பிறப்பின் முதலெழுத்து; அப்பா!!

ன்றெல்லாம் அப்பாவின் கைபிடித்துச் சென்றே
உலகம் பார்த்த வியப்பு..

ப்பா.. நடக்கும் தெருவெல்லாம்
வாழ்வின் பாடங்களை கற்பிப்பார்..

வானத்தின் மேகப் பூக்களை கூட
யானையாகவும் குதிரையாகவும்
பார்க்க சொல்லி வளர்த்த அப்பாக்கள் எப்படியோ
மறந்தே போகிறது – பிள்ளைகளுக்கு(?)!!

மீன் வாங்கினால்
பூ வாங்கினால்
தெருவில் பழம் விற்கும் மூதாட்டியிடம்
பழம் வாங்கினால் கூட
அவர் பாவமென்று கொடுத்த அதிக பணத்திலிருந்து தானே
ஏழைக்கான கரிசனம் எனக்கே பிறந்திருக்கும்(?)!!

வர் மார்பில்படுத்து உறங்கிப் போன நாட்கள்,
அவர் காலழுத்திவிட்டு
கால்மாட்டில் தூங்கிப் போன நாட்கள்,
சிலவேளை –
அப்பா பாவமென்று உறங்காமலே அழுத்திக் கொண்டிருக்க
நடுஜாமத்தில் எழுந்த அப்பா
‘ஐயா…’ என்னய்யா இது படுக்கலையா’ என்று தன்னை
நெஞ்சுறுக அழைத்து அணைத்துக் கொண்ட நாட்களெல்லாம்
கோடான கோடி விருதுகளை
அப்பா யெனும் ஒரு வார்த்தையில்
புதைத்துத் தானே கொள்கிறது(?)!!

ழா‘ எழுது
அரிச்சுவடி படி
ஆத்திச்சூடி தெரிந்து கொள்
வாய்ப்பாடு சொல்
திருக்குறள் ஒப்பி என்றெல்லாம்
அவர் வளர்த்த தமிழில் அவைகளை கடந்து
என்றுமே பெருமைக்குரிய சொல்
அம்மாவோடு சேர்த்து அப்பா.. அப்பா மட்டும்.. தானே(?)!!

ங்கு தன் பிள்ளைகள் எதற்கேனும் ஏங்கி
பிறர் வீட்டில் போய் நிற்குமோ,
ஊரார் பார்த்துவிட்டால் –
தன் பிள்ளைகளுக்கு கண்பட்டுவிடுமோ’ என்றெல்லாம்
தின்பண்டங்களை கூட தன் வேட்டியிலோ
வேறு துணி போட்டு மூடியோ –
மறைத்து மறைத்து வாங்கிவந்த அப்பா எனும் வரம்
எப்படித்தான் ‘கடைசி வரை இல்லாமலே போகிறதோ(?)!!

மிழை திருத்தமாக படி
தமிழை திருத்தமாக பேசு
ஆங்கிலம் அவசியமெனில் கற்றுகொள்
பிறமொழி பேசும் திறனை வளர்த்துக் கொள்
அதற்காக மம்மி டாடி என்றழைக்காதே..
காலையில் எழுந்து விடு
உழைக்க பழகிக் கொள்
பொய் சொல்லாதே
பயம் தோல்வியை தரும்
நியாயத்தை தட்டி கேள்
அவசியத்திற்கு கோபம் கொள்
அசிங்கமாக பேசாதே
பிறர் இகழ நடக்காதே
ஒருபோதும் பிறரை ஏமாற்றாதே
நீ பெரிய ஆளாக வருவாய்……….. ‘என்றெல்லாம்
நம்பிக்கையையும் –
போதனைகளையும் கொடுத்த அப்பா…
வாழ்வெல்லாம் எனை
எனக்காய் தலைமேல் சுமந்த
குருவிற்கு ஒருபடி மேலன்றி வேறென்ன(?)!!

ப்பாவிடம் புத்தகம் கேட்பேன்,
‘என்ன புத்தகம்பா..?’
‘சோசியல் சைன்ஸ்பா’

‘அப்படின்னா என்னப்பா?’
‘சமுக அறிவியல்பா’
‘அப்படியா????!!!!!!!!!!’

ப்பா ஜாமின்ரி பாக்ஸ் வேணும்பா’
“அப்படின்னா என்னப்பா???”
‘பேனா பென்சிலெல்லாம் வைப்போமே அதுப்பா’
‘ஹாங்.. டப்பாவா ???”
‘டப்பா இல்லப்பா அதுல வேற காம்பஸ், ஸ்கேல், எல்லாம் இருக்கும்பா”
‘அதலாம் எனக்கு தெரியாதுப்பா
படிக்க உயிரு வேணுமா எடுத்துக்கோப்பா – ஆனா நல்லா படிப்பா
அது போதுமப்பா’ என்று சொன்ன அப்பாக்கள் –

அந்த ஜாமின்ரி பாக்ஸ் தொலைந்தாலும்
புத்தகம் கிழிந்தாலும்
அதன் நினைவாகவும் படிப்பாகவும்
நம் பெயருக்கு – முன்னும் – பின்னும்
இருந்துக் கொண்டே இருக்கிறார்கள்!!
——————————————————————————-
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அம்மாயெனும் தூரிகையே.. and tagged , , , , , , , , . Bookmark the permalink.

14 Responses to பிறப்பின் முதலெழுத்து; அப்பா!!

  1. மனோஜ் சொல்கிறார்:

    ஆம்,, உண்மைதான் தோழரே….
    நான் பேசுவது, பழகுவது, என் திறமைகள், என்னுடைய சிந்தனைகள், எல்லாவற்றில் எல்லாமுமாய் என் தந்தை இருக்கிறார் நிழலாக எனது உயிராக….
    அப்பா என் மூச்சு வரை உங்களை நான் அரவணைப்பேன்…
    மிக சிறப்பாக இலகுவாக படைத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்….

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      அப்பாவை மறக்காதவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் மனோஜ். முன்பொரு முறை ‘அப்பாஎன்றொரு வேதம்’ என ஒரு கவிதை எழுதியுள்ளேன்.

      அதில் அப்பா இறந்துவிடும் வலியும் பதியப் பட்டிருக்கும். அதைகூட தாங்க முடியாத நண்பர் ஒருவர், இப்படி அப்பா இறப்பாதாக எழுதிவிட்டீர்களே; மாற்றி எழுதமுடியுமா என்று கேட்டார்.

      அவர்களையும் தாண்டி, சூழ்நிலையும், கையிருப்பும், வருமானமும், திறமையும், சுயநலமும், சுற்றமும் காரணங்கொண்டு தன்னிலை மறப்பவர்களுக்கு நினைவுருத்தவும், தவிர வளரும் குழந்தைகளுக்கு ஒரு அப்பா சொல்வது போல ‘இப்படி சில நல்ல கடைபிடிக்க வேண்டிய கருத்துக்களை மனதில் பதியும் பொருட்டாகவுமே ‘இக்கவிதை சற்று நீளமாகவும் எழுதப் பட்டுள்ளது.

      அதலாம் தவிர்த்து, என்றோ கைப்பிடித்து நடந்த அப்பாவின் நினைவுகளை, அப்பாவின் அருகாமையை, அந்த வளர்ந்த காலப் பொழுதுகளை சற்று திரும்பிப் பார்த்துக் கொண்ட உணர்வு!

      Like

  2. Suhaitha Mashoor சொல்கிறார்:

    பிள்ளைகள், காலத்தின் மேல் பழி போடுகிறார்கள் .நேரமில்லை என்று காரணம் காட்டுகின்றனர் .வித்யா .பிள்ளைகளுக்காக தங்கள் வாழ்வைத் தியாகம் செய்த எத்தனை அப்பாக்கள் இன்று முதியோர் இல்லத்தில் . . . . .
    முடங்கிக் கிடக்கிறார்கள் .

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      முதியோர் இல்லத்தின் வலி தெரிவதில்லை சுஹைத்தா. ஜன்னாடிக்கம்பிகளுக்கு பின் நின்று வானம் பார்த்து பார்த்தே இறந்து போன பெற்றோர் நிறையபேர்.

      தனிமை கொள்கிறது என்பதை விட, தனிமைபடுத்தப்பட்டதே அவர்களை நிறைய கொள்கிறது. தன்னை பார்த்துக் கொள்ளாதது வலியல்…ல; நிராகரித்ததே வலி என்பதை, நிராகரிக்கும் முன் தெரிந்துக் கொள்வதே தெளிவு.

      எனினும், முன்பை காட்டிலும் மாமியார் மாமனார் என்றாலே யாரோ நமக்கு ஆகாதவர்கள் எனும் எதிர்மறையான எண்ணம் குறைந்து, அவர்களையும் அம்மா அப்பா என்று அழைக்கத் துவங்கியிருக்கும் இன்றைய தலைமுறையினரால் வேற்றுமை எண்ணங்கள் குறைந்து, எல்லோரும் ஒன்றே என்று நினைக்கத் துவங்கியிருப்பதால், ‘ஒருவேளை நாளை முதியோரிள்ளங்கள் குறைக்கப்படலாம்.

      என்றாலும், உயிரின் கடைசி மூச்சு வரை, தன்னால் இயன்றவரை, பெற்றோரை மகிழ்வாக வைத்துக்கொள்ள வேண்டியது ‘நாளைய பெற்றோர்களான, இன்றைய பிள்ளைகளின் கடமை!

      Like

  3. வித்யாசாகர் சொல்கிறார்:

    //அப்பா என் மூச்சு வரை உங்களை நான் அரவணைப்பேன்…//

    இந்த அன்பொன்று உங்களை எப்பொழுதுமாய் காத்துநிற்கும் மனோஜ்! மிக்க நன்றிகளும் வாழ்த்துக்களும்!

    Like

  4. Suhaitha Mashoor சொல்கிறார்:

    உடம்பில் ஒடும் உதிரத்தின்
    உதயத் தாரகை,
    சுவாசிப்பில் வரும்
    ஒவ்வோர் மூச்சுக்கும் அதிபதி, தந்தை; வித்யா !

    ஒரு அப்பாவால், தன் குழந்தைகள் எல்லோரையும் ஒன்று போல் நேசிக்க ,பராமரிக்க, முடிகிறது. ஆனால் பிள்ளைகள் எல்லோராலும் ஒரு தந்தையை பராமரிக்க முடிகிறதா என்றால் வினாக்குறியாகத்தான் இருக்கிறது.

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      அது மாறும். மாறனும் சுஹைதா.

      நம்மை போல் நிறைய பேர் இதை பற்றியெல்லாம் பேச ஆரம்பித்தால், பகிர ஆரம்பித்தால், நாளடைவில் முழுதுமாக இல்லையென்றாலும், அதிகளவில் மாறும்.

      அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகருமாமே, நாம் அடியாய் இருப்போம்!!

      Like

  5. மனோஜ் சொல்கிறார்:

    @ வித்யாசாகர் : மிக்க நன்றி..!! நான் இந்த உறுதியில் இருந்து நிச்சயமாக தவறமாட்டேன்….

    @சுஹைதா : அது இக்காலத்தில் அப்படித்தானே நிகழ்கிறது….ஆனால் நாம் இதை வளர விடாமல்…இந்த சமூகத்தை நம்மால் இயன்றவை மாற்ற வேண்டும்…

    Like

  6. Suhaitha Mashoor சொல்கிறார்:

    நிச்சையமாக . . . .மாறனும். மாற்றனும் வித்தியா.
    பல தந்தையரகளின் வலிகள் அவர்களால் சொல்லாவிட்டாலும் நடைமுறையில் காணக்கூடியதாகத் தானே இருக்கிறது.

    பிள்ளைகள் சிந்திப்பார்களா ?

    Like

  7. வித்யாசாகர் சொல்கிறார்:

    சிந்திக்கிறார்கள். சிந்திப்பார்கள். சிந்திப்பார்கள் என்பதற்கு மனோஜும், நாமும் உதாரனமாவோம் சுஹைதா!!

    Like

  8. Vijay சொல்கிறார்:

    அரு​மையான கவி​தை…. என்னுள்​ளே வாழும் என் தந்​தையின் நி​னைவுள் என் முன்…. இருந்தும்
    //படிக்க உயிரு வேணுமா எடுத்துக்கோப்பா – ஆனா நல்லா படிப்பா
    அது போதுமப்பா//
    என்று ​சொன்ன என் தந்​தை இன்று என்​னோடு இல்​லை என்று நி​னைக்​கையில் ஏ​னோ விழிகளுக்குள் வியர்​வை…..

    இறைஞ்சுகின்றேன் இறைவனிடம்
    இன்னோரு ஜென்மம் – தந்​iதை​யே
    உன்னோடு நானிருக்கும்
    உன்னத நாட்களுக்காய்…….

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      வருத்தம் மட்டுமே கொள்ளமுடிந்த விசயம்பா. ஒரு தாய் தந்தை இழப்புக்கு இணை வேறெந்த இழப்புமில்லை உலகில். ஒரு மனிதன் இறக்கும் முதலிடம் அது. பிறகு மெல்ல மெல்ல காலப்போக்கில், இன்னும் பல துயரங்களால் இறந்துப் போனவனின் ‘உடல் மட்டுமே இருந்து இருந்து அழுது அழுது கடைசியாய் வெறும் கட்டையாக மரணிக்கிறது.

      அப்பாவின் அன்பும் ஆசிர்வாதமும் உங்களுக்கு என்றும் இருக்கும்பா.. நினைவுகளாக இருக்கும் அப்பா; துணையாகவும் உங்களோடு இருப்பார்..

      Like

  9. Zulfir Sadat சொல்கிறார்:

    மிகச் சிறந்த ஒரு படைப்பு. பாராட்டுக்கள் வித்யா சாகர்.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s