ஆதிக்க நெருப்பு தின்ற
அன்றாட ஏழைகளின் இறப்பிற்கு சாட்சி நின்ற
நாள்காட்டியின் சாபமிந்த
மறக்கமுடியா – கருப்பு ஜூலை!
மனிதக் – கருப்பு மனத்தின்
கொலைவெறி முற்றி
முற்றும்; முடியாதோரையே அழித்த
வரலாற்றுக் கொடுமை – கருப்பு ஜூலை!
சுயநல வெறி சிகப்பாய் ஓடி
தாமிரபரணியின் உடம்பெல்லாம்
பிணங்களாய் மிதந்து –
மனிதமின்மையை மனிதனே நிரூபித்த;
கறுத்த பேரவலம் – கருப்பு ஜூலை!
காக்கிச் சட்டையில் போதையுற்று
கொலைகளில் மெடல் அணியத் துடித்து
கொண்று குவித்த உடல்களின் மீதேறி
வெற்றி கூப்பாடு போட்ட பாதக வீரர்களின்
நினைவொழியா – சோகப் பதிவு; கருப்பு ஜூலை!
மாஞ்சோலைக்கு நீதி கேட்டு போய்
மரணத்தை மீதப் படுத்திக் கொண்ட
பாட்டாளிகளின் கதறல்களையும்
நிர்வாணமாய் சரிந்த உடற்கட்டைகளையும்
ஊரெல்லாம் செய்தியாக்கிய – அசிங்கமிந்த – கருப்பு ஜூலை!
பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்தே
அடக்கிக் கொண்டிருந்த வன்மம் வெடித்து,
உலகின் காதுகளில் –
அதர்மத்தின் கொடையாளர்களாய்
தமிழனை; தமிழனே பதிந்துக் கொண்ட
சீர்கேடிந்த; கருப்பு ஜூலை!
தமிழன் தன் வரலாற்றில்
செம்மொழியை கொண்டதாகவும்
அந்நியரை வென்றதாகவும்
எண்ணியதை எல்லாம் பெற்றதாகவும்
உலகத்தை தன் உள்ளங்கையில் அடக்கிக் கொண்டதாகவும்
எதை வேண்டுமோ எழுதிக் கொள்ளலாம்;
எதை சாதிப்பினும் –
இரக்கம் ஒழித்த இந்த கருப்பு ஜூலை மட்டும்
கருப்பாகவே பதிவு செய்யப் பட்டிருக்கும்
தமிழனின் கால ஏட்டில்!!
———————————————————————-
வித்யாசாகர்
கறுப்பு ஜூலையின் கோர நினைவுகள் மிண்டும் ஒருமுறை உங்கள் கவிதையால் கண்ணீர் சிந்த வைத்துள்ளதுடன், இவ்வாறான தொடர் எழுத்துக்களால் தான் மக்கள் உணர்வையும் தட்டி எழுப்ப முடியும்.
நன்றிகள் வித்தியாசாகர்
அந்நிகழ்வை ஒருமுறை செய்திப் பதிவுகளில் பார்த்தாலே உணர்வெழும். அதை பார்க்க வேண்டி, நினைவுறுத்தும் பதிவே இந்த சிவப்பு ரத்தத்தின்; கருப்பு ஜூலை!
மிக்க நன்றி ஐயா!
எழுதியது எத்தனை சரியென்று மீனகத்தின் இந்த பதிவினால் உறுதி செய்துக் கொண்டேன்.
http://meenakam.com/?p=3192
நன்றி மீனகம்!
மரணத்தை மீதப் படுத்திக் கொண்ட
பாட்டாளிகளின் கதறல்களையும்
நிர்வாணமாய் சரிந்த உடற்கட்டைகளையும்
ஊரெல்லாம் செய்தியாக்கிய – அசிங்கமிந்த – கருப்பு ஜூலை!// வித்யா உங்கள் கொந்தளிப்பு வார்த்தைகளில் வழிகிறது மரணத்தையும், வலிகளையும் வியாபாரமாக்கும் வன்கொடுமைகாரர்களுக்கு உரைக்கும் இந்த வரிகள்.
சமூதாயத்தில் இருக்கும் கிருமிகளை களைய ஒரு தடுப்பு ஊசியாய் உங்கள் கவிதைகள் இருக்கும் என்பதில் ஐயமில்லை. கவிஞன் என்றால் கற்பனைகளை வடிப்பவன் மட்டுமில்லை கண் முன் நிகழும் கொடுமைகளை களைபவன் என்பதை இந்த கவிதை வரிகளில் காணமுடிகிறது உங்கள் சமூக பணியில் இனி நாங்களும் உடன் இருப்போம்
மிக்க நன்றி சரளா. உங்கள் வழி சரியென்பதே பெரும் ஊக்கம். அதிலும் உடனிருக்கிறேன் என்றது உண்மையிலேயே நெகிழ வைக்கிறது. என்னை கேட்டால் மனதால் சமுகத்தின் அக்கறை கொண்ட அனைவருமே மனதால் இணைந்தவர்களே’ என்பேன்.
உலகின், சரியும் மானுட மேன்மையை நெறிபடுத்த ஒருவர் அதை கையில் எடுத்தாலும் போதும்; அவர்மூலம் ஒரு தலைமுறை புறப்பட்டுவிடும், அந்த ஒரு தலைமுறைக்குப் பின்னே நாளை உலகமே தன் பார்வையை திரும்பிக் கொள்ளளாம், வீழும் மானுட தர்மத்தை, மனிதத்தை ‘நிமிர்த்திப் பிடிக்கலாம் சரளா.
மிக்க நன்றி தங்கள் அன்பிற்கு..
காக்கிச் சட்டையில் போதையுற்று
கொலைகளில் மெடல் அணியத் துடித்து
கொண்று குவித்த உடல்களின் மீதேறி
வெற்றி கூப்பாடு போட்ட பாதக வீரர்களின்
நினைவொழியா – சோகப் பதிவு; கருப்பு ஜூலை! eppady iththanai veriththanamaana vaarththaihalai thangalaal uthirkka mudihirathu ellaam kadavul sejal enru oi solla venaam.