8 பிணமென்றே பெயர் வைத்தேன்

  
பிணங்களின் எரியும் புகையில்
புகுகிறது பள்ளி சீருடைகள்;
 
பிணங்களின் அழுகிய நாற்றத்தில்
மறந்தன மரண பயம்;
 
பிணங்களின் முறிந்த உறுப்பில்
முடங்கின உயிர் பறித்த வலி;
 
பிணங்களின் தெருவோர குவியலில்
அறுந்தன உயிரின் ஆசை;
 
பிணங்களின் பிணமென்னும் பெயரில்
கிடக்கின்றன எம் – வீரமும் உறவுகளும்;
 
பிணமென்றே பெயர்வைத்தேன்
வேறென்ன எம்மக்கள் –
பிணமாகிப் போகவே படைத்தாயே?
 
வெடித்த குண்டுகள் வீரம் பேச
உழைத்த உழைப்பெல்லாம் மண்ணாய் போக
பயமும் கதறலுமாய் பதறித் திரிந்த உடம்புகளில் –
ஈக்கள் மொய்க்க..,
எலும்பு கடித்து நாய்கள் திரிய..,
உடம்பு காட்டி என் தமிழச்சிகள் கருக..,
வெட்டிசாய்த்த மரம் போல –
எம்மக்கள் வீழ்ந்து குவிந்திருப்பதை கண்டாயோ?
 
பற்றி எரிகிறது மனம்
வெறும் படமென்று எண்ணி
உச்சு கொட்டி போகிறது உலகம்
 
மறந்தோர்  மறந்து
வலித்த உணர்வுகளையும் தொலைத்து
மிச்சம் மீதிக்காய் அழுது –
வெறும் வரலாற்றில் கணக்காகிப் போயினறே என்மக்கள்;
 
வேறென்ன சொல்ல எமை –
முடிவில் –
பிணமென்றே பெயர் வைத்தேன்; அதில்
என்னையும் பூட்டிவைத்தேன்!!
—————————————————————————–
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் and tagged , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

9 Responses to 8 பிணமென்றே பெயர் வைத்தேன்

  1. kovaikkavi சொல்கிறார்:

    Yes we are the dead bodies, well said There are 1000 meanings in dead body.
    vaalthukal- vetha ,Denmark.5-7-10

    ஆம்; நாம் பிணங்கள் தான், நன்றாக சொன்னீர்கள்; அதற்க்கு ஆயிரம் அர்த்தமுண்டு.

    வாழ்த்துக்கள்!!

    வேதா
    டென்மார்க்
    5-7-10

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி சகோதரி. நினைத்து நினைத்து வலித்தது தான் மிட்சம். ஈழ விடுதலைக்காய் போரிட்ட செய்தி மட்டுமே தெரிகிறது நிறைய பேருக்கு; உயிர்விட்ட வருத்தம் அத்தனை பெரிதாக பட்டுவிடாத விளைவு தானே தற்போதய நிசப்தம்? இருந்தா தலைவன் ஒழிந்தான் என கொக்கரிக்கும் அநீதி இழைத்தவர்களுக்கு எவர் வந்தேனும் பாடம் புகட்டுகையில், அவர்களுக்கு நாம் துணை நின்றாவது நம் நியாயத்தை பெற்றுக் கொள்கையில், ‘என்னை நான் பிணமில்லை என்று மீண்டும் அறிவித்துக் கொள்கிறேன்!

      Like

  2. தங்களின் கவிதை சொட்டும் ஈர/ஈழ வலி எனக்கு தெரிகிறது! , ஆனால் புரியவில்லை. நான் அதனை அனுபவிக்கவில்லை. நண்பரே எங்களுக்குப் புரிந்திருந்தால் இன்றும் ஈழம் இருந்திருக்கும்!
    பல கோடி மக்களின் பிரநிதியாகி கோருகிறேன் வழங்க தகாத மன்னிப்பை!

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      //நண்பரே எங்களுக்குப் புரிந்திருந்தால் இன்றும் ஈழம் இருந்திருக்கும்//

      இது தான் என் வலி ருக்குமணி. நமக்கு இன்னும் முழுதாக புரியவில்லை, என்பது தான் உண்மை. புரிந்திருந்தால் பெற்றிருப்போம் என்பது தான் ஏக்கம். ஆனால் உயிர் புரியாத ருக்குமணி? கொத்து கொத்தாக வீழ்ந்ததை செய்தியில் கண்டோமே புரியலையா? கதறி கதறி ஓர் இனம் அழுததே மாத கணக்கில், பார்த்துக் கொண்டு தானே இருந்தோம். ஆனால், உண்மையில் அவைகள் நம் காதுகளில் ஒலிக்கவும் கண்களில் பூக்கவும் சில முத்துக் குமாரர்கள் தேவை பட்டார்கள் தானே. பிறகு நமக்கெப்படி முழுதாக புரியும்.

      அதிகம் வேண்டாம் தோழி, யாரேனும் ஒரு கரும்புலிகள் வரலாறு படியுங்கள். அவர்களுக்கான விவர இணைப்பை நம் தளத்தில் இடுகிறேன் பாரும்கள். சாகத்தான் போகிறேன் என்று தெரிந்தும், உயிரை கையில் எடுத்து உடம்பிலிருந்து பறித்து தன் தேச விடுதலைக்காய் தந்த வீர உயிர்களுக்கெல்லாம் நாம் என்ன விலை தந்தோம்?

      யாரும் வேண்டாம், திலீபன் பற்றி நம் தளத்திலேயே ஒரு கவிதை உண்டு பாருங்கள். 12 நாள் ஒரு சொட்டு நீர் அருந்தாமல் கண்ணெதிரே விடுதலை கேட்டு துடிக்க துடிக்க தன் உயிர் விட்ட தியாகமெல்லாம் யாருக்காக?

      படித்து பாருங்கள் தோழி, ஒரு பெண் ஒரு தகவல் அறிந்தால் அது ஒற்றை தலை முறைக்கே சென்று சேரும், காலத்தில் இறங்கி தான் ஒன்றும் செய்திட வில்லை நாம், தகவலையாவது அவர்களின் லட்சிய நோக்கினையாவது வரும் தலைமுறைக்கும் சொல்லி தருவோம்!

      இருந்தாலும், புன்படாதீர்கள், எனக்கு வலிக்கும் வலி உங்களுக்கும் ஏன். படித்தறிந்துக் கொள்ளுங்கள். ஓர் நாள் நாமும் எங்கேனும் விடுதலை மூச்சில் கலந்தும் போகலாம்..

      மிக்க நன்றி தோழி.. உங்களை போன்ற உணர்வு நம் எல்லோருக்கும், இப்போது இல்லை என்று சொல்ல வில்லை, நம் எல்லோருக்கும் ஏற்பட்டுவிட்டால் மட்டுமே எதேனும்வழிபிறக்க வாய்ப்புண்டு!

      Like

  3. நிலா - இலண்டன் சொல்கிறார்:

    ஆம்; நாம் பிணங்கள் தான்!!!!!!!!!!

    வதையும் நெஞ்சம்

    பேசுவது தமிழ் என்பதால் பாரிலிருந்து ஒன்றுசேர
    பெருமையுடன் கூடிவிட்டோம் செம்மொழி மாநாடு!
    பேசியது தமிழ் என்பதால் அன்றுமுதல் இன்றுவரை
    தேசிய இனங்களுள் ஒன்றாயிருந்தும் ஈழத்துத்தமிழன்
    தூசியிலும் கேவலமாய் வீசி எறியப்பட்டான்! – ஆனால்
    ஆசுவாசமாய் அமர்ந்திருந்து ஆராய்கிறோம் செம்மொழிபற்றி
    ஆமாம்! எரிகிற வீட்டிலே ஆடம்பரத் திருமணம்! –எமக்காய்
    அழவே நேரமில்லை எமக்கு! இதுதான் எம் மனிதநேயம்!

    பெற்ற மகவை தாயின்முன் தாரில் கொதிக்கவைத்தான் சிங்களவன்!
    பெண்மங்கை முலையறுத்து அவள் முடியில் தொங்க விட்டான் சிங்களவன்!
    பற்றவைத்தே பலர்குடியை பாதாளத்தில் தள்ளிவைத்தான் சிங்களவன்!
    கண்டமறுத்து தமிழனை இறைச்சிக்கடையதனில் விற்றானே சிங்களவன்!
    தரப்படுத்தல் எனும் பெயரால் தமிழன் தரத்தை மட்டுப்படுத்தியவன்
    தமிழனவன் தரைதனை தனதாக்க குடியேற்றினான் சிங்களவன்!
    ஆண்டுநின்ற நம்மினத்தை கூண்டோடொழிக்க தீட்டினானே சிங்களவன் திட்டங்களாய்.
    இத்தனையும் செய்தவன் இனத்துடன் எப்படி நாம் சேர்ந்து வாழ்வது?

    முள்ளிவாய்க்காலில் எம்மினத்தைமுடக்கியே கொள்ளிக்குண்டுகளால் பொசுக்கியது சிங்கள அரசு.
    கொள்ளி கூடப்போடமுடியாது அள்ளி அள்ளி சதைப் பிண்டங்களாய் ஆக்கியது சிங்களவரசு.
    பள்ளிசெல்லும் பாலகரையும் பச்சையிளங் குமரிகளையும் கூறுபோட்டது சிங்களவரசு! பிடரியில்
    புள்ளிபோட்டே இளைஞர்களை நிர்வாணமாக்கி சுட்டுத் தள்ளியது சிங்கள அரசு.
    தள்ளி நின்றே மேல் நாட்டு, அயல்நாட்டு அரசுகளும் வேடிக்கைபார்த்தது மட்டுமல்ல
    கள்ளவழி கனரக ஆயுதங்கள், தாங்கிகள் கொள்ளை கொள்ளையாய் வழங்கி,
    தௌ;ளத் தெளிவாய் விரித்தது இராணுவ வலை. அள்ளிக் குடித்தது எங்கள் தமிழன் குருதி, அழுதே வாடுது எங்கள் கொடி. அதுவே தானோ தமிழன் விதி! அதுவே தானோ தமிழன் விதி!

    அன்னிய நாட்டில் உள்ளோம் நாம் ஆனாலும் எம் மனம் நிறைந்த ‘விடுதலைத் தீ ‘
    ஆகும் அரசாங்கம் ‘நாடு கடந்த தமிழீழம்’ அனைவரும் மீட்டெடுப்போம் வா தமிழா!

    கவிதைப்புனைவு
    நிலா – இலண்டன்

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி நிலா. ஏதோ விபத்தின் நிமிதம் போல் நம் தளத்திற்கு வந்து இக்கவிதை மட்டும் படிப்பவர்களுக்கு நம் இழப்பு பற்றியும், விடுதலை உணர்வின் காரணமும், இழைக்கப் பட்ட கொடுமைகளும் அறிந்துக் கொள்ள உங்கள் கவிதையும் உதவும் நிலா!

      Like

  4. Vijay சொல்கிறார்:

    வலிக​ளை வரிகளாக்கி வடித்துள்ளீர்கள்,
    மிகவும் அரு​மை….

    //வெடித்த குண்டுகள் வீரம் பேச
    உழைத்த உழைப்பெல்லாம் மண்ணாய் போக
    பயமும் கதறலுமாய் பதறித் திரிந்த உடம்புகளில் –
    ஈக்கள் மொய்க்க..,
    எலும்பு கடித்து நாய்கள் திரிய..,
    உடம்பு காட்டி என் தமிழச்சிகள் கருக..,
    வெட்டிசாய்த்த மரம் போல –
    எம்மக்கள் வீழ்ந்து குவிந்திருப்பதை கண்டாயோ?//

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி விஜய். எல்லாம் உங்களை போன்ற தம்பிகளுக்காக தான். அண்ணன்களிடமிருந்து நான் கற்கவேண்டியது நிறைய இருக்கலாம். இருக்கட்டும், அறிந்த தகவல்களை, உணர்ந்த உணர்வுகளை, உங்களை போன்ற தீப்பொறிகளால் உற்ற தம்பிகளுக்கு கொடுத்து நாளைய சமுதாயத்தையாவது நமக்காக பெற்றுக் கொள்ளும் நோக்கமே நம் பயணம்!

      Like

பின்னூட்டமொன்றை இடுக