இன்று (10.09.2010) காலை 7.30 ~ 9.00 மணியளவில், தாயகத்தில், நன்றே நடந்துமுடிந்த திருமணத்தை முன்னிட்டு ‘சகோதரன் சுரேஷ் மாசிலாமணி, சகோதரி தேவிபாலா சுரேஷ் தம்பதியருக்கு’ இவ்வாழ்த்துக்கள் கவிதையினால் நிறைகிறது!!
———————-***————————-
அவள் நகம் கடித்து பசியாறு
கதை பேசி நாட்கள் கட
காதலித்து வருடங்களை குடி
கண்ணியமாய் வாழ்ந்து முடி!
சிறு பிரிவுக்கும் வருத்தம் கொள்
பிரியாமை அற்று இரு
நெருக்கத்தில் நோன்பு கொள்
ஈர்ப்பில்; அன்பில்; விருப்பத்தில்; இனைந்து மகிழ்!
கோபம் வைத்துகொள்
தவறை மற
தண்டனை அறு
போதனையை புன்னகையில் செய்!
பூப்போல பவனி வா
புத்துணர்வில் ஆடை உடுத்து
உரிமையை புரிதலில் பாவி
விட்டுக் கொடுக்கும் அவசியமின்றி காதலி!
காத்திரு
காணாத காலத்தை சபி
கண்ணியம் காத்து கண்ணியம் பெறு
கடமையில்; வாழ்வதும் ஒன்றென்று புரி!
பரிசு தா
முத்தத்தின் ஆழத்தை பரிசாக்கு
அன்பின் வார்த்தைகள் வாரி இரை
எதிர்பார்ப்பிற்கு இடம் ஒழி!
உறவினில் ஒற்றுமை வளர்
நீ நான் தவிர்
எல்லாம் ஒன்றென நினை
நாம் என்பதில் குடும்பம் நிறுவி!
நலம் வாழுமளவில் வாரிசு பிறப்பி
போதுமென்று பூரித்து போ
இல்லாமைக்கு ஏங்காதே
இருப்பதில் இன்பம்கொள்;எஞ்சியதை கொடுத்து மகிழ்!
தமிழில் பேசி புழங்கு
தமிழில் மட்டுமே பெயர் வை
தமிழரின் அடையாளம் விடாதிரு
தமிழனாய் பிறந்ததில்; வாழ்வதில்; பெருமிதம் கொள்!
வாழ்க்கை வளமாகும்
இன்பம் உன் இடமாகும்
நலமும் வளமும் உன் வீடு நிறையும்
செல்வங்கள் பதினாறும் உனக்கும் சொந்தமாகும்
ஊருலகம் உம்மிரண்டு பேர் சொல்லும்
நீடு வாழ காலம் தாங்கும்
உமை பெற்ற வயிறு பேருவகை கொள்ளும்
இவ்வனைத்திற்குமாய் என் வாழ்த்துக்களும், இறை அருளும் எப்பொழுதும் இருக்கும்!
———————————————————————————–
வித்யாசாகர்
நண்பர் ஒருவர் இக்கவிதையின் முதல் வரியை படித்து விட்டு அதென்ன அவள் நகம் கடித்து பசியாறு என்று எழுதியுள்ளீர்களே என்று கேட்டார். அதன் அர்த்தம் நகம் தின்று பசியாற்றிக் கொள்வதல்ல.
ஒரு மனைவியின் நகத்தை கணவனோ அல்லது கணவனின் நகத்தை… மனைவியோ கடித்து விளையாடும் தருனமொன்று உள்ளது. அது ஒரு தனை மறந்த தருணம்.
ஒருவர் மடியில் ஒருவர் சாய்ந்து, ஓராயிரம் கதைகள் பேசி, பார்வையினை பருகி, முத்தங்களை தின்று, அவள் கையில் பல ரகசியங்களை தேடி, ரேகை பார்த்து.. நக அழகு பார்த்து.. பார்ப்பதை எல்லாம் ரசித்து ‘லேசாக நகத்தை கடித்து நெருங்கும் ஒரு இறுக்கமான பொழுதின், இதயம் இரண்டற கலந்த ஒரு இன்பத்தின் தருணத்தில், வயிறு உணவு தேடுமா?
அத்தனை அன்பினை இன்பத்தினை கணவன் மனைவிக்கிடையில் அதிகம் கிடைக்கப் பெறுவாய் என்பதையே ‘அவள் நகம் கடித்து பசியாறு என்று எழுதியிருப்பதை, நகம் கடித்து காதலுற்ற தம்பதிகளுக்கு தெரியும்!
ஒரு குடும்பத்தின் அஸ்திவாரத்தில் காதலுக்கும் முக்கிய பங்குண்டு! அதை பறைசாற்றும் வரிகள் இவை!
LikeLike
ஒரு ஆத்திசூடி சொல்லும் அறிவுரைகள்
திருக்குறள் கூறும் நெறிமுறைகள்
காதல் சொட்ட இல்லறம் நடத்த
திறந்த வெளி புத்தகமாய் இந்த கவிதை
எல்லா வரிகளையும் குடித்த பின்னும்
இன்னும் வேண்டும் என்கிறதே மனம்
எப்படி முடிகிறது வித்யா அன்பை கடல் போல பொழிவதால் தான்
மழைபோல அன்பு நமக்கு கிடைக்கும் என்பதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்
//உறவினில் ஒற்றுமை வளர்
நீ நான் தவிர்
எல்லாம் ஒன்றென நினை
நாம் என்பதில் குடும்பம் நிறுவி!//
அற்புதமான வரிகள் எல்லாவற்றையும் மேற்கோள் காட்ட வேண்டுமெனில் பக்கம் நிரம்பி வழியும் ஒவொரு வார்த்தையும் ஓராயிரம் அர்த்தங்கள் அருமை வித்யா உங்களின் எண்ணம் ஈடேற்றட்டும்
LikeLike
மிக்க நன்றி சரளா. நம் மீது மிக்க அன்பும் பற்றும் நம்பிக்கையும் உள்ள சகோதரர் அவர் சுரேஷ். அவருக்கு நம் வாழ்த்தொடும் இவ்வரிகளும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பினேன். என் தம்பிக்கு சொல்வது போல் சொல்ல நினைத்ததில் எழுதியது!
LikeLike