உன் கால்சட்டை ஈரமானதில்
மண் பூசி வந்து நின்றாய்.
ஐயோயெனப் பதறி
மேல்சட்டையும் மாற்றிவிட்டேன்;
மீண்டும் நீ சென்று
நீரில் மூழ்கி
ஈரமாக வந்து நின்றாய்.
ஈரமாயிற்றே குளிருமோ என்று
அதையும் மாற்றி விட்டேன்
சோறெடுத்து சட்டையிலெல்லாம்
பூசிக் கொண்டாய் –
அதையும் மாற்றி விட்டேன்
அடுத்து மீண்டும் கால் சட்டை
ஈரமானது
அதையும் மாற்றி விட்டேன்
மீண்டும் ஓடி போய்
தண்ணீரில் குதிக்கிறாய் நீ
உன் அப்பா வரும் நேரம் வேறென்று
நினைப்பதற்குள்
வந்து நின்றார் உன் அப்பா;
‘என்ன இது
குழந்தையை இப்படியா
வைத்திருப்பாய் சலி பிடிக்காது,
நாளெல்லாம் என்ன தான் பண்றியோன்னு
அப்படி ஒரு கத்தல்
நீ மெல்ல உள் சென்று
அலமாரியிலிருந்து வேறொரு நல்ல சட்டியை
கொண்டு வந்து என்னிடம் நீட்டுகிறாய்
நான் உன்னையே பார்க்கிறேன்
முறைக்கவில்லை!
————————————————