உயிர் பூக்கும் இடத்தில் இதயமும், இதயம் உள்ள இடத்தில் நினைவுகளும், வாழ்வின் நிராசைகளும் நிறைந்து கிடப்பதை தெரியாமல் தான் மீனை பிடிக்கவும் விற்கவும் வாங்கவும் தின்னவும் நாம் மனிதராகியுள்ளோம் போல்.
ஒவ்வொரு மீனின் சுவைக்குள்ளும், கடலின் ஒரு பகுதி கதைகள் அழியப் பட்டுள்ளது என்பதை நாம் அறிய முற்பட்டோமா என்றால் உடனே இல்லை, அதன் சுவையான வாசனை அவைகளை மறைத்துக்கொண்டது எனலாம்.
ஒரு மரம் கூட தான் துளிர்ப்பதற்கும் வாடுவதற்கும் ஒரு காரணத்தை கொண்டுள்ளது. தன் உயிர்ப்பை பட்டவர்த்தனமாக காட்டும் மீன்களும் பிற உயிர்களுமா அர்த்தமின்றி பிறந்திருக்கும்? ? ?
உண்மையில், ஒரு மரம் பூப்பதற்கும் காய்ப்பதற்கும் கூட காரணம்; மரத்திற்கும் உயிரிருப்பதே என்கின்றனர் முன்னோர். சரி மரமாவது ஒரு மரத்தை வெட்டினால் இன்னொரு மரம் வந்து தடுக்கவோ அல்லது ஐயோ அதை வெட்டுகிறானே பாவி என சபிக்கவோ, நாமாவது தப்பித்து ஓடி நம்மை காப்பாற்றிக் கொள்வோமென ஓடவோ செய்வதில்லை.
அதே ஒரு மீனை பிடிக்க நீரில் கை வைத்தால், கூட்டத்திலிருந்து பிரிந்து ஓடும் பிற மீன்களுக்கு எத்தனை உயிர் பயம் இருக்கவேண்டும்? ஒரு
கோழியை கழுத்தறுத்து கீழே எறிந்தால், அது துடித்து துடித்து அடங்குவதற்கு எத்தனை உயிர்பிரியும் வலியை அந்த கோழி அனுபவித்திருக்க வேண்டும்??? ஒரு ஆட்டினை கழுத்தை துண்டமாக வெட்டிவிட துடித்து துடித்து வாழ்வின் துடிப்புகள் அடங்குவதை கால் சூப்பு குடிக்கும் எத்தனை பேர் பார்த்திருப்போம்? வருந்தியிருப்போம்?

இப்படி பிற உயிர்களின் உயிர் பறிக்கத் தான், ‘நம் நாக்கில் எச்சில் ஊறுகிறதென உணர படுவோமானால், மீன்கள் மிச்சப் பட்ட வரலாற்றினை, ‘நாளை வேறு யாராவது எழுத மாட்டார்களா…?
ஒவ்வொரு முறை நாம் அவைகளை கொள்ளும் போதும், ஐயோ விட்டுவிடு விட்டுவிடு என்று தன் மொழியில் கதறும் அலறல்; நம் நாக்கை மட்டுமா’ கட்டிப் போட மறுக்கும்? தன் வீட்டில் உள்ள ஒரு குழந்தையை வெட்டி சாப்பிட யாராலாவது சிந்திக்கவாவது செய்வீர்களா??? பிறகு வீட்டில் அல்லது ஏதோ காட்டில் உல்லாசமாய் வாழப் பிறந்த பிற உயிர்களுக்கு தீணியிடவும், வளர்க்கவும், துடிக்க துடிக்க வெட்டவும், தின்னவும், ஏப்பம் விட்டு, ‘பாவம் போச்சென்றும் சொல்ல’ எப்படி நாம் உரிமை பெற்றோம்?
என்னை யாரேனும் பணம் கொடுத்து வாங்கி வளர்த்து கழுத்தறுத்து குழம்பு வைக்கப் போனால் மறுக்க எப்படியெல்லாம் நான் போராடுவேனோ, அப்படித் தானே ஒவ்வொரு கோழியை, ஆட்டினை, மாட்டினை வெட்டும் போதும், அவைகளால் இயன்றளவு அவைகளும் மறுப்பை தெருவிக்கின்றன? பிறகு என்னை வெட்டுவது கொலை; நரபலி. ஆடோ கோழியோ வெட்டித் தின்றால்; பாவம் விட்டொழியுமென்றோ, அதலாம் தவறில்லை என்றோ ஒரு கண்மூடித் தனமான புரிதலை எந்தப் புள்ளியில் இட்டு நியாயப் படுத்திக் கொள்ளத் துணிந்தோமோ; அந்தப் புள்ளியிலிருந்தே நம் பாவங்கள் நம்மையும் கொள்ளப் புறப்பட்டுவிட்டது.
ஒரு கன்றுக் குட்டியை தடவி தடவி அன்பு செய்யும் ஒரு மாட்டினையோ, ஒரு ஆட்டினை துரத்தி விளையாடும் இன்னொரு ஆடோ.., கோழிக் குஞ்சுகளை தொடப் போனாலே மயிர் சிலிர்ப்பி குத்தவரும் கோழியோ, ஒன்றன் பின் ஒன்றாக ஓடி கூட்டமாக துள்ளிக் குதித்து விளையாடும் மீன்களோ.. மற்றும் இன்ன பிற உயிர்களும்.. முற்றிலும் உணர்வுகளற்றவை என்று நாமே எப்படி நம் விருப்பத்திற்கு முடிவெடுத்துக் கொண்டோமோ.
கேட்டால், நாம் கொன்றுவிடா விட்டால் பல்கி பெருகி vidum என்கிறார்கள். காட்டில் இருக்கும் சிங்கமோ புலியோ பெருகி விடுமென யாரேனும் அடித்துத் திண்ண துணிவீர்களா? காட்டில் வாழும் பாலூட்டி இனத்திற்கெல்லாமென்ன மடியில் யாருமே பால் கறக்க வில்லையே என்று பால் கட்டிக் கொள்கிறதா..? இயற்க்கை நம்மை படைத்ததை போல் அவைகளும் படைக்கப் பட்டுள்ளன. எல்லாவற்றையும் தனதாக்கிக் கொள்ளும் மனிதனின் சுயநலமே ‘இப்போது மனிதனை வரை கொன்று தின்னவும் முன்னேறி விட்டது.
இதலாம் எழுதும் நோக்கம் உடனே உயிர்களை கொள்வதை விட்டு விடுங்கள், நாளையிலிருந்து எதையுமே கொன்று தின்னாதீர்கள் என்று சொல்வதற்கல்ல. அங்ஙனம் தின்பது அத்தனை சரியா என்பதை மட்டும் சிந்தியுங்கள். பிற உயிர்களை கொள்வதை நிறுத்த இயலுமா என யோசியுங்கள். ஒரு எறும்பு கை பட்டு இறந்து விட்டால் கூட வருத்தம் கொள்ளுங்கள்.
பிறகு கோழியை கொல்வதும், மீனை அறுப்பதும், ஆடு மாடுகளை வெட்டுவதும் தன்னை யாரோ கொல்வதும் ஒன்றே எனப் புரியலாம். அதன் பிறகு இறைச்சி தின்பதை நிறுத்துவதை பற்றி யோசிப்போம். வேறொன்றுமில்லை, எப்படி காகிதங்களை வீணாக்குவதை நிறுத்திக் கொண்டால்; மரங்கள் மிஞ்சுமோ, நான்கு சட்டை தேவையான இடத்தில் பத்து சட்டை எடுப்பதை நிறுத்திக் கொண்டால் ‘ அந்த மீத சட்டைகள் பிறருக்காய் போய் சேருமோ; அப்படி நாமும் பிற உயிர்களை, யாரோ கொன்ற இறைச்சியினை உண்பதை நிறுத்துவோம். பிற உயிர்கள் தானே மிஞ்சும்.

நமக்கென்ன, நாம் தான் மனிதராயிற்றே, பிற உயிர்கள் என்ன பேசினாலென்ன.., புரியாததை கத்துகிறதென சொல்லி வாயை அழுத்தி, துடிக்க துடிக்க வெட்டி, ‘அடி சக்க என, நாக்கில் எச்சிலூற சுவை பார்த்து, கொன்று தின்று… “வேண்டாம் வேண்டாம்.. இனி நீங்கள் எதையோ செய்யுங்கள்.. நான் இன்னும் இருக்கும் சற்று நேரத்திற்கேனும், வாழ்வின் கடைசி நிமிடங்களை வாழப் போகும் அந்த இரண்டு மீன்களோடு சற்று வாழ்ந்து விட்டு வருகிறேன்…
——————————————————————————————————————————————-
வித்யாசாகர்
நான்….அசைவம் உண்பவன்…..இந்த கட்டுரை அப்படியே என்னை திருப்பி போட்டுவிட்டது என்று நான் கூறவில்லை
ஆனால் ஒரு சிறு உயிரின் உணர்வை மனிதன் ஏன் மதிப்பதில்லை என நீங்கள் கூறிய விதம்….
என்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டது……சிறந்த வெளிப்பாடு தோழரே
LikeLike
மிக்க நன்றி மனோஜ். நான் முன்பே சொல்லியிருக்கிறேன், இந்த மீனும் மீனும் பேசிக் கொண்டன ‘அப்படியே உங்களை திருப்பிப் போட அல்ல. இறப்பது சிறு எறும்பென்றாலும்; உயிரென்று வருந்துவோமென கெஞ்சத் தான்.
இத்தனை தூரம் வரை, எத்தனை பேர் முழுதாகப் படித்தார்களோ என வருந்தி கூட இருக்கிறேன். நீங்கள் படித்தீர்கள், உணர்ந்தீர்களே.. அதுவே போதும். மிக்க மகிழ்ந்தேன் மனோஜ்.
விதைத்து மட்டும் விட்டோமானால், என்றேனும் முளைத்துவிடும் என்பதே’ எழுத்தின் நம்பிக்கை!
LikeLike
நட்ட விதை முளைத்துவிட்டது தோழரே…. கனியை ருசி பார்த்துக்கொண்டிருக்கிறேன்… 🙂
LikeLike
மிக்க நன்றி பாரத். எழுத்து முளைக்குமெனில் அங்க வரும் மாற்றம் என்னை எழுத்தாளனாக அடையாளம் செய்யும், அதுவரை கிறுக்குபவனாகவே செல்லட்டும் காலம்!
தங்களின் அன்பிற்கு நன்றி!
LikeLike
பிங்குபாக்: மீனும் மீனும் பேசிக் கொண்டன.. ( பாகம் – 6) | வித்யாசாகரின் எழுத்து பயணம்