ஒரு உயிரொழுக பூக்கிறது அன்பு;
இல்லாத மனசிலிருந்து.
மனசெனில்’ அறிவு தாண்டி
ஆத்மா நிறையுமிடமோ தெரியவில்லை.
நான் கேட்டது கிடைத்த சிரிப்பைவிட
வேண்டியதை இழந்த துக்கத்தில் –
மனசை அடையாளாம் காணாமல்,
உடம்பெல்லாம் எரியும் வேதனை தீயில்
மனசெங்கோ அன்பின் குவியலாக
இருப்பதாகத் தான் தெரிகிறது; எனக்குள்ளும்!
ஒரு பார்வையில் பரிதவித்து
முத்தத்தில் நிறைந்து
பிரிவில் தவித்து
ஏக்கத்தில் உயிர் கொள்ளும் மனசு
உடம்பின் வாழ்தலில் மட்டுமல்ல
மனிதத்திலும் நிறைந்து மனிதனாய் என்னை
அடையாளப் படுத்துவதாகவே உணர்கிறேன்.
எதுவாகிலும் மனசு எனக்குள் கனக்கிறது
அன்பிற்காய் ஏங்கி நிற்கிறது
இன்னும் நிறைய மனசுகளை தனக்குள்ளே
தக்கவைத்துக் கொள்ள தவிக்கிறது
அந்த தவிப்படங்கும் நாளில்
நான் உயிரற்றுப் போவேனோ???? அன்று
ஒரு வேலை இல்லாமல் போகுமோ என் மனசு??!!!
——————————————————————