காற்றின் ஓசை (7) வெள்ளைமனத் தமிழரின் கருப்பு வாழ்க்கை!!

இதற்கு முன் நடந்தது..

விடுதியின் வாசலில் காத்திருந்த கூட்டம் மாலனின் வண்டி வந்து நின்றதும் அலறியபடி ஓடி வருகிறது. மாலன் ஏதோ இடர்பாடுணர்ந்து பதட்டமாக இறங்கி அந்த கூட்டம் நோக்கி நடக்கிறார். அக்கூட்டத்தினர் ஓடி வந்து அவர் காலை பற்றி அழுகிறார்கள்..

“சா…………மி………. சாமி நீ தான் சாமி காப்பாத்தணும்…” மொரிசியஸ் வந்து இப்படி தமிழில் ஒரு அலறலை கேட்டால் எப்படி இருக்கும்?!!

“எழுந்திருங்க.. எழுந்திருங்கம்மா எழுந்திருங்கையா.. “

“நீங்க காப்பாத்துறோம்னு சொன்னா தான் எழுந்திருப்போம்.. உங்க வாயால சொல்லுங்க சாமி………”

‘கடவுளே; என்ன கொடுமை இது, இவர்களெல்லாம் இன்னும் எத்தனை தலைமுறை தாண்டி மாறுவார்களோ…. இவர்களிடம் நான் சாமியில்லை என்று எப்படி சொல்லவோ’ என நொந்துக் கொண்டாலும் அதற்கு நேரம் இதுவல்ல என எண்ணிக் கொண்டு அவர்களின் நம்பிக்கை கொண்டே அவர்கள் சிக்கல் தீர்ப்போம் என எண்ணி “சரி எழுந்திருங்கள் என்கிறார்..

மெல்ல அவர்களை அணைத்து அழையை நிறுத்தும் வரை அமைதி காத்து; ஓரளவு விவரம் புரிந்ததும் ‘ஏறுங்கள் வண்டியில் போவோமென அமரவைத்துக் கொள்கிறார். அவர்களின் வீடிருக்கும் திசை நோக்கி அந்த நள்ளிரவில் பயணப் படுகிறார்கள் மாலனும் உடன் வந்தோரும்..

“சொல்லுங்க என்ன ஆச்சு? ஏன் அப்படி கதறுனீங்க?”

“எங்க மகன் இந்த ஊர்ல இருக்க பொண்ணை காதலிக்கிறான்னு அந்த வீட்டுக் காரங்க வந்து அடிச்சி போட்டுட்டாங்க சாமி”

ஐயோவென தலையில் கை வைத்துக் கொண்டார். மரணம் மட்டுமல்ல ஒருவருக்கு சொல்லாமல் வருவது; காதலும் தான். மரணமாவது ஒரு முறை ஓரிடத்தில் தான் கொல்லும், காதல் இப்படித் தான் ஆங்காங்கே.. அவ்வப்பொழுது எல்லோரையும் கொன்று கொண்டே இருக்கிறதென எண்ணி இருப்பார் போல்..

“எவ்வளவு நாளா இந்த ஊர்ல இருக்கீங்கையா..”

“எங்க தாத்தார் காலத்துல வந்தோமுங்க, நானும் இங்க தான் பொறந்தேன்.. எங்க குடும்பம் மொத்தம் இங்க தான் இருக்கு. நாங்க ஒரு பத்து பதினைந்து குடும்பமா அக்கம் பக்கம்னு இருக்கோம்.. எங்களுக்குள்ளவே பொண்ணு கட்டிக்குவோம் எங்களுக்குள்ளவே கொடுத்துக்குவோம்”

“இரண்டு மூணு தலைமுறைக்கு மேல இங்க இருந்தும் இவ்வளவு ஏழ்மையா தெரியறீங்களே”

“ஏதோ பொழப்பு சாமி.. எங்க பொழப்பெல்லாம் ஒரு பொழப்பா? என்னவோ
உயிரு இருக்கேன்னு வாழறோம்..” மாலனுக்கு மிகையாக வலித்தது இந்த வார்த்தை.

“ஏன் இங்க வந்தீங்க.. எப்போ வந்தீங்க தெரியுமா..?”

“அதலாம் எங்க பெரிய தாத்தாவை தாங்க சாமி கேக்கணும்; எங்களுக்கு கேட்டாலும் அதலாம் சொல்ல மாட்டாங்க” வேறு ஒரு பெண்மணி பதில் சொன்னர்.

“என்ன வேலை ஐயா செய்யுறீங்க”

“எங்களை ஏன் சாமி நீங்க வேற ஐயா ஐயான்னுகுட்டு.. மதலைமுத்துன்னு பேர்சொல்லியே கூப்பிடுங்க போதும்..”

“பரவாயில்லைங்கைய்யா எனக்கு அப்படி வராது. நீங்கள் ஒரு மனிதர் என்பதை தவிர எனக்கு வேறெந்த உயர் மதிப்பும் அடையாளமும் வேண்டாம் உங்களை ஐயா என்றழைக்க”

“நீங்க நல்லா தமிழ் பேசுறீங்களே சாமி..’ என்ன சூரி சரிதானே நான் சொல்றது” இன்னொரு பெண்மணி முதல் பேசிய மதலைமுத்துவின் மனைவியை பார்த்துக் கேட்டாள்.

“ஆமா சாமி நல்லா பேசுறீங்கோ; எங்க குடும்பத்துக்கே தமிழ்னா உயிரு பாருங்க.., அச்சு மாறாம பேச சொல்லும் எங்க பாட்டன், பெரிய பாட்டனும் அப்படி தான்..”

“என் தமிழ் என்னம்மா, உங்கள் முன் நானும் தமிழ் எனக்கு உயிர்னு சொல்ல விரும்பல, பேசுவது எனக்கு தொழில். நீங்க பேசுறீங்களே இரண்டு தலைமுறை தாண்டி.. அதே என் தேசத்தின் வாசம் காலத்தினால் கருகாமல்…., அது தாம்மா பெருசு…”

“உண்மையாவா…!!!”

“நாங்கள்லாம் அங்க நிறைய மாறிட்டோம்; கேட்டால், மாற்றம் வாழ்வின் படிக் கட்டுகள் போலென சொல்லிக் கொள்வோம், மேலேறிப் போய் கொண்டே இருப்பது மட்டுமே எங்களுக்கு குறியானது. வந்தவர் போனவர் என இருப்பவரை விட அதிகம் அவர்களே ஆள்கிறார்கள் எங்களை”

“அப்படியா சாமி..!!??”

“ஆம்; நீங்க தான் நம் மூதாதையர் வாசனைய பத்திரமா வைத்திருக்குறீங்க. நாடு விட்டு நாடு வந்தாலும் தமிழர் நம்மூரில் தொலைத்த பண்பாட்டுப் பொக்கிசங்கள் இன்னும்கூட பழமை மாறாம உங்களை போல் வெளிநாட்டுத் தமிழர்களால் நிறைய காக்கப் படுகிறது.., உங்களுக்கெல்லாம் தமிழ் விருப்பமல்ல, அடையாளம், உயிர். எங்களுக்கு தமிழ்னா.. தமிழ்; தமிழ்; அவ்வளவு தான்”

அவர்கள் சாமி சாமிதான் என்று பேசி மெச்சிக் கொண்டார்கள். வீடு வந்தது. மகன் மயங்கிக் கிடப்பதை பார்த்ததும் கூட்டம் ஒருபுறம் அவர் உடன் இருப்பதை மறந்தும் மறுபுறம் அவருக்கு அவர்களின் பாசத்தை காட்டும் பொருட்டும் ஓ..வென கத்தி அலறிக் கொண்டே இறங்கியது..”

மாலன் எல்லோரையும் அமைதி படுத்தி மகனை தூக்கி வண்டியில் கிடத்த சொன்னார். ஏற்றி வண்டியில் படுக்கவைக்க, தன்னோடு உள்ளவர்களிடம் சொல்லி சிறப்பான மருத்துவமனையில் சேர்க்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டார். அதுவரை நான் இங்கேயே இருக்கிறேன் சென்று வாருங்கள் என்று சொல்லி அமர்ந்துக் கொண்டார். மகனின் தாய் தந்தை ஓடி வந்தார்கள்.

“என்ன சாமி இது நீங்க காப்பத்துவன்னு சொன்னீங்களே, இப்போ மருத்துவம் பார்க்கணும்னு போனா என்னாச்சு எதாச்சுன்னு எல்லாம் பிரச்சனை ஆகாதா ஐயா சாமி உண் கால்ல…” மீண்டும் அவர் காலில் விழ, சாஸ்டாங்கமாக மாலன் அவர்கள் காலில் விழுந்தார்.

அவர்கள் அலறி போய் அவரை தூக்க.. சொல்வதை செய்யுங்கள். நான் இங்கு தான் இருப்பேன். அவருக்கு ஒன்றும் ஆகாது, அது என் பொறுப்பு, நான் கடவுளில்லை இங்கேயே அவரை குணப்படுத்த என்று புரியவைக்கும் நேரம் இதுவல்ல. மருத்துவமனை சிக்கலை என் தோழர்கள் பார்த்துக் கொள்வார்கள், நீங்கள் சென்று வாருங்கள் என்று கட்டளை தொனியில் பேச; உடன் வந்தவர் மொரிசியஸ் தீவின் பெரிய ஒரு ஆள் பெயர் சொல்லி, அவர் மூலம் நாங்கள் பேசிக் கொள்வோம் வருந்தாதீர்கள் என்று கூறிவிட்டு அவர்களையும் உடன் அழைத்து செல்கிறார். வண்டி மருத்துவமனை நோக்கி புறப்படுகிறது.

மாலனுக்கு வீட்டில் இருப்பவர்கள் என்னென்ன மரியாதையோ செய்ய முயல்கிறார்கள். அவர் அவர்களை எல்லாம் மறுத்துவிட்டு வீட்டின் பின் புறம் சற்று இருட்டு நோக்கி நடக்கிறார். அந்தளவிற்கு பெரிய வீடெல்லாம் இல்லை அவர்கள் தங்கியிருந்த வீடு. அது ஒரு காடு போன்ற ஆங்காங்கே இடைவெளி விட்டு வாழும் வீடுகளாக நிறைந்த இடம் போன்று தெரிந்தது. வெளிச்சத்திலிருந்து வந்ததால் முழு இருட்டில் அத்தனை பெரிதாக ஒன்றும் விளங்கித் தெரியவில்லை. மெல்ல கண்களின் வழியே வெளிச்சம் படர ஆரம்பித்தது. கிராமமாக இருக்குமென்று எண்ணிக் கொண்டார்.

சற்று தூரம் நடந்து எல்லாவற்றையும் சுற்றி சுற்றி பார்க்கிறார். அவருக்கே ஒரு யோசனை வந்திருக்கும்போல்; அதெப்படி இவர்கள் என்னை தேடி வந்தார்கள் என. உடனே அங்கிருந்து வேகமாக திரும்பி தனக்கு தூரத்தில் நின்றிருந்தவர்களை அழைத்து எப்படி என்னை நோக்கி வந்தீர்கள் என்று கேட்கிறார்.

அடிபட்டு வந்ததும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்திருக்க, யாரோ இப்படி சாமியார் ஒருத்தர் பிரசங்கம் பண்ண இந்தியாவுல இருந்து வந்திருப்பதாகவும், அதும் தமிழர் என்றும், ரொம்ப பெரிய சாமி என்றும் சொல்ல, அரங்கத்தில் தொலைபேசியில் அழைத்து கேட்டதாகவும், அவர்கள் இவ்வாறு இவ்விடம் போகிறார் என்று சொன்னதாகவும், உடனே ஓடி அங்கு வந்ததாகவும் சொல்கிறார்கள்.

மாலன் மனசெல்லாம் என்னவோ அடைத்துப் போயிருந்தது. இங்கும் இத்தனை தூரம் வந்தும் அவதியுறும் தன் இனமானம் நினைத்து போராடிடாத காதல்; தமிழ் வாசம் மாறாத ‘ஏழை தமிழ் குடிகள்; இப்படி தன் உறவுகளையெல்லாம் விட்டு பிழைப்பிற்கென பிற தேசத்தில் வந்து கூட  ஏனோ இப்படி ஒரு ஒதுக்குப் புற வீடும், வெறும் உயிர்வாழ்தலை மட்டும் நடத்தும் முறையும், தன்னை சாமி சாமி என்று அழைக்கும் அழைப்பும்; ஆழ்ந்து சிந்திக்க வைத்தது அவரை.

மனசு கேட்காமல் மீண்டும், வீட்டில் இருந்தவர்களிடம் பூர்வீகம் பற்றி கேட்டுப் பார்த்ததில் ‘அந்த காலத்தில் கோவில் வேலைக்காக வந்துவிட்டதாகவும், கோவில் நாளடைவில் கைமாறி போக வேறு வழியின்றி, கிடைக்கும் வேலைகளை செய்து பிழைப்பதாகவும், தற்போது மொரிசியஸ் நிலப்பிரபுக்களின் வீட்டில் வேலை செய்வதாகவும், சிலர் வண்டி ஓட்டி பிழைப்பதாகவும் சொல்ல, விக்கித்துப் போனது மாலனுக்கு.

வீட்டின் உள்ளே சென்று பார்க்கிறார். அத்தனை நல்ல பாத்திரங்களோ நல்ல துணிமணிகளோ இருப்பதாக தெரியவில்லை. அவர் உள்ளே போனதும் இரண்டு நடுத்தர வயதுள்ள பெண்கள் எழுந்து அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு வெளியே வந்து விடுகின்றனர். மாலனும் சற்று தயங்கி, வந்ததற்கு உள்ளே சென்று பார்த்துவிட்டு வெளியே வருகிறார். அந்த சகோதரிகள் ஆண்களின் உடையை அணிந்து கறுத்த முகமாய் நிற்கிறார்கள். அந்த சட்டை கூட அத்தனை சுத்தமாக இல்லை. ஏதோ இருப்பதை உடுத்திக் கொள்ளும் ஏழ்மை புரிந்து மனதை கசக்கியெடுத்தது.

இன்னும் எந்தெந்த தேசங்களில் என் மக்கள் இப்படி என்னென்ன அவதியெல்லாம் உறுகிறார்களோ என்றொரு அழை; வெள்ளம் உடைத்தாற்போல் வர, மறைக்க மாட்டாமல் விருட்டென முகத்தை திருப்பிக் கொண்டு வெளியே இருட்டு நோக்கி நடக்கிறார் மாலன்..

அடர்ந்த அந்த காடுகளின் இருட்டில் அவர் கண்ணீர் கரைந்து கலந்து ஓ…’வென்றொரு சப்தமாக பீறிடுகிறது.. அருகில் இருப்பவர்களிடம் மறைத்துக் கொண்ட அச்-சப்தத்தை இரவில் கத்தும் சில்வண்டுகள் மட்டுமே கேட்டுக் கொள்கின்றன…
——————————————————————————————————————–
காற்று இன்னும் வீசும், அதன் சை வானை இடித்துக் கேட்கும், வெள்ளை மனத் தமிழரின் கருப்பு வாழ்க்கை – தொடரும்..

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காற்றின் ஓசை - நாவல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to காற்றின் ஓசை (7) வெள்ளைமனத் தமிழரின் கருப்பு வாழ்க்கை!!

 1. mathistha சொல்கிறார்:

  அருமை தொடரட்டும் காத்திருக்கிறேன்…

  Like

 2. வித்யாசாகர் சொல்கிறார்:

  இன்னும் மாலன் வருந்தும் அந்த காதலுக்கான, தமிழரினத்திற்கான, தான் சாமி எப்படியில்லை என்பதற்கான விளக்கத்தை; அடுத்த தொடர்ச்சியில் சொல்வார். கேட்போம்!

  இயலுமாயின் கருத்துக்களை சொல்லுங்கள், பதில் நாவலின் அடுத்த தொடராக விரியட்டும்!

  மிக்க நன்றி உறவுகளே…

  Like

 3. பிங்குபாக்: காற்றின் ஓசை (8) மொரிசியஸில் இன்னும் பத்து நாள்.. | வித்யாசாகரின் எழுத்து பயணம்

 4. மனோஜ் சொல்கிறார்:

  “”மரணம் மட்டுமல்ல ஒருவருக்கு சொல்லாமல் வருவது; காதலும் தான்.”” என்னை மயக்கிய வரிகள்……..

  இன்னும் படித்து கொண்டே இருக்கிறேன்……வாழ்த்துக்கள்!!

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   இன்னும் நிறைய வரிகள் கிடைக்கலாம் மனோஜ்; நிறைய
   யோசித்து வரிகளை கோர்ப்பதால் நிறைய எதிர்ப்பார்ப்புகளும் இருக்கிறது. இது ஒரு நாவல் என்றில்லாமல் என் அனுபவங்களை பாத்திரங்களின் ஊடாக பகிர்ந்து கொள்வதும். ஒரு மனிதன் எக்கால கட்டத்தில் எப்படி எப்படி வாழனும் என்பதை இந்த மாலனின் மூலம் பதிவு செய்து வைப்பாதகவுமே நோக்கமேழுகிறது!

   மிக்க நன்றி மனோஜ்.. தொடர்ந்து நம் எழுத்தை படிப்பவர் நீங்கள், உங்களை போல் படிப்பவர்களின் கருத்துக்களால் ,மேலும் இந்நாவலை செம்மை படுத்துவோம்!

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s