து போனதில் சற்று ஆறுதல் கிடைத்தாலும் போதும் என்னும் நோக்கு அது.
இப்போது வரும் படமெல்லாம் பாருங்கள், கண்டிப்பாக சப்தமாக கூச்சலாக ஒரு பாட்டும், ஆபாசம் கலந்த காட்சிகளும் (பாடலிலாவது), தமிழ் என்றாலே பெருங்கடினம் போன்ற வசனங்களும், ஆங்கிலம் சுதந்திரமாக சுற்றும் கதை போக்கும் கேட்டால் யதார்த்தம் என்பார்கள். அதற்கெல்லாம் மத்தியில் சில நல்ல படங்கள் வருகிறது. எனினும் அந்த மீதி படங்களின் வலி இந்த படத்தை புகழ சொல்கிறது இல்லையா!
எனக்கு மிக பிடித்தது இந்த படம். என் கோட்டா பொறுத்தவரை; இது ஒரு திரை படம், அவ்வளவு தான். அதிலும் கலைகள் நன்மை தாங்கி இருத்தல் சிறப்பு என்பதால் சில ஜோடனைகளோடு கவிதைக்கு பொய் அழகு என்பார்களே அப்படி படம் செய்கிறார்கள். அதில் குறை என்பதை விட குற்றம் இல்லாதிருத்தலே போதும் என்றெண்ணுகிறேன்!
இருப்பினும் நான் சொன்னேன் என்பதற்காக படம் பார்க்க விழையும் யாரேனும் அன்பு கூர்ந்து உங்களுக்கு பிடிக்க வில்லை எனில் என்னை திட்டாதிருந்தால் சரி. இது என் பார்வை, என் ரசனை…, என் கருத்து … அவ்வளவு தான்!
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரை கூட விஷம் தானே. தேவை பொறுத்தே பார்வை அமைகிறது ராம். வருகைக்கு நன்றி!
LikeLike
திரு வித்யாசாகர் அவர்களுக்கு ராவணன் திரை விமர்சனம் என்னை இத்திரைபடத்தை பார்க்க தூண்டுகிறது. மிகவும் அழகாக விமர்சித்தீர் நன்றி
ராஜேஸ் குமார்
LikeLike
மிக்க நன்றி ராஜேஷ். இவ்விமர்சனம் ஒரு, ஒரு பக்க பார்வை. இந்த பார்வை பிடிக்குமெனில் படமும் பிடிக்கலாம். நான் மணி ரத்னத்தின் ஒவ்வொரு அசைவையும், படத்திற்காக எண்ணற்றோர் உழைத்த எல்லோரின் உழைப்பையும் ரசித்து ரசித்து பார்த்தேன்!
LikeLike
இவ்விமர்சனம் படித்து விட்டு குறையாக எழுதி உள்ளதாக யாரேனும் நினைத்தால் தோழர் “காவிரி மைந்தன்” எழுதியுள்ளதை வாசித்துக் கொள்ளுங்கள். படத்தின் முன்னிருப்பதை பற்றி நான் எழுதியதை விட படத்திற்கு பின் நிற்பவர்களை பற்றியும் அவர் பேசியுள்ளார்..
பாராட்டிற்குரிய பதிவு அவருடைய பதிவு! http://vimarisanam.wordpress.com/2010/06/19/%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/#comment-135
LikeLike
தாங்கள் படத்தினை விமர்சித்த திறமையும், தங்களின் விமர்சன எழுத்தாற்றல் திறமையும் அருமை. இன்னும் படத்தைப் பார்க்கவில்லை. பார்க்க முயற்சிக்கிறேன். தமிழ் தங்களின் வார்த்தைகளில் ததும்பி வழிகிறது!
LikeLike
மிக்க நன்றி தமிழ் மதுரம். தங்களின் ரசனை அத்தனை ஈர்ப்பாக உள்ளது போல். என்னை பொறுத்தவரை இப்படத்தில் அவர்களின் உழைப்பு, நடிப்பும் அலட்டிக் கொள்ளாமையும் கூட்டணி முயற்சியும், ஒரு ஆசிரியனுக்கு கட்டுப் பட்ட மாணவர்களை போல் ஒரு நல்ல படைப்பாளிக்கு, ஒரு நல்ல மனிதருக்கு கட்டுப் பட்டு உருவாக்கியதாகவே இத்திரைப் படம் தெரிகிறது.
பொழுதுப் போக்கிற்கென ஆரம்பித்த திரையினூடே ஒரே மாதிரியான எதிர்பார்ப்பு நமக்கெதற்கு? இது ஒரு மொழி, ஒரு பாவம், ஒரு ரசனை.. ஒரு படைப்பாளியின் ரசனை. அதை மொத்த நபர்களுக்கும் பிடித்துவிடுமளவு செய்யத் தகுமா?? சிலருக்குப் பிடிப்பதும் சிலருக்குப் பிடிக்காமல் போவதும் இயல்பு. பிடிப்பதாலும் பிடிக்காததாலும் யாரும் குரைக்கோ குற்றத்திர்க்கோ உரியவர்களல்ல. அது அவரவர் சுவை. எதிர்பார்ப்பு. சுயஉரிமை. எனக்குப் பிடித்துள்ளது என்பதை தவிர வேறெந்த உரிமையையும் நானோ பிறரோ பெற்றுவிட வில்லை.
கடவுளை ஒருவர் உண்டென்றால், உடனே அதெப்படி உண்டு, அதலாம் இல்லை என முரணாக சொல்வதாக எண்ணி கடவுளே இல்லை என்றும்; இருக்கு என்றும் சொல்ல இருபாலருக்கும் எப்படி சரியாகவோ முரணாகவோ தோன்றுகிறதோ, அப்படி நன்றாக இருக்கு என்றாலே இன்னொருவர் வேறு எப்படியெல்லாம் நன்றாக இல்லை என்று சொல்வதென்றே பார்க்கும் ஒரு காலமாகிவிட்டது, இக்காலம்.
எனவே. பொது விமர்சனம் விட்டு, சுய விமர்சனம் செய்துக் கொள்வோம். பிறகு தன் கருத்தை மட்டும் பொதுவில் கொணரப் பார்ப்போம்.அதை விட்டு எவரோ சரி என்பதையோ தவறு என்பதையோ புத்தியில் ஏற்றி ‘வெறுமனே பிறரின் உழைப்பை.. பல படைப்பாளிகளை குறை கூறி ஏன் அவர்களின் திறமையை முடக்கிப் போட வேண்டும் தமிழ் மதுரம்.
உழைப்பிற்கு தக்க மரியாதை செய்ய நினைத்ததே; முயற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க எண்ணியதே இவ்விமர்சனத்திற்கான காரணம். இன்னும் கூட என் கண்களில் விக்ரமின் பார்வை.. பிரபுவின் யதார்த்த கர்ஜனை.. ஐஸ்வர்யா ராயின் கண்ணீர் சொறிந்த முகம், பசுமையான அந்த காட்சிகள், வேகமாக தெறித்து தரை தொடும் நீர்வீழ்ச்சி.., என் அப்பாவி மக்களுக்காய் கொடுத்த குரல், என் ஒரு மாண்டு போன தமிழனின் நியாயத்திற்காய் எடுத்த காட்சிகளென கண் முன்னே நிழலாடுகிறது.. படம்!
LikeLike
தோழரே!
வணக்கம். உங்கள் விமர்சனம் படித்தேன். என் ஆண் நம்பிகள் ராவணா ஒரு கலாச்சர சறுக்கல் என்று சொன்னார்க்ள். படம் பார்த்த போது உணர்ந்தேன். இப்படத்தில் பெண்மைக்கு யாரும் நிர்பந்திக்காமல் வரும் சுயக்கட்டுப்பாட்டை அழகாக சித்தரித்திருக்கிறார்கள் என்று!
நம்பிக்கைகும் நம்புவதற்கும் அன்பு மட்டுமே மூலம். அது உறவு என்ற எல்லைக்குள் நிற்பதில்லை.
ஒரு பெண்ணின் மேன்மையைச் சொன்னதாக இப்படத்தை நான் உணர்கிறேன்
LikeLike
ஆம்; தோழி! படம் பார்த்து குறைசொல்பவர்கள் எப்படி சொல்கிறார்களோ தெரியவில்லை.சரி அது அவர்களின் மிக்க அறிவுத்திறன் என்று கொள்வோம். ஆனால் எந்த பார்வையில் பார்க்கிறார்கள் என்று கூட தெரியவில்லை. அதில் வரும் பெண்கள் பாத்திரத்தை எல்லாம் எப்படி ஒரு காத்திரமான பாத்திரமாக காட்டியிருக்கிறார் பாருங்களேன்.
பெண்கள் ஒரு கம்பீரமாக தானியங்கியாக சிந்திக்கும் மனோபாவத்தை இயல்பாகவே காட்டியுள்ளார். மனதில் தோன்றும் ஆசைகளை கூட பிறர் நலம் கருதி கட்டிப் போடுவது சிறப்பென காணலாம். விரும்புபவர்களை அடைவதைவிட, அவரின் நலம் குறித்து சிந்திக்கும் பெரும் போக்கும் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது இப்படத்தில். இதுபோன்ற இன்னும் மிக நிறைய இடங்கள், என்னை மிகவுமாக கவர்ந்ததாக இருந்தது ராவணன் படத்தில்!
மிக்க நன்றி ருக்குமணி. மிக நல்ல பெயர் உங்களுக்கு. வாழ்த்துக்கள்!!
LikeLike
விமர்சனத்தில் தேவையானது எல்லாம் குறிப்பிட்டு இருந்தீர்கள், நான் இன்னமும் படம் பார்க்கவில்லை, உங்கள் குறிப்புகளுடன் சீக்கிரம் பார்க்கிறேன்,
பாராட்டுகள்
LikeLike
மிக்க நன்றிகளைய்யா. உங்கள் பார்வை பட்டதில் பெருமை கொள்ளட்டும் நம் வலைதளம். மிக நல்ல படம். குறைகளை தவிர்த்து நிறையை ரசிக்கும் மனதோடு பார்க்கலாம்.
சிலருக்குள் ‘ஞானி என்று சொல்வார்களே’ அப்படி ஒரு மேல்நோக்கு பார்வையாக அல்லது சற்று இன்னும் ஆழமாக சிந்திக்கும் தன்மை இருக்குமில்லையா, அது மணிரத்தினத்தின் சில காட்சிகளில் பார்க்கலாம்!
LikeLike
ஹாய் வித்யாசாகர்
நான் ரமேஸ், உங்கள் பிளாக்கை நான் இப்போதுதான் பார்த்தேன் உங்களது கவிதைகளை மிகவும் ரசித்தேன்..ராவணன் திரைப்படத்தின் விமர்சனம் படித்தேன்..சரியான் அளவி விமர்சனம் செய்தீர்கள்,சந்தோசம் அடைந்தேன். நான் என்ன நினைத்தனோ அதை அப்படியே பதிவு செய்திருந்தீர்கள்.
இதுவரை எடுக்கப்பட்ட இந்தியப்படங்களில் மிகச்சிறந்த படம் என்றுதான் சொல்வேன். இந்த மாதிரி திரைப்படங்கள் நன்றாக ஓடும் வரையில்தான் சிறந்த திரைப்படங்கக்ள் வர வாய்ப்பு உள்ளது. நான் மணிரத்னம்(உலக அளவில் மிகச்சிறந்த படைப்பாளி) படங்களின் ஒவ்வொரு பிரேமையும் ரசிப்பவன்..
ஆனா நிறைய பேருக்கு இது புரிய மறுக்கிறது.. இந்த திரைப்படத்தை பெரும்பான்மையான மக்கள் ஆதரிக்கவில்லை..அதுதான் ஏன் என்று புரியவில்லை…என் பார்வையில் இந்த திரைப்படம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது என்பேன்… நன்றி வித்யாசாகர்
LikeLike
வணக்கம் அன்பு ரமேஷ்,
ரத்தத்தின் நிறம் ஒன்றென்றாலும், ரத்தம் வேறு வேறு தானே, சிந்தனை வேறு வேறு தானே, அதில் ரசனையும் வேறுபட்டு விடுகிறது. அது அவரவர் விருப்பம். நம் விருப்பத்தை மட்டுமே நாம் எங்கு வேனினும் மிக அழுத்தமாக பதிவு செய்து கொள்வோம்.
எனக்கும் மணிரத்தினம்+அவர் படங்கள் மிக பிடிக்கும். என்னை மிகவும் கவர்ந்தது ஒரு ஞானி போன்ற சில சிந்தனை துளிகள் இப்படத்தில். எனக்கு மிகப் பிடித்த படத்தில் ஒன்று ‘ராவணனும்’ என்று என்றோ குறித்துக் கொண்டேன்!
மிக்க நன்றி ரமேஷ்.. எழுத்தால் இணைந்தே இருப்போம்…
LikeLike
அற்புதம் வித்யாசாகர்…
உண்மையை சொல்வதென்றால் அற்புதமான விமர்சனம்.
இந்த படத்தை பார்த்தபின் இது பற்றிய விமர்சனங்களை Websiteகளில் தேடினேன்.ஆனால் என் மனம் திருப்தியடையும் வகையில் எந்த விமர்சனங்களும் அமையவில்லை.
இப்போதுதான் அந்த குறை தீர்ந்தது. மணிரத்தினம் ஒரு அற்பதமான படைப்பாளி. என் அறிவிற்கு தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் அவரே. அவருடைய “உயிரே” படத்திற்கு என்னிடம் மட்டும் ஒஸ்கார் விருது கொடுக்கும் அதிகாரம் இருந்தால் எத்தனையோ கொடுத்திருப்பேன். இப்படத்தில் விக்ரமின் நடிப்பை கண்டு வியந்தேன். அவர் முகத்தில் அரும்பும் ஒவ்வொரு அசைவும் அற்புதம்.
இப்படி ஒரு நடிகரா என வியக்க வைக்கிறது. அபாரமான நடிகர் அவர்.
இப்படத்திற்கு இவ்வளவு ஆதரவு கொடுத்த நீங்கள் தமிழ் சினிமாவின் இன்னொரு அற்புதமான காவிய படைப்பான “மதராசபட்டினம்” திரைப்படத்திற்கு விமர்சனம் எழுத ஏன் தவறிவிட்டீர்கள்…?
LikeLike
மிக்க நன்றியும் அன்பும் உரித்தாகட்டும் அகல்யா…, முதலில் இங்கு குவைத்தில் எல்லாம் படங்களும் திரையிடப் படுவதில்லை. என்னதான் அவ்வப்பொழுது தமிழ் திரைப் படங்கள் இங்கு வந்தாலும் எல்லாவற்றையும் பார்ப்பதில்லை, பார்த்தவியில்சிளித்து போனாள் அதன் சிலிர்ப்பின் உயர்வினை சொல்லாமலும் விட இயலுவதில்லை. ஆயினும், மதராசப் பட்டினம் பார்க்க நேர்ந்தேன்.. உள்ளம் எம் தமிழரின் வீரியம் கண்டும் காதல் கண்டும் வியக்க நிறைந்து போனேன். அதற்கென மீண்டும் ஒருமுறை அப்படத்தை பார்த்து எழுதுவதாக அப்படத்தின் இணை இயக்குனரிடமும் சொல்லியுமிருக்கிறேன். இன்று நீங்களும் சொல்லிவிட்டீர்களில்லையா……… இனி விரைவில் பதிந்துவிடுவோம்!
உங்களின் அன்பிற்கும் வாழ்த்திற்கும் வியப்பிற்கும் நன்றிகள் பல……!!!
LikeLike
பிங்குபாக்: 2010 in review | வித்யாசாகரின் எழுத்து பயணம்