உள்ளிருக்கும் சிரிப்பை
வெளியே கொணரும் ரமலான்;
மனதிற்குள் நிறைந்துள்ள தெய்வீகத்தை
முகத்தில் காண்பிக்கும் ரமலான்!
முப்பது நாள் நோன்புதனில் – ஏழையின்
பசியினை போதிக்கும் ரமலான்;
ஐந்து வேலை தொழுகையில் – மனித
ஆன்மாவினை சிறப்பிக்கும் ரமலான்!
இல்லாது உண்ணாததை விடுத்து – எல்லாம்
இருந்தும் உண்ணாமையில் ‘தீரம் தரும் ரமலான்;
நினைப்பதை நடத்தும் உறுதியை – மனதில் நிறைக்கும் திடத்தை
ஒவ்வொரு வருடமும் கொடுக்கும் ரமலான்!
சுத்தம் சுகாதாரம் ஒழுக்கம் காத்து – அதை
சுற்றத்திற்கும் ‘வாழ்ந்து கற்பிக்கும் ரமலான்;
உடலின் புத்துணர்ச்சியை ஒவ்வொரு நாளும் கூட்டி
மருத்துவகுண சிறப்பினையும் நோன்பினில் காண்பிக்கும் ரமலான்!
மறைபொருள் இறையென விடாது
உயிர்பொருள் அவனென எண்ணியதில்
‘அல்லா’ எல்லாமுமாய் நின்று அருள்பாலிக்கும் ரமலான்;
ஏற்றத் தாழ்வினை கடந்து – இறையன்பில் கூடிநின்றோருக்கு
மறையின் மகத்துவத்தை புரியவைத்திட்ட ரமலான்!
இல்லார் இல்லாததை மறந்து
இருப்போர் இயன்றதை வழங்கி
உள்ளத்தில்; உலகின், வாழ்வின் சிறப்பென இந்நாளை
கொண்டாடி மகிழும் ‘குதூகல ரமலான்;
கோடான கோடி பேரின் மகிழ்வில் பிறக்கும்
இறைதூதர் பணித்திட்ட ‘கண்ணியப் பெருநாள்; திருநாள்; ரமலான்!
——————————————————————————————————————
வித்யாசாகர்
கவிதை அருமை.
வாழ்த்துக்கள்!
நன்றி.
வாஞ்சையுடன் வாஞ்ஜூர்
வாஞ்சையில் வசியம் செய்தீர் நோன்பின் கவிதையை பெருமை செய்தீர் மிக்க நன்றிகள் சகோதரரே, எம்மக்களும்; என்மக்களே!!
//இல்லார் இல்லாததை மறந்து
இருப்போர் இயன்றதை வழங்கி
உள்ளத்தில்; உலகின், வாழ்வின் சிறப்பென இந்நாளை
கொண்டாடி மகிழும் ‘குதூகல ரமலான்//
மிக மிக உண்மையான வரிகள்.
இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் இருப்பதை கொடுத்து உதவினாலே போதும் என்பதை உணர்த்தும் ‘ஒரு பண்டிகைதான் ரமலான்………….,
மிக அருமை வித்யா…
மதத்தினை, மதமின்றி எடுத்துக் கொள்வோமெனில்,
தவறுகளை கடந்து நல்லதை பார்ப்போமெனில்,
திருப்பும் பக்கங்களில் எல்லாம் நல்லதை எடுத்துக் கொள்ளும் பக்குவம் கொள்வோமெனில்,
மதவெறி அல்லது முரண்பட்ட எண்ணங்களை தூர வைத்து விட்டு அதிலுள்ள நல்லவைகளை எடுத்து பிறருக்கு போதித்து தவறுகளை மக்கள் மனதினின்றும் களைய – மெல்ல எவர் உணர்வும் வலிக்காது
சொல்லவிழைவோமெனில்,
ஒரு புதிய புத்தகம் போல; திருப்பும் பக்கத்திலெல்லாம் மதத்தையும் மெச்சலாம் தான்!
அதில் கால மாறுதலில் ஏற்பட்டுப் போன முரண்; மூடமென சொல்லி ஒரு காலப் போக்கை இகழ வேண்டியுள்ள அல்லது ஒதுக்க வேண்டியுள்ள ஓட்டைகளில்; சுயநலம் பாவிக்கும் பலரால் கோபமும் வெறுப்பும் ஒதுக்கும் மனநிலையும் வளர்ந்து விட்டாலும் இதுபோன்ற நன்னாட்களில் மதத்தின் பிற மேன்மைகள் நம்மை பழைய மனிதர்களாய் இன்றைய அடையாளம் துறந்து கட்டிப் பிடித்துக் கொள்ளவே செய்கிறது.
அதில் மிக சிறப்புக்கள் பலதினை கொண்டு சகோதரத்துவம் வளர்க்கும், ஈகை போதித்து வாகை கொள்ளும், பிறரை ஒரு மனிதராய் ஒரு உயிராய் மட்டும் பார்க்க கற்றுக் கொடுக்கும், மிக சிறப்பு மிக்கதொரு மனஓட்டத்தை மனப் பக்குவத்தை ஏற்படுத்தும் நாள் இந்த ரமலான் சிறப்பு நாள்.
இறையை மனிதனுக்கென என்றில்லாது, எனக்கென என் ஆத்ம சாந்திக்கென பாராட்டி திரிந்த ஒரு காலமது. எந்நேரமும் கடவுள், இயன்றவரை தியானம் என்றமர்ந்த காலமது. காதலின் வலி காற்று தந்த பாடத்தில் மத நல்லிணக்கமும் ஒன்றென மனதில் பதிந்துவைத்த பொழுதுகளது. அப்பொழுதுகளில், மதநல்லிணக்கம் ஏற்படுத்தும், எல்லாம் அவன் செயலென தோழமை பாராட்டும், எம்மதமும் இறைவனுக்கும் சம்மதமே என சக நட்புள்ளங்களுக்கு உணர்த்தும் விதமாக ‘இந்த ரமலான் நாட்களின் மகோன்னதங்களை இரண்டு வருடம் கடைபிடித்து அறிந்துள்ளேன். தூராத்தில் நின்று பார்த்து பலா இனிக்கும் என்று சொல்லவில்லை. அஸ்ஸாமில் இருந்தபோது முழுக்க முழுக்க ஐந்து வேலை தொழுது ஒரு மாதம் முழுதும் ரமலான் விரதமும், ஓமனில் இருந்தபொழுது இரண்டு வேலை மட்டுமே தொழுது முப்பது நாட்கள் விரதமும் என இரண்டு முழு ரமலான் விரதங்களை கடைபிடித்துள்ளேன்.
எல்லாம் மதமும் இறையுணர்வின் நல்ல அதிர்வுகளை தர விழைகின்றன என்பதை உணர்வு பூர்வமாக உணர்ந்த நாட்கள் அது. இடையில் மனிதத்தை தொலைத்த மனிதனுக்கு ‘மதம்; மதமானது அந்தோனி! நிறைய இடங்களில் யாரையுமே நோக முடியாததில், காலமாற்றம் என்று மட்டும் சொல்லி சமாதானம் செய்துக் கொண்டு, பேசுபவர்களின் வாய்பார்க்க வேண்டியுள்ளது.
ஆயினும், வாய் பார்க்கும் நிறைய இடங்களில் கற்றும் கொள்கிறோம் என்பதால், பேசுவதை காட்டிலும் மௌனம் நிறைய இடங்களில் நிறைய போதிக்கிறது. இக்காலத்தின்; கெட்டியான மருந்துதான், மௌனம்!
அருமையான கவிதைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள்
மிக்க நன்றிகள் இஸ்மாயில். வாழ்த்துக்களால் மட்டுமே, (தொலைபேசியில்) பேசுதலில் மட்டுமே நிறையும் மனசு, குடும்பம் விட்டுப் பிரிந்தாலும் அரபு மண்ணில் புழங்கும் எல்லோரையும் குடும்பமென கொண்டு ஆறுதலுறும் இதயங்களில் இந்நாள் சிறக்கட்டும் சகோதரர்!
அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் என் மனம் நிறைந்த புனித ரமலானின் வாழ்த்தும் இறையின் அருளும் நிறைந்து உலக-உயிர்களின் மனதில் அன்பும் அமைதியும் பெருகட்டும்!!