‘விடையிராதா
நீண்ட கேள்விகளால்
நிறைகிறது –
எதற்கெதற்காகவோ காத்திருக்கிற மனசு..
‘நீண்ட பாலை நிலங்களில்
காய்ந்த புற்களை போல்
தொலைத்திட்ட ஆசைகள்
மரணத்தை மட்டும் மிச்சம் வைத்துக் கொண்டு
எல்லாவற்றிற்குமாகவும்; காத்திருக்கவே செய்கிறது..
‘வருடத்தில் பூக்கும்
வளைகுடாவின் பசுமையை போலன்றியும்
வருடங்களிரண்டில் பார்த்து வந்த குடும்பத்து முகங்கள்
தூரத்தின் இடைவெளியில் –
சிக்கிக் கொண்ட பாரங்களாகவே கனக்கின்றன..
‘எரிக்கும் வெயில்; வலிக்கும் குளிர்
கண் அடைக்கும் மனற் காற்று
எல்லாம் கடந்தும் –
உறவுகளின் நினைவுகளில் வலிக்கும்; வலி
தீர வதையன்றி வேறில்லை..
‘சான்றிதழ் தூக்கிக் கொண்டு ஏறி இறங்கிய படிகள்,
வெளிநாட்டில் வேலை கிடைத்துவிட்டதென வெடித்துச் சிரித்த சிரிப்பு,
விமானத்திலிருந்து இறங்கிய பின் வாங்கிய முதல் சம்பளம்,
இவை எல்லாவற்றையும் ஈடுகட்ட
கண்ணீர்தான்
கண்ணீர்தான் மிச்சமாகுமென
அன்று தெரியவில்லை –
முடிகொட்டி
வாழ்க்கை மொட்டையாகி
கிழவனென்று பட்டம் சுமந்து ஊர்செல்கையில்
மிக நன்றாகவே தெரிகிறது;
‘தெரிந்து மட்டுமென்ன செய்ய
அதோ எனை சுமந்து வந்த விமானம் திரும்பி செல்கையில்
இங்கிருந்து நிறைய பேரை –
ஏற்றிக் கொண்டு தான் செல்கிறது; அதே வதை நோக்கி!!
———————————————————————
வித்யாசாகர்
கருத்தில் வேறுபாடிருந்தாலும் கவிதையில் சொக்கித்தான் போனேன்..!
முன்பே நான் நண்பரொருவருக்கு சொன்னது போல.. சொன்னது போல நாமே கட்டிய வீட்டை சிறைசாலை என அழைப்பது ஏன்..?
ஈட்டுவதற்க்காகத்தானே இழப்பதெல்லாம்..?
LikeLike
வணக்கம் சகோதரர், என் மகனை பிரிந்தோ, என் மனைவியை பிரிந்தோ, என் அம்மாவை அண்ணன் தம்பி அக்கா தங்கை காதலி நண்பன் என எல்லோரையும் பிரிந்து வந்து இங்கே வெளிநாடுகளில் வசிப்பது பொருள் ஈட்டத்தான்.
மிக்க சரி. ஆனால் அவர்களை பிரிந்திருப்பது வலியில்லை என்று எண்ண இயலவில்லை இல்லையா.
மருந்து சாப்பிடுகிறோம். மருந்து நல்லதற்காகத் தான். ஆனால் மருந்து கசப்பு தானே? அந்த கசப்பை, அந்த வலியை, அந்த பிரிவின் வதையை, அந்த வதைக்கான உணர்வினை வரிகளாக்க எண்ணிய கவிதை இது.
மற்றபடி, பதினாறு வருடங்களாக உறவுகளை பிரிந்து, அவர்களை சிறப்பிப்பதிலும், தன்னை சிறப்பித்துக் கொள்வதிலுமாகத் தான் நகர்கிறது வாழ்க்கை!
இது முன்பெழுதிய கவிதை, தற்போது பதியப் பட்டுள்ளது. தங்களின் அன்பிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!
LikeLike