எழுத்தாளர் ‘நிலாவின் இந்திய உலா’விற்கான அணிந்துரை!

எழுத்தின் வெளிச்சத்தில் மின்னுகிறது நிலா..

(பயணக் கட்டுரை)

சுதந்திரத்தின் வலி உணர்ந்த எழுத்து
தடுக்கும் இடமெல்லாம் முயற்சிகளால் உடைத்தெறிந்த திறன்
வீழும் உலகம் சரிந்து ‘தலை மேல் வீழினும் –
எனக்கொன்றும் ஆகாதேனும் நம்பிக்கை,
நிலாவின் நம்பிக்கை!

மின்னும் நட்சத்திர வானில் ஒரு புள்ளியாய் தெரிவதல்ல –
நட்சத்திரமாக ஓர்தினம் வீழ்ந்துவிடுவதும் அல்ல
நிலைத்து வானத்தின் வெண்மையை பறைசாற்றும் ஓர்
நிலவின் ஒளி போல் –
நம் இதயத்தை வெளிச்சத்தால் நிறைக்கும்
ஒரு உயர்ந்த படைப்பாளியின் எழுத்து நடை ‘நிலாவின் எழுத்து நடை!

தெருவில் நடப்பவருக்கு லாட்டரி அடிக்குமா
கீழே எங்கேனும் கற்றையாக பணம் கிடைக்குமா
ஏதேனும் பொன்முடிப்பு எப்படியாவது கிடைத்து வங்கியிலிட்டு விட்டால்
மூன்று வேளை சோறுக்காகுமே ‘என்று வாழும் பலருக்கு மத்தியில்
தன் வலிகளையும், தான் பட்ட அவுமானங்களையும் மறந்து
தனக்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவும்
எங்கேனும் ஓர் பிறப்பு தன்னை போல் இருந்துவிட்டால்
அப்பிறப்பிற்கு தான் ஒரு முன்னுதாரணமாக இருத்தல் வேண்டுமென்றும்
நிலா கொண்டுள்ள சிரத்தை ‘நிலாவின் ”எழுத எழுத” எனும் முதல் படைப்பிலிருந்தே தெரியாமலில்லை யென்றாலும், கண்ணீர் சொட்ட சொட்ட வாழ்ந்த வாழ்வின் ஈரத்தில் வீறுகொண்டெழுந்த ‘வெற்றிகளின் எழுத்தாகவே மின்னுகின்ற வார்த்தைகளின் லயம் – மிளிர்கின்றன நிலாவின் ‘இந்திய உலா எங்கும்!

னம் என்பது முயற்சி செய்யாதாரின் போக்கு
ஊனம் என்பது உழைக்க இயலாதார் பேசும் பேச்சு
ஊனமுற்றோர் எவரும் – முழு ஊனமுற்றோறில்லை என
தன் ‘எழுத்தாலும், பதினைந்து நாடகம் இயக்கிய திறத்தாலும்
ஒன்பது பேருக்கு வேலை கொடுத்து நடத்திய ‘சரஸ்வதி கலையகத்தின் வாயிலாகவும் நிரூபிக்கும் ஒரு உயர் மதிப்பிற்குரிய ‘தமிழ் சமுதாயம் தாங்கிப் பிடித்துக் கொள்ளவேண்டிய தோள்; தோழி; இந்திய உலாவின் ஆசிரியர் இந்த நிலா அவர்கள்!

விமான நிலையத்திலிருந்து வெளிவருவதாக சொல்லும் ஓரிடத்தில்,
நான்கு சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் தன் தாயிடம்
கேமிராவின் கண்களிலிருந்து மறைந்து நின்றவாறு, விமான பணியாளன் ஒருவன் சேவகம் செய்ததற்கு பணம் கேட்டதாக சொல்லி வருத்தமுறுகிறார். அந்த வருத்தம் போல் ஆங்காங்கே, தோலுரித்து அம்மணமாய் திரியும் ‘பண ஆசை பித்தர்களின் போக்கு ‘நிலாவின் எழுத்திற்கிடையேயும் பட்டுத் தெறித்திருக்கும், நம்தேச அவலநிலையை எண்ணி’ மனம் வருத்தமென்ன, தலை குனியவே செய்கிறது.

க, இப்படி மனதை பிழிந்து கசக்கும் இடங்களிலும்
பக்குவப் பட்டு தெளிந்த நிலாவின் எழுத்து
வலி தாண்டி அவரின் துணிச்சலையும்
தன்னம்பிக்கையையுமே காட்டுகிறது எனலாம்!

நாமெல்லாம் நம்பிக்கையின் நட்சத்திரம் என்று பார்ப்பவர் யாரையாயினும் வழக்கமாக சொல்லிக் கொள்வோம். ஆனால் சற்று யோசித்துப்பாருங்கள் ‘கைகளிரண்டும் முழு இயக்கமில்லை, கால்கள் இரண்டும் முழு இயக்கமில்லை, மனதொன்றே பலமென்று இவராற்றும் சாதனை தான் ‘இவரை நம் முன் உண்மையான நம்பிக்கையின் நட்சத்திரமாக்கி நிற்க வைக்கிறது போல்!

சில இடங்களில் நம்மை மீறி கண்ணீர் கரைபுரண்டோடியும் விடுகின்றன. அதற்கான காரணத்தை வெறும் எழுதிய நடையின் அழகு என்று சொல்லி ஒதுங்கிக் கொள்ளமுடியாது; அது அவர் வாழும் யதார்த்த வலி என்பதே நிஜம் என்றும் புரிகிறது .

உண்மையில் நிலா என்றால் என்ன?

நம்பிக்கை எனும் உயிர் தாங்கி
அம்மா அண்ணன்கள் சுற்றமெனும் உடல் சுமந்து
நட்பெனும் பலத்தால்
விண்ணை முட்டும் கனவுகளோடு வாழும்; அல்லது
வாழ இயலாமையை கண்ணீராக அல்லாமல் எழுத்தாக உதிர்க்கும் ஒரு சாதனை பெண் என்பதே சரி என்பதை ‘இந்த இந்தியா உலாவினை வாசித்து முடிக்கையில் நீங்களும் அறிந்துக் கொள்வீர்கள்.

அந்த சாதனை பெண் என்ற ஒற்றை வார்த்தையை
மீண்டும் சரித்திர நாயகியாய் நிறுத்தி
நிலாவின் தரத்தை மேலும் நம் பார்வையில்
மெருகூட்டி செல்கிறது அவரின் திறம்பட உழைக்கும்
இதர அத்தனை உழைப்பும்.

துவரை, மூன்று புத்தகங்களை எழுதியுள்ளார், பதினைந்து நாடகங்களை
இயக்கியுள்ளாராம், பாடம் கற்றுக் கொடுக்கிறாராம், வானொலி நிகழ்ச்சி நடத்துகிறாராம் இதற்கெல்லாம் மத்தியில் உடல் உபாதையின் போராட்டம் எதிர்த்து லண்டனிலிருந்து சென்னை வந்து புத்தகம் அச்சடித்து வெளியீட்டு விழாவும் எடுக்க இருக்கிறாராம், இவரின் மனபலமும், முயற்சியும், உழைப்பும், உலகத்தால் ஓர்தினம் பாராட்டப் படும் என்பதற்கு என் முன்கூட்டிய வாழ்த்தினை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

முக்கியமாக நட்பை அப்படி பெருமை படுத்துகிறார் இந்த பயணக் கட்டுரையின் ஆசிரியர் நிலா. இவரின் அத்தனை அசைவுகளுக்கும் துணையாய் இருந்து நட்பு ஒன்றே இவரை இத்தனை பெருமை படுத்தியதென்பதை, இவரின் ஒவ்வொரு பக்கத்திலும் அறிய இயலாமலில்லை. அண்ணன்களின் பெருமை ஒரு புறமெனில் நட்பின் புகழையே அதிகம் பேசித் தீர்க்கிறது இந்த “நிலாவின் இந்திய உலா”.

பொதுவாக அணிந்துரை எனில் புத்தகம் பற்றி பேசுவார்களே, அவர் எழுதிய முக்கிய இடங்களை கோடிட்டு காட்டுவார்களே, நீங்களென்ன நிலாவை பற்றியே பேசுகிறீர்களே என்று யாரும் எண்ணிவிடாதீர்கள். புத்தகம் பேசும் ஒவ்வொரு இடமும் எனக்கு நிலாவின் உழைப்பையும், தன்னம்பிக்கையையும், முயற்சியையுமே பெரிதாக்கிக் காட்டுகிறது என்பதால் அவரை பற்றிய சிறப்புகளையும் வலிகளையும் முன்வைத்துவிடுவேனெனில், புத்தகம் தானே உங்களுக்குப் பரிட்சயப் பட்டுவிடுமென்பதே என் நோக்கம்.

யணக் கட்டுரை என்பது ஒரு சுவாரஸ்யம் மிக்க, வழி போக்கர்களின் அனுபவத்தை பறைசாற்றி நிற்பது. ஆனால் இப்படைப்பு முழுவதும் உங்களுக்கு நிலா பற்றியான உபாதையும் வலிகளும், அதை எதிர்த்து அவர் போராடிய சம்பவங்களும் அதன் பின்மறைவில் நிற்கும் உறவின் நட்பின் பெருமையும் தவிர நம் தேசத்தின் சீர்கேடல்களால் எழும் அவர் சாடல்களுமே ”நிலாவின் இந்திய உலா” என்று எண்ணம் கொள்ளச் செய்யும்.

ரிடத்தில் பக்ரீன் சென்று காலைகடன்களை முடிக்க உதவ ஆளின்றி பெரும்பாடு படுவதாகவும், அதை காண இயலாதவராக அவரின் தாய் அவருடைய உயிர்போனாலும் பரவாயில்லை என தானே தூக்கி சென்று தேவைகளை பூர்த்தி செய்ய உடனிருந்து உதவி செய்ததாகவும் சொல்லுமிடம் மனதை கண்ணீர்விட்டு கண்ணீர்விட்டு கரைக்கிறது.

ன் முடியாத வயதிலும் மகளுக்கென போராட துடிக்கும் அந்த தாயை எண்ணி பெருமை கொள்வதா, அல்லது நிலாவின் இயலாமையை எண்ணி கண்ணீர் வடிப்பதா என்றெண்ணுகையில் அத்தகைய கோழையல்ல நிலா என்றெண்ணி, எங்கு என் கண்ணீர் அவரின் நம்பிக்கையை உடைத்து விடுமோயென ‘கனமான மனதோடு புத்தகத்தை மூடி விட்டேன்.

து போல் மூடி வைத்து கனத்த மனதோடு நிலாவை எண்ணி உருகுமிடம் இந் ‘நிலாவின் இந்திய உலா’ எங்கிலும் நிறைந்தே இருக்கிறதென்றாலும், இவரின் வெற்றிகளை எல்லாம் தாண்டி அந்த தாயின் அன்பிற்கு, தியாகத்திற்கு, உலகின் ஏதேனும் ஒரு உயர்ந்த பரிசினை காணிக்கையாக்க என் மனதெல்லாம் சிபாரிசு நிறைகிறது.

ப்படி, நீளும் புத்தகமெங்கும் வியாபிக்கும் மனதாக, புத்தகத்தை பிரித்த உங்களை நானே பேசி நேரம் கடத்த விரும்பவில்லை. எப்படியாயினும் இப்படைப்பினை முழுமையாக படித்து முடிக்கையில், அண்ணன்களின் மேல் காட்டும் பாசம், நண்பர்களின் மேல் கொள்ளும் நட்பு, மனிதரின் மேல் வைக்கும் நம்பிக்கை என ஒரு உயர்ந்த பெண்மணியாகவே ‘நிலா உங்களின் மனதெங்கிலும் நிறைவார் என்பதில் ஐயமில்லை.

க, அவரின் இயலாமைகளை கடந்து, அவரின் சாதனைக்கான முயற்சியாகவும், வாழ்விற்கான ரசனையாகவும், சமூகத்திற்கான கோபமாகவும் கனகம்பீரமான எழுத்துக்களால் இலக்கிய உலகின் வெற்றிமலரை இந்த பயணக் கட்டுரை மூலம் பறித்தே கொள்கிறார் நிலா’ என்பது உறுதி யென்றாலும், இயற்கையை வர்ணிக்கும் விதமும், நெடுக நீளும் பயணத்தின், ஒரு அத்யாயத்தை அல்லது பக்கங்களை முடித்து நிறுத்தும் திறனிலும் மனதில் ஆழமாக பதிகிறது அவரின் எழுத்து. ஏதோ ஒரு சோக படம் பார்த்த மனதாகவும், நம்பிக்கையில் மீண்ட உயிராகவும், யாரோ தன் ஒரு நெருங்கிய தோழியின் மனதெல்லாம் சுற்றி வலம் வந்ததாகவும் அவரின் நிஜ முகத்தை நமக்கும் நினைவுகொள்ள செய்கிறது இந்த “நிலாவின் இந்திய உலா.

ரு இரவு விழித்த விழிப்பின் பலனாக பகலில் வாங்கும் ஊதியமும், அதை சார்ந்த வாழ்வாகவுமே ஒவ்வொருவரின் கடின உழைப்பும் அவரவருக்கான வாழ்வின் வெளிச்சத்தோடு பல உயரிய வெற்றிகளையும் சுமந்தே வருகிறது. அதுபோல் என் அன்பிற்குரிய தோழி, நிலாவின் இந்த “இந்திய உலாவும், இலக்கிய உலகின் நிலைத்த நூலாக நின்று, தமிழுக்கு சேர்க்கும் மற்றுமொரு பெருமையாக விளங்கி ‘ஒரு பெண்ணின் வாழ்ந்த, வென்ற, அடையாளமாக காலத்திற்கு சொல்லி நிற்கட்டும்.

நாளொன்றின் பொழுதுகளில் இலக்கிய வாசல் தேடி வரும் ஆயிரமாயிரம் படைப்புகளில் இவரின் படைப்பும் முத்தாய்ப்பானதாய் விளங்கட்டும். இன்னும் பல அரிய படைப்புக்களை படைக்கும் உயர்ந்த திறனையும், போதிய உடல்நலத்தையும் பெற்று, இந் நிலாவின் நூல்கள் இனி வருவோரின் வாழ்க்கைக்கு பெரும் நம்பிக்கையின் சக்தியாக திகழ ‘எல்லாம்வல்ல இறைவனையும் வேண்டி, இப்படைப்பை வெளியிடுவதில் பெருமை கொண்டு ‘ஒரு படைப்பாளியின் வெற்றியை தன் வாசிப்பில் வைத்திருக்கும்’ வாசகர்களாகிய உங்களிடமே இந்நூலினையும் விட்டுவிட்டு, நிலாவின் மொத்த முயற்சிகளுக்கும், வெற்றிகளுக்கும், உங்கள் ஆதரவிற்கும் பெருத்த வணக்கமும் நன்றியும் தெரிவித்தவனாய்…

வித்யாசாகர்

(இது ஒரு முகில் பதிப்பக வெளியீடு..)

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அணிந்துரை and tagged , , , , , , , . Bookmark the permalink.

10 Responses to எழுத்தாளர் ‘நிலாவின் இந்திய உலா’விற்கான அணிந்துரை!

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி சகோதரி. தளம் பார்த்தேன். நேரம் கிடைக்கையில் படித்துக் கொள்கிறேன். லண்டனில் வசித்து வரும் ஈழத்து பெண்மணி நிலா. மிக நல்ல படைப்பாளி. பத்துவருடங்களாக நிலாமுற்றமெனும் வலைதளத்தினை சிறப்பாக நடத்திவருகிறார். அவரின் மற்றுமொரு நல்ல படைப்பிந்த ‘நிலாவின் இந்திய உலா’ எனும் பயணக் கட்டுரை. ஒரு மலரும் நினைவு போல படிப்போருக்குள் நினைவுருகிறது. இம் மாதக் கடைசியில் சென்னை பிரபல அரங்கமொன்றில் வெளியாகவுள்ளது.

      முகில் பதிப்பகம் வெளியிட விற்பனை உரிமை வடலி பதிப்பகத்திற்கு தரப் பட்டுள்ளது. புத்தகங்கள் வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து வடலியிலும், எழுத்தாளர் நிலா மூலமும் விற்ப்பனைக்கு கிடைக்கப் படலாம்!

      Like

  1. கோவை கவி சொல்கிறார்:

    நிலாவைத் தெரியும். அதே வானெலியில் தான் எல்லோரும் சுவைத்த எனது 3 பயணக்கட்டுரைகள் எனது குரலில் ஒலிபரப்பானது. அவரும் விமர்சனங்கள் தந்துள்ளார். இடையிடையே தொடர்பும் கொள்வதுண்டு. நன்றி சகோதரரே!

    Like

  2. S & Y S .Tharmendiran சொல்கிறார்:

    அன்பின் சகோதரி நிலா வணக்கம்

    நானும் யமுனா அக்காவும் அக்காவின் தாயின் சுகவீனம் காரணமாக கனடாவில் நிற்கின்றோம். உமது இந்த வெளியீடு மிகவும் சிருப்பாக இனிதேற எம் இருவரதும் உளம் கனிந்த வாழ்த்தக்கள்.

    லண்டன் விம்ப்லே ஈலிங் ரோட்டில் மாத மாதம் நடத்திவந்த வாசகர் வட்டம் இந்த மாதம் முதல் வில்ச்டன் கிரீன் நூலகத்தில் இடம்பெறும் என்பது நீர் அறிந்ததே, வாசகர் வட்டத்தில் உமது இந் நூலும் ஆராயப்பட்டும் என்பதை உறுதி செய்கிறோம்.

    மீன்டும் உம் முயற்சிக்கு சிரம் தாழ்த்தி வணங்கும் உம் அன்பின்

    யமுனா அக்கா தர்மேந்திரன் அன்னை

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      அன்பு சகோதரிக்கு,

      நிலாவின் சார்பாக என் நன்றிகளும், மிக்க அன்பும். தங்களின் வாழ்த்துக்கள் கண்டிப்பாக நிலவின் எழுத்துக்களை மேலும் செழுமை படுத்தும். இறைவன் எல்லோருக்கும் எல்லோரின் வெற்றிக்கும், ‘உங்களை போன்றோர் வடிவிலாவது வந்து துணை இருப்பார் என்றே நம்புவோம்!

      Like

  3. கோவை மு. சரளா சொல்கிறார்:

    அணிந்துரையின் அர்த்தம் அதிகமாக புரியபடுகிறது நல்ல ஒரு கோணத்தில்.

    அருமை வித்யா உங்கள் அணிந்துரை நிலாவை முழுவதும் பிரதிபலிப்பதாய் உள்ளத்து.

    இது பயண கட்டுரை அல்ல வலி நிறைந்த பெண்ணின் பாத சுவடுகள் எனலாம் ஊனம் என்பது மனதில் இருப்பது என்று வெறும் வார்த்தைகளில் சொல்லிவிடலாம்.

    ஆனால் உடலால் ஊனபட்டும் மனத்தால் தன்னம்பிக்கை இழக்காத நிலாவின் உருவம் கண்முன் நிழலாடுகிறது உங்கள் வார்த்தைகளின் வழியாக மேலும் சிறக்கட்டும் அவர்கள் வாழ்வு.

    பெண் இனத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில். ஒரு பெண்ணின் வலி உணர்ந்து அதை உணர்த்தும் உங்களை போன்ற உள்ளங்கள் உள்ளவரை இந்த உலகம் நீடித்திருக்கும்

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி சரளா.. என் எழுத்துக்கள் குறிப்பாக இந்த அணிந்துரை அவர்களின் உழைப்பிற்கும் முயற்சிக்கும் போராட்டத்திற்கும் ஒரு குறைவு தான் என்றாலும் சற்றேனும் பலமாக அமையும் என்று நம்புகிறேன். பெண்களால் தான் பெண்களின் முழு வலியை வருத்தங்களை வேதனை குறையாமல் மறைக்கப் படாமல் எழுத முடியும். அதற்கான பெண்களை எழுதத் தூண்டும் முயற்சியில் இந்த அணிந்துரையும் ஒரு முன்னோட்டமாக இருக்கிறது!

      நிலா விரைவில் இன்னும் பிராகாசிப்பார்…

      Like

  4. நிலா - இலண்டன் சொல்கிறார்:

    அன்பு நிறை வித்யா!

    எனக்குள் இன்னும் ஊக்கத்தை வளர்த்து இருக்கிறது உங்கள் அணிந்துரை. சகோதரி வேதா, தர்மேந்திரா தம்பதி, கோவை சரளா எல்லோர்க்கும் பணிவான நன்றிகள்.

    நட்புடன் நிலா.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s