மீனும் மீனும் பேசிக் கொண்டன.. ( பாகம் – 4)

 
ச்சே.. நாற்றம்.. நாற்றம்..” மீன் வாங்க வந்தவன் மீன் சந்தையில் நின்று மூக்கை பிடித்துக் கொண்டான்.  
 
“ஏண்டா மான் வாங்கவா வந்த, மீன் வாங்க தானே வந்த நாற்றமில்லாம” ஏதோ வேறொரு குரல் போல் கேட்க அவன் இங்குமங்கும் திரும்பி திரும்பி பார்த்தான். யாரும் அவனை பார்க்கவோ, அவனிடம் பேசவோ இல்லையென தெரிய,  ‘பிறகென்ன பிரம்மையோ’ என நினைத்துக் கொண்டு திரும்பினால், ஒரு மீன் லேசாக துள்ளிக் குதித்து வந்து அவனருகில் வீழ்ந்தது.
 
அது சிலிர்ப்பி வீழ்ந்ததில் அதன் மீதிருந்த தண்ணீர் தெறித்து அவன் முகத்தில் பட.. “ச்சே.., ச்சே..கவுச்சி கவுச்சி” என தூரம் விலகினான் அவன்..
 
மீன் அவனை கடித்து குதறி விடுவது போல் பார்த்தது. அவன் அந்த மீனை எடுத்து “ஏம்ப்பா.. இந்தா.. இதுமாதிரி நல்ல உயிருள்ள மீனா போடு, பழைய மீனா போட்டு பணம் பார்த்துடாத” என்று சொல்லியவாறே மீனை எடுத்து தராசு தட்டில் போட..
 
மீன் விற்றவர் அவருக்கருகிலிருந்த கூடையின் அடிவரை கைவிட்டு துழாவி எடுத்ததில் இன்னொரு மீன் துள்ளியெழுந்து வந்து அந்த பழைய மீனுக்கருகில் விழுந்தது.
 
“நீயும் இங்க தான் இருக்கியா..?” பழைய மீன் கேட்டது. 
 
“கத்தி பேசாதா அவன் நம்மளையே பார்க்கிறான்” புதிய மீன் சொன்னது.  
 
“இல்லன்னாலும் விட்டுட்டா போவான்.. போவியா…”
 
“அதுவும் சரி தான். ஆனா.., நம்மல பத்தியெல்லாம் இந்த மனிதர்களுக்கு ஒரு உயிருன்னு எண்ண கூட அவகாசமில்லை ல்ல.. ” புதிய மீன் கேட்டது.
 
“உயிர்னா ஒரு வாழ்க்கை இருக்கும். அசைவு இருக்குற இடத்துல; ஆசையும் இருக்கும்னு’ தெரிந்தா தானே ‘ஐயோ அழிக்கிறோமேன்னு தோணும் இவுங்களுக்கு”
 
“விடு விடு மனிதர்னாலே சுயநல வாதி தானே..”
 
“அப்படி எல்லாம் சொல்லாதே. நம்ம மேல கருணை காட்டவும் நிறைய மனிதர்கள் இருக்காங்க” பழைய மீன் சொன்னது.
 
“எப்படி சொல்ற??”
 
“வேற, அங்க பாரு ‘மீனும் மீனும் பேசிக் கொண்டனன்னு’ ஒரு தொடர் போட்டா அதை எத்தனை பேரு வந்து படிக்கிறாங்க?? நம்ம மேல அப்படி ஒரு இரக்கம், அக்கறை எல்லாம் அவுங்களுக்குள்ள இல்லைன்னா இப்படி விழுந்து விழுந்து  படிப்பாங்களா?? “
 
“படிச்சா போதுமா, படிச்சிட்டு நம்மல கொள்ளாமையா விட்ற போறாங்க” புதிய மீன் கேட்டது
 
“சரி அதை விடு .. கேட்டா விதின்னுவா மனித(ன்)”
 
“அவன் எதனா சொல்லிக்கட்டும், நம்ம பொறுத்த வரை அது கொலை தான்.. கொலை தான்..”
 
“விடுப்பா.. வேறெதனா பேசலாம்.. ஏன் வீணா இப்படி மனிதர் பத்தி பேசி நேரத்தை போக்குவானேன்??” பழைய மீன் சலித்துக் கொண்டது.
 
“அப்படி ஏன் நினைக்கிற.., நான் இன்னைக்கு முழுக்க முழுக்க ஒரு மனிதர பத்தி தான் சொல்ல போறேன், நேத்து நான் நடு கடல்ல உல்லாசாமா சுத்திக்குனு இருந்தேனா அப்போ அந்த பக்கம் ஒரு பெரிய மீன் ஓன்னு வந்து, என்னை அப்படி துரத்துச்சி தெரியுமா??”
 
“அதென்ன ‘அப்படி’ ? இப்போ எல்லாம் பேச்சு வாக்குல மனிதர்கள் பயன் படுத்துற வார்த்தை இது ல்ல..??? சரிவிடு சொல்லு, அப்புறம் என்னாச்சி?”
 
“அப்புறமென்ன தொரத்தி தொரத்தி என்னை சாப்பிட அலஞ்சிது”
 
“நீ என்ன பண்ண?”
 
“என்ன பண்றது ஓடி ஓடி கடைசியா, ஒரு படகு வர, அது பின்னாடி போயி ஒளியலாம்னா, அந்த நேரம் பார்த்து அந்த படகுல வந்த ஒரு மனுஷன் அதை பார்க்க உடனே வலைய எடுத்து வீசிட்டான், எனக்கு ‘ஐயோ போயும் போயும் மனுஷன் கிட்டயா மாட்டினோம்னு ஒரு நொடி ஆடி போயிட்டேன், ஆனா அந்த ஆளு நல்லவனா இருந்தான், என்னை காப்பாத்தறதுக்காக அந்த பெரிய மீனை பிடிக்கத் தான் வலையை வீசி இருக்கான்.”
 
“அப்புறம்”
 
“அப்புறமென்ன, நம்ம யாரை வேணும்னாலும் சாவடிக்கலாம், நம்மல யாராவது கொல்ல வந்தா(ல்)  தான் நிறைய நியாயம் நீதி எல்லாம் பேசும் உலகம். அதுபோல தான் இதுவும், நிறைய நியாயம் பேசி பார்த்துது அந்த பெரிய மீன். துள்ளி துள்ளி எகுறி எல்லாம் குதித்துப் பார்த்துது, அவன் பொருத்து பார்த்துட்டு, வேற ஏதோ ஒரு அம்பு மாதிரி ஒன்னை எடுத்து, அந்த மீனோட கண்ணை பார்த்து விட, பாவம் அது துடிச்சி துடிச்சி செத்துது. எனக்கே பாவமா இருந்துதுப்பா”.
  
“ஹுஹ்ஹ்ஹும்.. இவரு பெரிய ‘முத்துகுமார்’ போல தியாகின்னு நினைப்பு. அசடு அசடு அதுக்காகவா பாவம் பார்ப்ப? அது தானே உன்னை கொல்ல வந்துது??”
 
“ஆமாம், அது அப்படின்னா ‘நானும் அப்படியா? என்னை விடுப்பா, நான் செத்தா என்ன, நேத்து வந்தவ. அதும் நான் செத்தா ஏதோ இறக்கப் போறோம்னு ஒரு உணர்வு இருக்கும் அவ்வளவு தான். பொசுக்குனு போய்டுவேன். ஆனா கண்ணுக்கெதிர ஒருத்தர் துடிச்சி துடிச்சி சாவறதை பார்க்கறது இருக்கே உயிரோடிருக்கும் அத்தனை நாளும் நினைத்து நினைத்து சாகுற வலி.. தெரியுமா??”
 
“அந்த வலி மனுஷனுக்கு இல்லையே ப்பா??” பழைய மீன் வருத்தம் கொண்டது. 
 
“அதுசரி இவுங்க நம்மல கொண்ணு என்ன பண்ணுவாங்க..? இப்படி நம்மல கொண்ணு கொண்ணு போடறதுல இவுங்களுக்கு என்ன வந்துடுமோ தெரியலயே..??!!” புதிய மீன் கேட்டது.
 
“நீ இன்னைக்கு கேட்குற, இதை நான் என்னைக்கோ நம்ம பெரிய பெரிய மீனுங்க கிட்ட எல்லாம் கேட்டிருக்கேன்.. இதுவரையும் சாவுறோம்னு தெரியுமே தவிர மனுஷன் ஏன் கொல்றான்னு நம்ம மீன் ஜாதில ஒருத்தருக்குமே தெரியாது”.
 
“தோ பாரு.. தோ பாரு.. கத்தி எடுத்து வரான் வரான் பாரவன், ஓடு ஓடு..”
 
அந்த மீன்கள் இரண்டும் துள்ளி கீழே குதித்தது. “ஆய் ஆய் எங்க ஓடுற, துள்ளி எகிறிட்டா விட்ருவோமா???” அந்த மீன் வாங்க வந்த ஆள் கத்திக் கொண்டே எட்டி அதை பிடித்தெடுத்து, அந்த மீனின் செவுளை பிய்த்துவிடாத குறையாக விரித்துப் பார்த்தார்.
 
“ஏம்பா துள்ளி குதிக்கிற.. உயிரோடிருக்க மீனை போயி பிச்சி பார்க்குற.. ? வை.. வை.. போ..  அங்க யாருனா புதுசா வெச்சிருப்பாங்க போ போய் வாங்கிக்கோ” மீன் விற்பவர் கோபமுற.. அட போயாவென வாங்க வந்தவன் கூடையிலிருந்த இதர மீன்களையும் கீழே கொட்டிவிட்டு போக.., அந்த இரண்டு மீன்களும் மீண்டும் துள்ளி துள்ளி அருகருகே வந்து, தன் மீதமுள்ள சில நிமிட பொழுது வாழ்க்கையை பேசி பேசி தீர்க்க தயாராயின..
————————————————————————————————————————————-
(பாகம் 5 -இல் தொடரும்..)

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in மீனும் மீனும் பேசிக்கொண்டன.. and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s