உனக்கு முகம் கழுவி
வாசனை மாவு பூசி
சாமி கும்பிட்டு
திருநீரிட்டு
நிலை கண்ணாடியில் தூக்கியுனை காட்டுகிறேன்
என் அம்மா உன் பாட்டி
எனை ‘அறிவில்லாதவன் குழந்தையை
கண்ணாடியில் காட்டுகிறான் பாரென்று’ திட்டுகிறாள்
நீ கண்ணாடியில் உனை
பார்த்து
உன் நேர்வகிடு முடியழகு பார்த்து
என்னையும் பார்த்து
இரண்டு பேரும் ஒரே மாதிரி இருப்பதாய்
நினைத்தாயோ என்னவோ
அப்படி ஒரு சிரிப்பு சிரித்தாய்,
மீண்டும் மீண்டும் நிலைக்கண்ணாடியில்
உனையே பார்த்தாய்;
நான் உன்னை
இன்னும் கொஞ்ச நேரம் கூட
கண்ணாடியில் காட்டினேன்,
நான் அறிவற்றவனாக இருப்பதில்
வருத்தமில்லை,
உன் அழகை உனக்குள் பதித்து
உனை கம்பீரமடைய செய்வதில்
மிக கவனமாக இருந்தேன்!
———————————————-