உலகம் சுற்றி
நடக்கும் கொடுமைகளால்
ஒன்றிரண்டாய்
தென்படுகிறது மனிதத்தின் தலை
தென்படாத
மனிதத்திற்கிடையே உடைகிறது கடவுள்!
இருநூறு ஆண்டுகளுக்கு மேல்
அடிமை பட்டு கிடந்த மண்ணில்
புதைந்த உயிர்களின்
மறந்த வலியால் –
ஈழத்தில் நடந்த கொலைகளில் – உடைந்தது கடவுள்!
தெருவெல்லாம் பிச்சையெடுத்து
வழி நெடுகும்
இரைந்த வறுமைக்கு
வழி தேடாத அரசின் மெத்தனத்தில்
உடைகிறது கடவுள்!
பகலெல்லாம் வெய்யிலில் கல்சுமந்து
உடல் வாட்டும் இரவு குளிரில் வெல்டிங் அடித்து
இரும்படித்த வியர்வையின் அசதியில்
சேற்றுசகதியில் சுண்ணாம்பில் வெந்து போன உழைப்பில்
கூளிவேலையில் மாரடிக்கும் பணத்தில்
வாய்கூசாமல் லஞ்சம் கேட்கும்
களவானிகளின் மேதாவி தனத்தில்
உடைந்தே போகிறது கடவுள்!
அவசரத்திற்கு செய்த உதவி போக
நூற்றிற்கு பத்து வட்டியென
உறிஞ்சிக் குடிக்கும் ரத்தத்து நெடியை
வீட்டில் சொத்தாக சேர்க்கும்
வட்டிப் பணத்தில் – உடைந்தது கடவுள்!
நூறு ரூபாய்க்கு துணி வாங்கி
நூற்றி ஐம்பதுக்கு சட்டை தைத்து
தினமும் இரண்டு ரூபாயில் பெட்டி போட்டும்
ஒரு ரூபாயில் பட்டினி கிடக்கும்
ஏழைகளை நினைக்காததில் – உடைகிறது கடவுள்!
கூரைவீட்டு ஓட்டை வழியே
கிழிந்த ரவிக்கை உடம்பு தேடும்
மாடிவீட்டு தோள் பசிக்கு
விலையாகும் முதிர்கன்னிகளின்
விலைபோகா உத்தமிகளின் ஒரு சொட்டுக் கண்ணீரில்
கிடைக்காத வாழ்க்கையாக உடைகிறது கடவுள்!
பார்வைக்கே உயிர்விட்டு
அருகாமைக்கு தவமிருந்து
உடலெல்லாம் காதல் பூத்து
கிடைக்காத காதலிக்கு
மரணத்தை பரிசளிக்கும்
தெளிவில்லா இளைஞர்களின் இளம்பெண்களின்
பெற்றோர்களின் அறியாமையிலும்
புரிந்து கொள்ளாத அன்பிலும் – உடைந்தே போகிறது கடவுள்!
பொட்டிழந்த நெற்றியிலிருந்து
விட்டொழியா காமப் பசிக்கு
நாம் தந்த விதவையென்னும் ஒற்றை பட்டத்தில்
ஊரெல்லாம் மேயும் கண்களின் கொடூரத்தில்
கணினி புத்தகம் தொலைகாட்சி திரைப்படமென
விநியோகிக்கும் – காம ஆசையில்,
இன்றும் அவர்களை ஒதுக்கியே பார்க்கும்
தனிமையின் கொடுமையில்
கருகி உதிரும் இளம் இதயங்களின் முறிவில்;
உடைந்தே போகிறது கடவுள்!
காவல் காக்க உடையுடுத்தி
அதட்டிய குரலில் கேட்டதெல்லாம் பெற்று
சோறு போட்ட மக்கள் பணத்தில்
சேலை வாங்கி கொடுத்த நன்றியை
வாங்கித் தின்ற கையேடு மறந்ததில்,
அநீதிகள் அழிய பார்த்து
அடக்க முடியாத காக்கி சட்டையின் கோழை தனத்தில்
உடைந்தது கடவுள்!
வெள்ளையாய் ஆடை உடுத்தி,
கருப்பில் இதயம் சுமந்து,
குடிக்கும் போதைக்கு காரம் வேண்டி – ஏழைகளின் ரத்தத்தில்
உப்பு சுவைத்து,
ஏசி காரில் –
குளிரும் உடலுக்கு வெப்பமூட்டும் இளைய பெண்கள் தேடி,
மூட அரசியல் நடத்தும் –
மூர்க்கர் சிலரின் செய்யாத கடமைகளில்
உடைகிறது கடவுள்!
கடவுளின் ஒளி அகற்றி
காமத்தின் வெளி புகுந்து
காசுக்கு மதம் விற்ற –
கயவனின் வாக்கில் உதித்த
அத்தனை பொய்தனிலும்
உடைந்தது உடைந்தது உடைந்தது கடவுள்!
மதத்தில் கடவுள் அறுத்து
மனிதத்தில் மதம் திணித்து
மதத்திற்காய்; மனிதனின் தலை கொய்து
சொட்டிய ரத்தத்தின் ஈரமெலாம்
இரக்கமின்றி கடவுள் பெயரெழுதி
மறக்கும் துறக்கும் மதத்தின் திணிப்புகளில்
மதத்தால் மனிதன் மாண்ட இடத்திலிருந்து
உடைந்தே போனது கடவுள்!
உருவம் உண்டென்று சொல்லி
அருவம் ஒன்றென்று சொல்லி
கடவுள் உண்டென்று சொல்லி
எவனும் இல்லையென்று சொல்லி
நன்றி மறந்த களிப்பில்; கடவுள் இல்லாமல் போகும் இருப்பில்
எல்லாமுமாய் இருக்கும் கடவுள்
இல்லாமலே போக –
மனிதன் ஆற்றிய குற்றந்தனில் உடைந்தது; உடைந்தது;
உடைந்தே போனது; உள்ள கடவுள்!!
———————————————————–
வித்யாசாகர்
“Oh! very long poem.getting tired.”
“ஓ!! நீண்ட கவிதை. ஓய்ந்து போகிறது..”
LikeLike
அத்தனை நீண்ட தவறுகளில் உழன்று கிடக்கிறோமே என்ன செய்ய சகோதரி.
காவல் நிலையம் கூடுதலென்று வருத்தப் படுவதை விட தவறுகளை குறைப்பதில் சமூகம் அக்கறை கொள்ளுமென பட்டியலிடப் படுகிறது நம் குற்றங்கள் இங்கே.
அதிலும், இது நம் “உடைந்த கடவுள்” என்னும் சிருங்கவிதை தொகுப்பு புத்தகத்தின் மூலக் கவிதை. எனவே “உடைந்த கடவுள்” தலைப்பிற்கான காரண கவிதை என்பதால் சமூகத்திக் குற்றங்களை எல்லாம் சுட்டியாவது காட்ட எடுத்த களம்; இந்த கவிதை!!
கோபத்தில் சற்று நீண்டு விட்டது. சமுகத்தின் வலியாலும் அவதியுற்ற யாரேனும் ஒருவருக்கு இக்கவிதையின் நீளத்தின் காரணம் புரியாமலா போகும்….
LikeLike
வித்யாசாகர் அவர்களுக்கு
இன்னும் சுருக்கி சொன்னால் சம்பட்டியால் அடித்தது போல இருக்கும் சண்டாளர்களுக்கு. ஒற்றை வார்த்தைகளில் அவர்களின் உயிரை பிழிய வேண்டும். உங்களின் ஆதங்கம் புரிகிறது .ஒவொரு இளைஞனும் மனதில் இதை விதைத்தால் நாளைய சமூகம் நல்ல கனிகளை கொடுக்கும் விருச்சமாக்க வளரும் என்பதில் ஐயமில்லை . உங்கள் பணி சிறக்கட்டும்
LikeLike
அன்பு சரளாவிற்கு, இப்புத்தகத்தில் இனி வரும் கவிதைகள் எல்லாமே இதில் நீண்டுள்ள தகவல்களை தான் சுருங்க சொல்லப் போகிறது.
“உடைந்த கடவுள்” தலைப்பின் அர்த்தம் விரும்புவோர் படிக்க மெனக்கெட வேண்டிய கவிதை இது ஒன்று தான். இனி நீளும் கவிதைகள் சம்மட்டி கொண்டு அடிக்கப் போவதில்லை. இரண்டு விரல்களால் தோழமை பூண்டு இமைவிரித்துவிடப் போகிறது.
இன்னும் நிறைய சொல்வோம். நிறைய பேசுவோம். சுருங்க சொல்லியும் விரிந்து செல்வோம். நன்றிகள் உரித்தாகட்டும் தோழி!
LikeLike
நீண்ட கவிதையில் உலகை சுற்றி இருக்கும் கொடுமைகளில் முடிந்தவரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த உங்கள் பிரயத்தனம்……
மனிதம் மறந்த மிருகங்களின் வெறியாட்டத்தில் மனிதம் சோர்ந்ததை தட்டி எழுப்பும் பிரயத்தனம்….
உயிர்பலிகள் கணக்கிலடங்கா…. கற்பழிப்பு சொல்லிலடங்கா…. ஈழம் கண்ணீர் சிந்தும் வேதனை அதனை வெளிப்படுத்தும் பிரயத்தனம்….
வறுமை இங்கு கொடிகட்டி பறப்பதையும் அதை கண்டுக்கொள்ளாத அரசின் மேல் கொண்ட கோபம்….
உழைத்து துன்பப்பட்டு ஈட்டும் ஒவ்வொரு பணத்திலும் காந்தி சிரிப்பை விட அதில் தெரியும் ஏழைகளின் வியர்வையும் அதைக்கூட சுரண்டும் லஞ்சப்பேய்களின் ஊழித்தாண்டவம் அதை பகிங்கிரப்படுத்தும் உங்கள் தைரியமும்…
வட்டிக்கு விட்டு கொழுத்து கிடக்கும் பணக்காரர்களை துகிலுரிக்கும் வேகமும்…
பட்டுடை உடுத்தினால் அதில் ஏழைகளின் கண்ணீர் கறை தெரியாது போகுமோ என்ற சீற்றமும்…
முதிர்கன்னிகளின் முட்களாய் நகரும் நாட்களும் அவர்களின் ஏக்கங்களை தனக்கு சாதகமாய் பயன்படுத்த துடிக்கும் பிணந்தின்னி கழுகுகளின் அகோர சாயலை வெளிப்படுத்த துடிக்கும் உங்கள் ஆதங்கமும்….
காதல் என்ற பெயரில் புரிந்துணர்வு இல்லாத விடலைகளின் மரணத்தையும் அந்த சாபத்தை தாங்கி வாழும் பெண்களின் நிலையை மனம் துடிக்க சொன்ன விதமும்…..
கைம்பெண் கோலம் வேண்டாம் என்று தீயிலிட்டு கொளுத்திய காலங்கள் மறைந்தாலும் இன்றும் இளம் விதவைகளின் மன உணர்வை அறிய நேர்ந்தால் தெரியும் அவர்களின் ஏக்கங்களும் அதை சொல்ல முனைய வந்த தாக்கத்தால் வந்து விழுந்த வரிகளும்….
பணக்காரர்களின் முன் வாலைக்குழைத்து ஏழைகளின் மார்பெலும்பை மிதித்தே கொல்லும் காக்கிச்சட்டைக்காரர்களின் கேவலமான செயலை கண்டிக்க துடிக்கும் வரிகளும்…..
அரசியல்வாதி போர்வையில் சமாதான வெள்ளை நிறத்தை சாதகமாக்கி பசுத்தோல் போர்வையில் உலவும் ஓநாய்க்கூட்டங்களின் முதுகு தோலுரிக்க முடியாததால் இங்கே அவர்களின் முகத்திரையை கிழித்த சாகசமும்….
மனிதத்தை காலின் கீழ் நசுக்கி மதத்தின் பெயரால் கொலைகளை கணக்கில்லாமல் செய்து மக்களை வதைத்து மார்த்தட்டும் தீவிரவாதிகளை சாட்டையடியால் நெருப்பை சுழற்றி சுழற்றி அடித்து ஒழுகும் ரத்தத்தால் இவ்வுலகத்தை தூய்மையாக்க முயற்சித்த உங்கள் தீவிர முயற்சிக்கு கைத்தட்டி சபாஷ் என்று சொல்லமுடியாமல் இந்த உலகில் நானும் ஒரு பிரஜையாய் ஒரு குற்றவாளியாய் தலை குனிந்து நிற்கவைத்த அட்டகாசமான வரிகள் உங்களுடையது….
நீண்ட பயணம் செய்தது போல் ஒரு துடிப்பு….. இத்தனை அசிங்கங்களும் அவமானங்களும் தான் தினம் தினம் நடந்துக்கொண்டிருக்கின்றது இயல்பான வாழ்க்கையில் பார்க்கும் அத்தனை நிகழ்வுகளும் தான் ஒவ்வொருவரும் இந்த கவிதையை படிக்கும்போதே தன் தவறு எது எங்கேவென்று சுரீர் என தைக்கும் அட்டகாசமான வரிகள் வித்யா…. பெருமிதமாய் உணர்கிறேன்… தவறை தயங்காது சுட்டிக்காட்டும் உங்களின் இந்த தைரிய வரிகள்……
மனிதம் வாழாத இடத்தில் இறைவனுக்கு என்ன வேலை….அன்பில்லாத இடத்தில் கயமைகள் பொய்கள் இல்லாத இடத்தில் இறைவன் கூப்பிடாமலே வந்து வாழும் இஷ்டம் உள்ளவர்… மனிதம் மறந்த இதயத்தில் கடவுள் எப்படி தங்குவார்? கடவுள் இல்லாத இடத்தில் அரக்கர்களின் அட்டூழியங்கள் அநியாயங்கள்… கடவுள் என்று சொன்னது இங்கே தர்மத்தை தானே? தர்மம் மறந்தோர் இடையில் இறைவன் சின்னாபின்னமாகிவிட்டதை மிக அழகாய் மனதின் தாக்கங்களை வெளிப்படுத்த வரிகளை கோர்த்த விதம் மிக மிக அருமை வித்யா…
இரண்டு வரியில் ஹைக்கூவில் சொல்ல முடியாத வேதனைகள் தான் இந்த நீண்ட அழகிய கவிதையில் அழுகிய உள்ளங்களை படம் பிடித்துக்காட்டிய தைரிய வைர வரிகள்….. ஹாட்ஸ் ஆஃப் வித்யா….
உங்களின் முயற்சிகள் மேலும் மேலும் தொடர்ந்துக்கொண்டே இருக்க என் அன்பு வாழ்த்துக்கள் வித்யா….
LikeLike
அப்பப்பா…, சொல்லும் வார்த்தைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு விட்டதாய் ஒரு பிரம்மிப்பு பெரு மூச்சு மஞ்சு. என் கவிதைகளை படிக்கா விட்டால் கூட பரவாயில்லை, இதை இந்த விமர்சனத்தை படிக்க வேண்டும் அனைவரும் என்று எண்ணுகிறேன்.
என் மீதுள்ள பற்றோ எழுத்தின் மீதுள்ள பற்றோ தமிழை உங்களை அறியாமலே நேசிக்கும் திறனோ ஏதோ ஒன்று என்பதை விட எல்லாமுமானதால் வந்த விமர்சனம் இது. மிக நேர்த்தி. எதை சிந்தித்து எழுதினேனோ அதை பேசியுள்ளீர்கள்.
என் லட்சியம்; என் அளவு இது தான். ஒருவர். யாரேனும் ஒருவர் போதும் என் கவிதைக்கு எழுத்துக்கு உயிர் தர.
உலகை நோக்கி பயணிக்கும் பயணம் என்றாலும். ஒருவரால் ஏற்கப் பட்டதில், உயிர்பெற்று விடுகிறதென் படைப்பு. பிறகு அதை எப்படி உலகிடம் கொண்டுசென்று சேர்ப்பது என்பதெல்லாம், பிறகின் பாடு தோழி.
ஒருவரால் உயிர்பெற்று விடுகிறதென்பதால், உயிர் பெற்றப் பின் நின்று விடுவதென்றில்லை. இயங்குதல் என் உயிர்ப்பின் அடையாளம். உலகின் கடை கோடி வரை இயங்கவே பிறப்பானேன். எனினும் உயிர் பெறுதல் வலிதில்லையா. எனவே தான் முதலில் ஒருவரை நோக்கிய லட்சியமென் லட்சியம் என்றென்.
கவிதைக்கு வருவோம். நாம் ஆற்றும் நல்லவைகளே கடவுள் என்று உணர்கிறேன். அந்த நல்லவை கெட்டவைக்கான வரையரை புரியவும், கடவுளின் தேவை உள்ளது. எனவே, நல்லது எது என்று யோசிப்பதை விட, எதெல்லாம் தவறென்று படுகிறதோ, எதனாலெல்லாம் பிறருக்கு அதிகம் வலிக்கிறதோ, அவைகளை முதலில் களைவோம். எஞ்சியவை எத்தனை சரியென்று கடவுளினால் அவரவருக்கு போதிக்கப் படும்.
என் நோக்கம் முதலில், மனிதரை, மனிதராய் வாழ சொல்வது. ஆக, மனிதற்கே மகத்துவம் பெறாத இடத்தில் மகோன்னதமான கடவுள் தன்மை உடைபடவே செய்கிறதில்லையா??? அதை சுட்டிக் காட்டும் இடமே இந்த நீள கவிதை. இதில் உள்ள அனைத்தும் ஒருவருக்கல்ல.
ஏதேனும் ஒன்றில் எவரேனும் ஒருவர் உழன்றுக் கிடக்கலாம் இல்லையா? அவருக்கு வேண்டியும் பேச எண்ணி நிறைய பேரை பற்றி நிறைய பதம் வைத்து சற்றே நீளமாகவே எழுத வேண்டியதானது. எனினும் வருத்தம் தான்.
ஒரு காதல் கவிதை, ஒரு காதல் கதை எத்தனை நீளமெனினும் சோர்ந்து விடாத கூட்டம். ஒரு சமூக கவிதைக்கு சோர்ந்து போகிறது. நான் என் சகோதரி வேதா அவர்களை இங்கே குறிப்பிட வில்லை. எதை எழுதினாலும் படித்து பதில் இடுபவர்கள் அவர்கள்.
நேரமின்றி வந்ததில், இவ்வளவு பெருசா, ஐயோ பிறகு படித்துக் கொள்ளளாம் என்று போனவர்களும் உண்டு, நான் அவர்களையும் சொல்ல வில்லை. காதல் கவிதை மிகப் பிடித்து சற்று கூடுதல் ரசனையாக வாசிப்பவருமுண்டு; நான் அவர்களையும் சொல்லவில்லை.
என் வருத்தம், ‘ஏதோ ஒரு, படிப்பதையே குறைத்துக் கொள்கிற ஒரு சூழல் ஏற்பட்டுள்ளதே; சற்று அவகாசமெடுத்து படிக்க, உள்வாங்க முடிய வில்லையே; சமூகத்திற்காய் நம் 24 மணிநேரத்தில் சில நிமிடப் பொழுதுகளை ஒதுக்க இயலாமல் போனதே; அந்த இயலாமையிடம் மட்டுமே மஞ்சு.
வேறென்ன சொல்ல, மனது எப்பொழுதும், நல்லதை விரும்புகிறது, மிக நல்லதை அத்தனை விரும்புவதில்லை. என்னை சொல்லவில்லை. பொதுவான ஒரு பார்வை இன்றளவில் இப்படியே நிலவுகிறது. அதற்கே முன்வந்து; அதற்கு மதிப்பளித்தே இந்த மறு குறுங்கவிதை தொகுப்பு தாயாராகிறது.
எனினும், சதா கடவுளே கதி என்றுள்ளவன், ‘உடைந்த கடவுள்’ என்று சொல்வதன் நோக்கம் என்ன? கடவுளை குறை சொல்வதா? இல்லை, நம்மை சுற்றிப் பார்க்க சொல்வது, எனக்குக் கிடைத்த கடவுள் எல்லோருக்கும் கிடைக்க செய்வதே இக்கவிதையின் பொருட்டானது.
LikeLike
மஞ்சுவிற்கு………. அருமையாய் விமர்சித்தீர்கள் என்பதைவிட எங்களின் உள்ளார்ந்த எண்ணங்களை பிரதிபளிதீர்கள் நல்ல கோர்வையான நடை நாங்கள் மற்றவர்கள் படிபதற்காக சுருக்க சொன்னோம் கவிதையை .ஆனால் ஒரு படைப்பாளிக்கு தேவையான பரிசை தந்துள்ளீர்கள் உங்களுக்கு என் மகிழ்ச்சியை வெளிபடுத்துவதோடு மஞ்சுவின் கருத்தை நாங்களும் பதிய நினைத்தோம் என்பதை வித்யா அவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன்
LikeLike
மிக்க நன்றி சரளா. எனக்காகவேனும் ஏன் கருத்தை ஏற்பீர்கள், எனக்காகவேனும் படிப்பீர்கள் என்று தானே இத்தனை சிரமம். என் தம்பி ஒருவன் சொல்வான், நான் கடவுளை முழுமையாக நம்புகிறேன், காரணம் ஐம்பது சதவிகிதம் நான் உணர்வது இரண்டாம் பட்சம்; முதலில் ஐம்பது நான் நம்புவதற்கு காரணம் என் அண்ணா நம்புவதால் என்பான்.
உங்கள் அனைவரின் அன்பிற்கும் நன்றி சரளா மற்றும் மஞ்சு!!
LikeLike